அல்லாஹ்வின் திருமுகம் நாடி
உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
முபாஹலாவிற்கு நானே முதலில் அழைத்தேன். அதை நீங்கள் ஏற்கவில்லை. அதன் பின் நீங்கள் விடுத்த அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன். அதற்காக தேதி குறிக்கப்பட்டு (1.4.18) அந்த தினத்தையும் அடைந்து விட்டோம்.
இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களாக கொள்கைச் சொந்தங்கள், பல்வேறு அமைப்பின் முக்கியஸ்தர்கள், என் நண்பர்கள் என பலரும் இந்த முபாஹலா வேண்டாம் என இடைவிடாது என்னை வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.
உங்கள் அவதூறுகளால் நானும் என் குடும்பத்தாரும் பட்ட அசிங்கங்கள் கொஞ்ச நெஞ்சமல்ல. முன்னே அனுப்பி விட்டு முதுகில் குத்திய உங்கள் துரோகங்களை எப்படி மறப்பேன் என்றே எனக்குத் தெரியவில்லை.
இந்த அளவு பாதிக்கப்பட்ட என்னிடமே விட்டு விலகுங்கள் என்று கூறுவது எந்த ஊர் நியாயம் என்று கேட்டேன்.
ஆயினும் அமைப்பு ரீதியில் பலரையும் திருப்தி வேண்டிய இடத்தில் நீங்கள் இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன்.
யாரையும் திருப்தி படுத்த வேண்டும் என்ற நிர்பந்தமோ, நெருக்கடியோ எனக்கு இல்லை.
அல்லாஹ்வின் திருமுகம் மட்டுமே எனக்குப் போதும்.
மன்னிப்பதே மகத்தானது என்ற இறைவார்த்தைக்கு மதிப்பளிக்க விரும்புகிறேன்.
நான் இவ்வளவு நாளும் பட்ட துன்பங்களை விட அல்தாஃபி ஓடி விட்டான் என்று இனிமேல் வைக்கப் போகும் ஓலமும் ஒப்பாரியும் பெரிதாக இருந்து விடப் போவதில்லை.
ஏதோ சுற்றுலா செல்வதைப் போல நேற்று நீங்கள் பதிவிட்ட போட்டோக்கள் உங்களுக்கு வேண்டுமானால் குதூகலமாக இருந்திருக்கலாம். அதில் கண்ட காட்சிகள் என்னை குமுறி அழச் செய்து விட்டது.
பாவமறியா பாலகர்கள், என் தாயைப் போல மதிக்க விரும்பும் அன்னையர்கள், வாஞ்சையாக தலையை வருடிக் கொடுக்க விரும்பும் தம்பிமார்கள் இவர்களெல்லாம் என்ன பாவம் செய்தார்கள்?
இவர்களுக்கு எதிராக நாம் ஏன் பிரார்த்திக்க வேண்டும்? அதுவும் அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்கும் அளவுக்கு அந்த பிஞ்சு நெஞ்சங்கள் என்ன தவறு செய்தன? என்ற கேள்வி என்னை உலுக்கி விட்டது.
ஆகையால் இதற்கு மேல் இதை நான் தொடர விரும்பவில்லை. இதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்.
அல்லாஹ்விற்காகப் பணிபவர்களை அல்லாஹ் உயர்த்துவான் என்ற நபிமொழி என் விவகாரத்தில் உயிர் பெறும் என்று நம்புகிறேன்.
இழிவும், கண்ணியமும் இறைவனின் கைவசத்திலே இருக்கிறது. இழிவுக்குள் தள்ளப்பட்ட யூசுஃப் நபியை இறைவன் இம்மையிலே உயர்த்தினான். மறுமையிலும் உயர்த்துவான்.
எனக்கும் என் இறைவன் உயர்வளிக்க வேண்டும் என்று இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்.
என் இறைவன் எனக்கு கண்ணியத்தை நாடி விட்டால் அதற்கு எதிராக யார் நினைத்தாலும் ஒரு ரோமக் காலைக் கூட யாராலும் அசைக்க முடியாது என்பதை உறுதியாக நம்புகிறேன்.
இனி உங்கள் பணிகளை நீங்கள் பாருங்கள். என் வேலைகளை நான் பார்க்கிறேன். ஆக்கப்பூர்வமான பணிகள் தொடரவே ஆசைப்படுகிறேன்.
ஷைத்தான் ஏற்படுத்த விரும்பும் வெறுப்பு மற்றும் பகைமையிலிருந்து வெளியே வாருங்கள். சகோதரர்களைப் போல அனைவரையும் அரவணையுங்கள்.
குறிப்பாக விமர்சனங்களில் நேர்மையையும் ஒழுக்கத்தையும் கடைபிடியுங்கள். அவற்றில் எல்லை மீறும் போது யாராக இருந்தாலும் கண்டிக்கத் தயங்காதீர்கள்.
நமக்கு ஆதரவாகத் தானே பதிவிடுகிறான் என்று அதைப் பார்க்காததைப் போல கடந்து செல்லாதீர்கள். நாம் எப்படிப்பட்ட மக்களை உருவாக்கி இருக்கிறோம் என்பதை மீள்பரிசீலனை செய்யுங்கள்.
எல்லா அறநெறிகளையும் காற்றில் பறக்க விட்டு விட்டு, பச்சைப் பச்சையாக, அருவருப்பான வார்த்தைகளை, சொந்த சகோதரர்களுக்கு எதிராக, கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாமல், அதுவும் உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் பொது வெளியில் பயன்படுத்துவது ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாவுக்குமே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து அவற்றை சீர்செய்யுங்கள்.
ஒரு மனிதனின் சில வார்த்தைகளே கிழக்கு, மேற்கு அளவுக்கு தூரமுள்ள நரகத்தில் அவனைத் தள்ளி விடும் என்ற நபிமொழியை மனதிலே கொண்டு அவற்றைத் தடுத்து நிறுத்துங்கள்.
அவற்றைத் தடுக்காமல் நாம் ஜமாஅத் நடத்தி என்ன பயன்?
தெரிந்தோ தெரியாமலோ என் பயணப் பாதையை நீங்களே முடிவு செய்து கொடுத்து விட்டீர்கள். காலம் கனிகையில் அல்லாஹ் அதை மெய்யாக்குவான்.
உங்களுக்கிணங்க கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் என் மீது நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஆட்களை விட்டோ சேற்றை வாரி இறைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
ஒருவேளை அப்படி நடந்தால் தனியனாக நின்றாலும் அல்லாஹ்வின் உதவியுடன் அவை அனைத்தையும் எதிர்த்து நின்று முறியடிப்பேன். இப்போது அதை நீங்கள் உணர்ந்தும் இருப்பீர்கள்.
எதிர்காலத்தில் என்னைப் பற்றி எந்த செய்தி பரவினாலும் அவற்றை என்னிடம் கேட்டு உறுதி செய்து கொண்டு முடிவெடுங்கள். அதற்கான முழு உரிமை உங்களுக்கு உண்டு.
யூகங்களைத் தவிர்த்து விடுங்கள். யூகங்கள் தான் நம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது. இனிவரும் நாட்களில் ஷைத்தானுக்கு இடம் கொடுக்காமல் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.
ஒரே குடும்பமாக வாழ்ந்த நாம், ஒருசில மாதங்களில் இப்படியொரு விரும்பத் தகாத இடத்திற்கு வந்து விட்டோம்.
உங்களில் ஒருவனாகவே எண்ணிக் கொண்டிருப்பவனை கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளி விட்டீர்கள். நீங்கள் என்னை அன்னியனாகப் பார்த்தாலும் நான் உங்களை அப்படிப் பார்க்கவில்லை. எல்லாம் இறைவனின் நாட்டம் காலம் கடந்து விட்டது. அல்லாஹ் விதித்தது நம்மை வந்து அடைந்தே தீரும்.
உங்களுக்கு முன் நான் மரணித்தால் என் ஜனாஸாவில் நீங்கள் பங்கேற்க வேண்டும். நீங்கள் முந்தி விட்டால் உங்களின் இறுதிப் பிரார்த்தனையில் நான் பங்கேற்க விரும்புகிறேன்.
உங்கள் மனைவி மக்களுடன் திருச்சிக்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். உங்கள் பயண சிரமத்திற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் பதில் உரைகளில் கடினமான சொற்களை நான் பயன்படுத்தியும் இருக்கிறேன். அது தேவை தான் என என் அறிவு சொன்னாலும் அதற்காகவும் உங்களிடம் நான் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களின் பிரார்த்தனைகளில் என்னையும் என் குடும்பத்தாரையும் மறந்து விடாதீர்கள். உங்களுக்காக நானும் பிரார்த்திக்கிறேன்.
எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்திவிட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன். நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் 59 : 10
அன்புடன் கொள்கைச் சகோதரன்
P.M அல்தாஃபி
No comments:
Post a Comment