மௌலவி யூனுஸ் தப்ரீஸ்.
சகோதரர் அல்தாபியின் மீது எடுக்கப்பட்ட விபச்சார குற்றச்சாட்டு குர்ஆன் ஹதீஸின் படி சரியானதா அல்லது பிழையானதா என்பதை சுட்டிக் காட்டுவதற்காக இதை எழுதுகிறேன்.
மார்க்க சட்டங்களை வைத்து இந்த முடிவெடுக்கப்பட்டதால் இந்த முடிவு பல கோணங்களில் நேரடியாக குர்ஆனுக்கும், ஹதீஸூக்கும் முரணகாக எடுக்கப்பட்ட பிழையான முடிவு என்பதை பின் வரும் செய்திகளை முன் வைத்து விளக்க உள்ளேன்.
சுட்டிக்காட்டப்படும் செய்திகள் சரியாயின் அதை ஏற்றுக் கொண்டு தங்களது பிழைகளை TNTJ நிர்வாகம் அல்லது அதன் உறுப்பினர்கள் திருத்திக் கொள்ள வேண்டும்.
பிழையாயின் அழகிய முறையில் சுட்டிக் காட்டவும்.
அதே நேரம் பிழைகளை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் வழமை போன்று ஆபாசமான, அருவருப்பான,வார்தைகள் மூலம் வசைப்பாடுதல், அல்லது கேலி, கிண்டல் செய்வீர்களாயின் அவரவரின் தவறான வார்த்தை கனத்திற்கு ஏற்ப அல்லாஹ்வே தண்டனை தர போதுமானவன் அல்லாஹ்வும் சம்பந்தப்பட்டவர்களும் பார்த்துக் கொள்ளுங்கள்.
நான்கு சாட்சிகள்…
ஒருவரின் மீது விபச்சார குற்றச் சாட்டு சுமத்தினால் சுமத்தியவர் நான்கு சாட்சிகளை கொண்டு வர வேண்டும் என்பதை படைத்தவன் குர்ஆன் மூலம் நமக்கு முன் வைக்கிறான்.
“எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (24-04)
இந்த வசனத்தின் படி யார் விபச்சார குற்ற சாட்டை கொண்டு வருகிறாறோ அவர் நான்கு சாட்சிகளை கொண்டு வர வேண்டும் என்பது இறை சட்டமாகும்.
இப்போது அல்தாபி விடயத்தில் tntj நிர்வாகம் இந்த குர்ஆன் வசனத்தின் படி நடந்து கொண்டார்களா என்றால் கிடையாது.
மாறாக தனது மனோ இச்சையின் அடிப்படையில் முடிவு செய்து உலகத்திற்கு அறிவித்தார்கள்.
இப்படி சொல்லும் போது சில முக நூல் நண்பர்கள் ஜூஹைனா கோத்திரத்து பெண்மணியின் செய்தியை எடுத்துக் காட்டி tntj செய்ததை சரி காண்கிறார்கள்.
உண்மையில் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனத்தையும், ஹதீஸையும் சரியாக புரிந்து கொள்ளாததினால் பிழையான முடிவையும் சரி காண்கிறார்கள்.
முஸ்லிம் 3501ல் வரக் கூடிய ஜூஹைனா கோத்திரத்து பெண் சம்பந்தப்பட்ட ஹதீஸூக்கும் அல்தாபி மீது விபச்சார குற்றச்சாட்டு சுமத்தி எடுக்கப்பட்ட முடிவுக்கும் ஒரு துளி கூட சம்பந்தமே கிடையாது.
ஏன் என்றால் ஜூஹைனா கோத்திரத்து பெண் நான் விபச்சாரம் செய்து விட்டேன் என்று, தானே முன் வந்து சொல்லி எனக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று கூறுகிறாள். அதனால் தான் அந்த பெண் மணிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது போல பல ஹதீஸ்கள் உள்ளன.
இங்கு அல்தாபியுடன் சம்பந்தப்பட்ட பெண் நாங்கள் விபச்சாரம் செய்து விட்டோம் என்று அல்தாபியையும் சேர்த்து குற்றம் சொல்கிறார்.
ஆனால் அல்தாபி அதை மறுக்கிறார். அல்தாபி மறுக்கிறார் என்றால் அந்த பெண் நான்கு சாட்சிகளை கொண்டு வந்திருக்க வேண்டும்.
நான்கு சாட்சிகளை கேட்பதற்கு இது முஸ்லிம் நாடு கிடையாது. ஆகவே நாங்கள் நான்கு சாட்சிகளை கொண்டு வாருங்கள் என்று அந்த பெண்ணிடம் சொல்ல எந்த தேவையும் கிடையாது. என்று சொல்வார்களேயானால், விசாரணைகள் இரண்டு பக்கத்திலும் நீதியாகவும், நேர்மையாகவும் நடந்திருக்க வேண்டும்.
ஆனால் முழுக்க, முழுக்க ஒரு தலை பட்சமான விசாரணையின் முடிவாகவே காணப்படுகிறது. இங்கு விசாரணை என்ற பெயரில் அல்தாபிக்கு அநியாயம் செய்யப்பட்டிருக்கிறது.
அல்லது இந்த விசாரணையை tntj நிர்வாகம் கையில் எடுத்திருக்க கூடாது. நீங்கள் சட்ட ரீதியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அந்த பெண்ணை அனுப்பி இருக்கலாம். இந்த அளவிற்கு பூகம்பமாக உலகம் மழுவதும் சீரழிக்கப்பட்டிருக்காது.
இந்த பெண் சொன்னதை மட்டும் அப்படியே நம்பி செய்தியை பரப்பியது மட்டுமல்ல, அதை உண்மை படுத்தி முபாஹலாவிற்கும் இறங்கி விட்டார்கள்.
ஒரு செய்தி வந்தால் அதை எப்படி நாம் உண்மை படுத்த வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு சொல்லித் தருகிறான்.
“ முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.(49-06)
பொதுவான ஒரு ஆளாக இருந்து நிதானமாக சிந்தியுங்கள். நிர்வாகத்திற்காகவோ, தனி மனிதனுக்காகவோ என்றல்லாமல், அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக என்று சிந்தியுங்கள்.
மேற்ச் சென்ற குர்ஆன் வசனத்தின் படி அந்த பெண் கொண்டு வந்த செய்தியை ஒரு தலை பட்சமாக மட்டும் விசாரித்து முடிவெடுத்தது இந்த(49-06) குர்ஆன் வசனத்திற்கு நேரடியாக மாற்றம் செய்ததாக ஆக மாட்டாதா ?
ஏன் இந்த அவசரம் ?
நீங்கள் எடுத்த அவசர முடிவினால் ஒருவர் அநியாயத்திற்கு ஆளாகி இருக்கிறாரே ?
உலக விசாரணை…?
ஒருவர் எந்த குற்றச் சாட்டை கொண்டு வந்தாலும் இரண்டு பக்கத்திலும் அதை தீர விசாரித்து விட்டு தான் உலக நீதி மன்றங்களிலாக இருக்கலாம், அல்லது காவல் நிலையங்களிலாக இருக்கலாம். அல்லது பஞ்சாயத்துகளிலாக இருக்கலாம் தீர்ப்பளிப்பார்கள்.
ஆனால் குர்ஆன், ஹதீஸ் என்ற பெயரில் அதை விட மோசமான விசாரணை செய்து முடிவெடுத்துள்ளார்கள் என்றால் பொது மக்களே ! சிந்தியுங்கள்.
நாங்கள் அதை நம்புகிறோம்…?
அந்த பெண் அல்தாபி மீது வைத்த குற்றச்சாட்டை நாங்களும் உறுதியாக நம்புகிறோம் என்று முபாஹலாவின் போது கலீல் ரஸூல் பகிரங்கமாக சொன்னதின் மூலம் tntj நிர்வாகம் வரலாற்று தவறை பதித்து விட்டது.
முதலாவது விசாரித்து முடிவெடுத்த முறையே பிழையானது. இரண்டாவது (அந்த ஒரு பக்க விசாரணையின் முடிவை) அதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றால், இது எந்த அடிப்படையில் இவர்கள் முடிவெடுத்தார்கள். ?
அவதூறுக்கான குற்றமாகாதா ?
அல்தாபி மறுக்கும் பட்சத்தில் இவர்கள் எப்படி உறுதியாக நம்புகிறோம் என்று சொல்ல முடியும்.?
ஒன்று இஸ்லாமிய முறையில் விசாரணை இருந்திருக்க வேண்டும். அல்லது உலக அமைப்பில் சரி விசாரணை இருந்திருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அல்தாபியிடம் இந்த பெண் சொன்ன குற்றச் சாட்டைப் பற்றி எந்த விசாரணையும் செய்யாமல் தவறான முடிவெடுத்து, முபாஹலாவிற்கு சென்றது தன்னிச்சையான கடும் போக்கு என்பதை பொது மக்களே ! நீங்கள் நிதானமாக சிந்தியுங்கள்.
மீடியாக்களில் பரப்பியது…?
முபாஹலாவின் போது அந்த பெண் சொன்னதையும், நீங்கள் இது குறித்து மறுத்ததையும் நாங்கள் அப்படியே பரப்பினோம் என்று கலீல் ரஸூல் சொல்கிறார்.
இஸ்லாத்தின் பார்வையில் இப்படியான பாவங்களை பிறருக்கு மத்தியில் பரப்ப முடியுமா ? அதுவும் உறுதி செய்யப்படாத பாவம் ?
இங்கும் குர்ஆன், ஹதீஸூடைய, உபதேசங்களை புறக்கணித்தே நடந்துள்ளார்கள்.
தான் செய்த பாவத்தை கூட பிறருக்கு மத்தியில் சொல்லக் கூடாது என்பதை வலியுறுத்தும் மார்க்கத்தில், உறுதி செய்யப்ப்படாத பிறரின் பாவத்தை எப்படி பரப்பினோம் என்று சொல்ல முடியும். ?
பிறரின் குறைகளை, மறையுங்கள், தனக்கு செய்த தவறுகளை மன்னியுங்கள் என்று கூறக் கூடிய மார்க்கத்தில் இருந்து கொண்டு எப்படி இதை சரி காண முடியும்.?
அந்த பெண் சொன்னதையும், நீங்கள் மறுத்ததையும் நாங்கள் பரப்பினோம் என்று கூறி விட்டு, அந்த பெண் சொன்னதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றால்.நீங்களே உங்களுக்கு முரண் படுகிறீர்கள்.
அந்த இரண்டு பேரின் வாக்கு மூலத்தை மட்டும் தான் பரப்பினோம் என்றால் நீங்கள் எப்படி அல்தாபி விபச்சாரம் செய்தார் என்று உறுதியாக நம்ப முடியும்.?
நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று சொல்ல முடியாதே ?
சற்று நிதானமாக சிந்தியுங்கள்.!
என் மீது நீங்கள் விபச்சார குற்ற சாட்டை சுமத்தி, அதை அவதூறாக பரப்பினீர்கள் என்பது தான் அல்தாபி உங்கள் மீது வைக்கும் குற்றச் சாட்டாகும். பின் வரும் குர்ஆன் வசனத்தை சற்று ஆழமாக கவனியுங்கள்.
“எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.(24- 19)
எனவே இப்படியான பாவங்களை பரப்பக் கூடாது என்பது அல்லாஹ்வுடைய கட்டளையாகும் அதையும் மீறி நீங்கள் சொன்னதை தான் நாங்கள் பரப்பினோம் என்றால், மார்க்கத்தை விட்டு, விட்டு, மனோ இச்சைகளுக்கு அடிமையாகும் நிலையை காண முடிகிறது.
மறைக்க வேண்டிய பாவங்களை மக்களுக்கு மத்தியில் கொண்டு சென்றது எவ்வளவு பெரிய கொடிய பாவம் என்பதை நடு நிலையாளர்கள் நிதானமாக சிந்தியுங்கள்.
இந்த விடயத்தையே இவர்களுக்கு சரியான முறையில் அணுக தெரிய வில்லை என்றால் எப்படி ஸஹீஹான ஹதீஸ்களை அணுகி மறுத்திருப்பார்கள் என்பதை சிந்தியுங்கள். அல்லாஹ் போதுமானவன்.