? எங்கள் ஊரில் மத்ஹபு அடிப்படையில் தொழுகை நடத்துகின்றனர். அவர்களைப் பின்பற்றி தொழும் போது நாம் அவர்களைப் போன்றுதான் தொழவேண்டுமா? அல்லது நபி வழியில் தொழவேண்டுமா? அல்லது வீட்டில் தனியாகத் தொழுது கொள்ளலாமா?!
''(இமாமாக நியமிக்கப்படுபகின்ற) அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும். அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி 694
இந்த ஹதீஸின் அடிப்படையில் இமாமத் செய்பவர் இணை வைக்காமல் இருந்தால் அவருக்கப் பின் நின்று தொழுவதற்குத் தடை இல்லை. இமாமுடைய தவறுகள் குறித்து மஃமூம்களை அல்லாஹ் கேட்கமாட்டான். ஆனால் அதே சமயம் தவறு செய்தாலும் பின்பற்றித் தொழுபவர்கள் நபிவழிப்படியே தொழ வேண்டும் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
மேலும், 'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ! அவ்வாறே நீங்கள் தொழுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் நம்முடைய தொழுகை முறையை மாற்றிக் கொள்வதற்கு நமக்கு அனுமதி இல்லை.
இறை மறுப்பாளர்களையோ அல்லது இணைவைப்பவர்களையோ முஸ்லிம்கள் தங்களது பொறுப்பாளர்களாக - 'வலீ'யாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் கூறுகின்றான். (பார்க்க அல்குர்ஆன் 3:28, 4:89, 4:139, 4:144, 5:51, 5:80,9:23) எனவே இமாம் இணைவைப்பவராக இருந்தால் அவரைப்பின்பற்றித் தொழக்கூடாது. பள்ளியிலேயே இரண்டாவது ஜமாஅத் நடத்தியோ, தனியாகவோ தொழுது கொள்ளலாம். அதற்கும் வழியில்லை என்றால் வீட்டில் தனியாகத் தொழலாம்.
ஏகத்துவம் 2004 செப்டம்பர் கேள்வி பகுதியிலிருந்து எடுத்தெழுதி அனுப்பியவர் முஃமின் பில்லாஹ்
No comments:
Post a Comment