Monday, July 10, 2006

புண் பட வேண்டுமா? பண்பட வேண்டுமா?


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
சுன்னத் ஜமாஅத்தினரை பின் பற்றி தொழக் கூடாது என்றால் அவர்கள் அறுக்கும் ஆடு, மாடு, கோழிகளை சாப்பிடுவது கூடுமா?

தர்கா, தரீகா கொள்கை உடையவர்களை பின்பற்றி தொழக் கூடாது. சுன்னத் ஜமாஅத் பெண்களை திருமணம் செய்யக் கூடாது. நமது கல்லூரியில் பயிலாத பெண் தவ்ஹீது ஜமாஅத்தைச் சார்ந்த பெண்ணாக இருந்தாலும் அந்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள் என்பன போன்ற நூதன பிரச்சாரங்கள் பற்றி நபி வழியா? நமது பாலிஸியா? ஏன்ற தலைப்பில் நமது கருத்தை வெளியிட்டிருந்தோம். நாம் வெளியிட்டிருந்த அந்த ஆக்கம் முஸ்லிம்களின் வரவேற்பை பெற்றிருந்தாலும் முஸ்லிம்கள் என்று சொல்வதில் தங்களுக்கு பெருமை இல்லை என்று கருதக் கூடிய சிலரது விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. அந்த விமர்சனங்கள் 4 வகையாக உள்ளன.
1. கடுமையான வார்த்தைகள் பயன் படுத்தப் பட்டுள்ளது.
2. பெயர் குறிப்பிடபடாவிட்டாலும் குறிப்பிட்ட ஒரு சாராரை குறி வைத்தே விமர்சிக்கப்பட்டுள்ளது.
3.தனிப்பள்ளி என்று மேலப்பாளையம் தக்வா பள்ளியை விமர்சிக்கப்பட்டுள்ளது.
4.என்ன இருந்தாலும் முஸ்ரிக்குகள் முஸ்ரிக்கள்தான் அவர்கள் பின்னால் எப்படி தொழ முடியும்?. இவைதான் அந்த விமர்சனங்கள்.

புண் பட வேண்டுமா? பண்பட வேண்டுமா?

இதில் முதலாவதான கடுமையான வார்த்தைகள் என்பது உண்மைதான். ஆனால் அவை மாற்று கருத்துடையவர்களை விமர்சிக்க நாம் பயன்படுத்தியவைதான். எனவே மாற்று கருத்துடையவர்கள் இந்த மாதிரி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தது தவறு என்பதை நாம் அனைவரும் இதன் மூலம் உணர்ந்து திருந்த வேண்டும். அந்த அடிப்படையில் இந்த வெளியீட்டில் அந்த கடுமையான வார்த்தைகளை முடிந்தவரை நேரடியாக பயன்படுத்தாமல் மீண்டும் நாம் உணரும் வகையில் இந்த இடத்தில் மாற்று கருத்துடையவர்களை நாம் எப்படி விமர்சித்திருந்தோம் என்பதை நினைவூட்டிடும் வகையில் அந்த விமர்சனங்கள் இடம் பெறும். இனி பிறரை நாம் இது மாதிரி விமர்சிக்கக் கூடாது விமர்சித்தால் அவர்களது மனமும் இப்படித்தான் புண்படும். நமது நோக்கம் அவர்கள் பண்பட வேண்டுமா? அவர்கள் மனம் புண் பட வேண்டுமா? என்பதை இந்த இடத்தில் ஒவ்வொருவரும் சிந்தித்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நமது இந்த நிலைப்பாடு. இரண்டாவதாக உள்ள குறிப்பிட்ட ஒரு சாராரை குறி வைத்தே விமர்சிக்கப்பட்டுள்ளது என்பது. அதில் நாம் அந்த கருத்தைக் கூறக் கூடிய எல்லார் நிலைகளையும்தான் விமர்சித்து இருந்தோம். இருந்தாலும் நமது அன்றைய நிலை அந்த எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலையில் அந்த எண்ணம் ஏற்படாது என்று நம்புகிறோம்.

முஸ்ரிக்குகள் முஸ்ரிக்கள்தான்.

மூன்றாவதாக உள்ள மேலப்பாளையம் தக்வா பள்ளி. இது பற்றி நமது நிலைப்பாட்டை த.மு.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மேலப்பாளையம் காரணமா? என்ற தலைப்பிலான வெளியீட்டிலேயே விளக்கி விட்டோம். முதலில் பிரிவுப் பள்ளி என்று எண்ணி எதிர்த்தோம். இனாயதுல்லாஹ் அவர்கள் அளித்த விளக்கத்திற்குப் பின் அந்த பள்ளி தேவைதான் என்பதை புரிந்து கொண்டோம். அதற்கு உதவுமாறும் கூறுகிறோம். நான்காவதாக உள்ள முஷ;ரிக்குகள் முஷ;ரிக்கள்தான் என்பதில் மாற்று கருத்து இல்லை. யாரை முஷ;ரிக்குகள் என்று புறக்கணிக்கச் சொல்கிறார்கள் என்பதில்தான் கருத்து வேறுபாடு உள்ளது. கருத்து வேறுபாடு நமக்கு மட்டும் அல்ல. யாரையெல்லாம் முஷ;ரிக்குகள் என்று அடையாளம் காட்டி அவர்களை பின் பற்றி தொழக் கூடாது என்கிறார்களோ அந்த விஷயத்தில் அவர்களே வேறுபடுகிறார்கள். அவர்கள் கருத்துக்கு அவர்களே முரண்படுகிறார்கள். எப்படி முரண்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும் முன் மீண்டும் ஒரு நினைவூட்டல்.

அவர்கள் பின்னால் நின்று தொழ உரிமை கோரி போராடினோம்.

குர்ஆன் ஹதீஸ்கள் மட்டும்தான் மார்க்கம் என்ற பிரச்சாரம் துவங்கியதும் சிறுபான்மையாக இருந்த நாம் பள்ளிக்கு வரக் கூடாது என தடுக்கப்பட்டோம். 4 மத்ஹபுகளை பின் பற்றாதவர்கள் இங்கு தொழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். சுன்னத் ஜமாஅத் கொள்கைகளுக்கு முரணானவர்கள் இங்கு தொழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இப்படி வித விதமாக போர்டுகள் போட்டுத் தடுத்தார்கள். அப்பொழுதெல்லாம் அவர்கள் தரீகா, கபுர்தர்கா, பஞ்சா, கத்தம் பாத்திஹாக்களுடன் சுன்னத் ஜமாஅத் எனும் பெயரில் என்ன செய்தாலும் அவர்கள் பின்னால் நின்று தொழ உரிமை கோரி போராடினோம்.
நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோம்.

நமக்கு சற்று மக்கள் பலம் சேர்ந்ததும் தனிப் பள்ளிகள் கட்டினோம். இது பற்றிய சிலவற்றை முந்தைய வெளியீட்டிலும் நினைவூட்டிருந்தோம். மேலும் சிலவற்றை இங்கு நினைவூட்டிக் கொள்வோம். தனிப் பள்ளிகள் கட்டி சமுதாயத்தை கூறு போடலாமா? என்ற கேள்வி கட்டிய நமக்குள்ளேயே கூடுமா கூடாதா என்ற சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளிக்கு வரக் கூடாது என தடுக்கப்படுவதால்தான் தனிப்பள்ளி காண்கிறோம் என்றும் இதை பள்ளி என சொல்லக் கூடாது பிரச்சார பணிகளுக்கான மர்க்கஸ் என்றுதான் சொல்ல வேண்டும். அதில் வக்து வந்ததும் தொழுகிறோம். அதுவும் அவர்கள் பள்ளிக்கு வரக் கூடாது என்று தடுப்பதால்தான் நமது மர்க்கஸ்களில் தொழுகிறோம். தடை நீங்கி விட்டால் அங்குதான் போய் தொழுவோம். இவை குர்ஆன் ஹதீஸ் பிரச்சார மர்க்கஸ்களாகவே செயல்படும் என்று கூறிக் கொண்டோம். சரியாகச் சொல்வதென்றால் நமக்கு நாமே சமாதானம் கூறி சமாளித்துக் கொண்டோம். நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோம்.

காபிர்கள்.

நமது இந்த நிலைப்பாடுதான் நம்மை சிறிது சிறிதாக மாற்றியது. ஷpர்க் என தெரிந்து மவ்லிது ஓதுபவர்களை பின் பற்றி தொழக் கூடாது. ஷpர்க் என தெரியாமல் மவ்லிது ஓதுபவர்களை பின் பற்றி தொழலாம். மவ்லிது விளங்கி ஓதினாலும் விளங்காமல் ஓதினாலும் மவ்லிது ஓதுபவர்களை பின் பற்றி தொழக் கூடாது. தர்கா வழிபாடுடையவர்களை பின் பற்றி தொழக் கூடாது. இப்படியாக நிலைப்பாடுகள் மாறி மாறி அவர்கள் இணை வைக்கும் முஷ;ரிக்குகள். ஷpர்க் வைக்கும் இமாம்கள் என்று கூறி இப்பொழுது தெளிவாக காபிர்கள் என்று சொல்லி விட்டார்கள் என்றும் அறிகிறோம்.

அவர்கள் முஸ்லிம்கள் இல்லை.

தன்னை முஸ்லிம் என்று சொல்லுபவரை காபிர் என்று சொல்லலாமா? என்ற எதிர் கேள்விகள் வந்த பின் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று சிலர் ஜகா வாங்கி விட்டதாகவும். காபிர்களே என்பதில் சிலர் உறுதியாக இருப்பதாகவும் அறிகிறோம். காபிர்கள் என சொல்லி விட்டது செவி வழிச் செய்தியாகவே உள்ளதால் எந்த ஊரில் யார் சொன்னார்கள் என்ற விபரத்தை விட்டு விடுவோம். யாருமே காபிர்கள் என்று சொல்லவில்லை என்றே வைத்துக் கொள்வோம். ஒரு சாராரை முஷ;ரிக்கள் என்று கூறி அவர்களை பின் பற்றி தொழக் கூடாது என்றால் என்ன அர்த்தம் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதுதானே. காபிர் என்று வார்த்தையால் சொல்லாமல் செயலால் காட்டுவதுதான் ஒரு சாராரை பின் பற்றி தொழாமல் இருப்பது.

தவ்ஹீது பாய்யா தவ்ஹீது அல்லாத பாயா.

இணை வைக்கும் இமாமை பின் பற்றி தொழக் கூடாது, தொழுதால் நமது தொழுகை கூடாது என்கிற இந்த கொள்கை உடையவர்கள் கூற்றுப்படி அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று ஆகி விடுகிறது. அவர்கள் பின்னால் நின்று தொழாத, தொழக் கூடாது என்கிற தவ்ஹீதுவாதிகள் என்போர் அந்த இமாம்கள் அறுக்கும் ஆடு, மாடு, கோழிகளைத்தான் சாப்பிடுகிறார்கள். வெளியூர் ஹோட்டல்களில் சாப்பிடச் சென்றால் யார் அறுத்தது என கேட்கிறோம். இன்ன பள்ளி இமாம் அல்லது முஅத்தின் அறுத்தார் அல்லது பாய்தான் அறுத்தார் என்பார்கள். எந்த பாய் தவ்ஹீது பாய்யா தவ்ஹீது அல்லாத பாயா என்று இந்த கருத்துடையவர்கள் கேட்பதில்லை. பாய் அறுத்ததா சரி கொண்டு வா பாயாவை என்றுதான் ஒரு பிடி பிடிக்கிறார்கள்.

அவர்கள் கருத்துக்கு அவர்களே முரண்படுகிறார்கள்.

ஹோட்டல்காரர்கள்; குறிப்பிடும் இமாம் முஅத்தின்கள் கண்டிப்பாக தர்காக்களுக்கும் கபுர்களுக்கும் வீடுகளுக்கும் சென்று பாத்திஹா ஓதக் கூடியவர்களாகத்தான் இருப்பார்கள். இதை தெரிந்து கொண்டுதான் அதாவது இவர்கள் யாரை பின்பற்றி தொழக் கூடாது மக்கா காபிர்களுக்கு ஒப்பான பக்கா முஷ;ரிக்குகள் என்று கூறுகிறார்களோ அவர்கள் அறுத்ததுதான் என்று தெரிந்து கொண்டுதான் சாப்பிடுகிறார்கள். இதுவும் அவர்கள் கருத்துக்கு அவர்களே முரண்படுகிறார்கள் என்பதற்குரிய ஆதாரங்களில் ஒன்றாகும்.

நமது தரப்பின் வருவாய்க்காக.

அவர்கள் இணை வைப்பவர்கள் முஷ;ரிக்குகள் அவர்கள் அறுக்கும் ஆடு, மாடு, கோழிகளை சாப்பிடக் கூடாது என்று இதுவரை எந்த தவ்ஹீது அணியும் சொல்லவில்லை. எப்பொழுது சொல்வார்கள். தவ்ஹீதுவாதிகளோ அல்லது தவ்ஹீது இயக்கங்களோ ஆடு, மாடு, கோழிக் கறிக் கடைகள் தனியாக துவங்கியபின் அல்லது தவ்ஹீது பள்ளி இமாம் முஅத்தின்களின் வருவாய்க்காக ஆடு, மாடு, கோழிகள் அறுக்கும் வேலையில் தவ்ஹீது பள்ளி இமாம் முஅத்தின்கள் ஈடுபட்ட பின்தான் ஷpர்க் வைக்கும் இமாம்கள் அறுக்கும் ஆடு, மாடு, கோழிகளை சாப்பிடக் கூடாது என்பார்கள் என்று சொல்லலாம் அல்லவா. இப்படித்தானே கடந்த காலங்களில் அவர்களை விமர்சித்தோம். நமது தரப்பின் வருவாய்க்காக என்று அப்படியெல்லாம் சொல்ல மாட்டோம் என்பது என்ன நிச்சயம்.

அது கொள்கை ரீதியான எதிர்ப்பா?

கொள்கையை நிலைநாட்ட வேண்டும் என்பதைவிட நமது தரப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற நிலைதான் ஆரம்பம் முதல் நம்மிடம் இருந்து வந்துள்ளது. 1986 முதல் 87 வரையில் அந்நஜாத்தைப் படிக்கக் கூடாது என்பதற்காக சுன்னத் ஜமாஅத்தவர்கள் கடுமையான எதிர்ப்புகளை மேற்கொண்டார்கள். சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரணானது என நம்பியதால் அதை அவர்கள் கொள்கை ரீதியாக எதிர்த்தார்கள். 1987 க்குப் பிறகு அதே அந்நஜாத்தை குர்ஆன் ஹதீஸ்கள்தான் என்ற கொள்கையுடையவர்களில் பெரும்பாலானவர்கள் புறக்கணித்தோம். அது கொள்கை ரீதியான புறக்கணிப்பா? நேற்று வரை குர்ஆன் ஹதீஸ் கொள்கையை எழுதி வந்த அந்நஜாத் அதிலிருந்து மாறி விட்டது என்று கூறியா புறக்கணித்தோம்? முதலில் புறக்கணிப்பு என்ற நிலையிலிருந்த நாம் காலப் போக்கில் அதை படிக்கக் கூடாது என்று எதிர்க்கக் கூடியவர்களாக ஆனோhம். அதுவும் கொள்கை ரீதியான எதிர்ப்பா?

இது கொள்கை ரீதியான புறக்கணிப்பா?

அடுத்து புரட்சி மின்னல் என்ற பத்திரிக்கையை எடுத்துப் பிடித்தோம். 1987 முதல் 88 வரை இந்த புரட்சி மின்னல் நிலைப்பாடு இருந்தது. பிறகு அந்நஜாத்தை பகிரங்கமாக புறக்கணித்த மாதிரி புறக்கணிக்க முடியாமல் புரட்சி மின்னல் என்ற பெயர் சரி இல்லை என்று கூறி புறக்கணிக்க ஆரம்பித்தோம். அது அல் முபீன் என பெயர் மாற்றப்பட்ட பிறகும் புறக்கணித்தோம். இது கொள்கை ரீதியான புறக்கணிப்பா? அடுத்து அதி தீவிர முயற்சி எடுத்து அல்ஜன்னத் பத்திரிக்கையை பரப்பும் பணியை மேற்கொண்டோம். இதில் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்க 2 அணிகளும் பரங்கிப் பேட்டையில் உள்ள ஒரு மரத்தடியில் நின்று பேசினார்கள். இதற்கு மரத்தடி ஒப்பந்தம் என்ற பெயரும் வைத்துக் கொண்டோம்.

அது மட்டும் என்ன கொள்கை ரீதியானதா?

உணர்வு வார இதழ் வந்த பின் உணர்வு விற்கப்படும் இடத்தில் அல் ஜன்னத் விற்க முடியாது. அல் ஜன்னத் விற்கும் இடத்தில் உணர்வு விற்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதற்கும் பல அமர்வுகள் கூடிப் பேசி ஒப்பந்தம் எழுதி கையெழுத்தும் போடப்பட்டது. அதற்குப் பிறகும் அதே நிலைதான் இருந்தது. இதற்கு கொள்கைதான் காரணமா என்றால் இல்லவே இல்லை. இதழ்களின் நிலைகள் மட்டும்தான் இப்படியா? புத்தக வெளியீட்டாளர்கள் விற்பனையாளர்கள் விஷயத்தில் மேற்கொண்ட நிலைப்பாடுகள். அது மட்டும் என்ன கொள்கை ரீதியானதா?

அனுமதி மறுத்தது கொள்கை ரீதியானதா?

தஞ்சை மஸ்தான் அலி என்பவரிடம் புத்தகங்கள் வாங்கக் கூடாது அவரது விளம்பரங்களை பத்திரிக்கைகளில் போடக் கூடாது என்று அவரை புறக்கணித்தோம். அது கொள்கைப் பிரச்சனையா? எங்கள் முடிவை மீறி மஸ்தான் அலி விளம்பரம் வெளியிட்டதால் அல் முபீனுக்கு கட்டுரை தர மாட்டோம் என்றோம். அது கொள்கைப் பிரச்சனையா? இவ்வாறு ஆரம்பித்த அந்த புறக்கணிப்பு அல்முபீன் ஆசிரியராக இருந்த முஹைதீன் உலவியை விட்டு வைத்ததா? நாம் நடத்தும் மாநாட்டில் அவர் புத்தக ஸ்டால் போட இடம் தர மாட்டோம் என்றோம். அவர் என்ன குமுதம், குங்குமம், ராணி, போன்ற புத்தகங்களை விற்பனை செய்யவா அனுமதி கேட்டார். குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையிலான நூல்கள் என எதை நாமே நமது இதழ்களில் அறிமுக உரை எழுதி விளம்பரங்களும் செய்தோமோ அந்த புத்தகங்களின் ஸ்டால் போடத்தானே அனுமதி கேட்டார். அவருக்கு அனுமதி மறுத்தது கொள்கை ரீதியானதா?

கொள்கைப் பார்வையா? கோபப் பார்வையா?

நீண்ட நெடுங்காலமாக குர்ஆன் ஹதீஸ் பிரச்சார நிகழ்ச்சிகள் சிறியதோ பெரியதோ எதுவாக இருந்தாலும் ஒன்று விடாமல் புத்தகங்களை பரப்பி வைத்தவர் முஸ்லிம் பெண்மணி, ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரிய்யா. விற்கிறதோ இல்லையோ இத்தனை தலைப்புகளில் குர்ஆன் ஹதீஸ் நூல்கள் உள்ளன என்ற புத்தக கண்காட்சிகளை சளைக்காமல் நடத்தி வந்தவர் முஸ்லிம் பெண்மணி, ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரிய்யா. இன்று அவரது முஸ்லிம் பெண்மணியை வாங்காதே ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரிய்யாவை கடை போட தடை போடு என அறிவித்தது கொள்கைப் பார்வையா கோபப் பார்வையா? இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும்பொழுது இணை வைக்கும் இமாமை பின் பற்றி தொழக் கூடாது என்ற கருத்து கொள்கைப் பார்வையாகத் தெரியவில்லை.

அவர்களும் மக்கத்து காபிர்களும் சமம்.

இப்பொழுதாவது காபிர்கள் என்று விமர்சித்து விட்டு அந்த கருத்தில் சொல்லவில்லை என்று மாறிப் பேசுவதாக அறிகிறோம். 2:114 என்ற ஆயத்தைக் கூறி பழமைவாய்ந்த அந்த பள்ளிகளில் அவர்களது பின்னால் நின்று தொழ உரிமை கோரி போராடினோமே அப்பொழுது அவர்களை எப்படி விமர்சித்தோம்? நபி(ஸல்) அவர்களது ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரத்தை எதிர்த்த மக்காவாசிகள் சிலைகளை கடவுள் என்று சொல்லவில்லை. சிலைகளாக வடிக்கப்பட்டுள்ள அந்த பெரியார்கள் பரிந்துரை செய்வார்கள் என்றுதான் சொன்னார்கள்;. அப்படிச் சொன்ன அவர்களைத்தான் அல்லாஹ் காபிர்களே என்று அழைக்கிறான். அதே மாதிரிதான் சுன்னத் ஜமாஅத்தினர் தர்காக்களில் அடங்கப்பட்டுள்ள பெரியார்கள் பரிந்துரை செய்வார்கள் என்று சொல்கிறார்கள். எனவே அவர்கள் கொள்கையும் மக்கா காபிர்கள் கொள்கையும் ஒன்றுதான் என்று விமர்சித்து அவர்களும் மக்கத்து காபிர்களும் சமம் என்று கூறினோம். அவர்களை மக்கா காபிர்கள் என்று கூறிக் கொண்டேதான் அவர்கள் பின்னால் நின்று தொழ அன்று உரிமை கோரினோம்.

ஆடு, மாடு, கோழி கறி சாப்பாட்டுக்கு திண்டாட்டம்.

நாம் தனிப் பள்ளிகள் கட்டிய பின் நம்மவர்கள் அங்கு சென்றால் நமது உண்டியல் வசூல் பாதிக்கும் நமக்கு வரவேண்டிய வசூல் அங்கு போய் விடும். இதை தடுக்க வேண்டும் என்றால் அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்று சொல்வதுதான் ஒரே வழி. அந்த அடிப்படையில்தான் இணை வைக்கும் இமாமை பின் பற்றி தொழலாமா? இஞ்சி விற்கும் இமாமை பின் பற்றி தொழலாமா? என்பன போன்ற புதிய மஸாயில்கள் வந்துள்ளன என்ற விமர்சனங்களை மறுக்க முடியுமா? மவ்லிது ஓதுபவர்கள் மவ்லிது ஹராம் என்றால் கறி, கோழி சாப்பாடு கிடைக்காது. அதனால் அதை ஹராம் என்று அவர்கள் சொல்ல மாட்டார்கள் என்றோம். அது மாதிரி இணை வைக்கும் இமாம் முஅத்தின் அறுக்கும் ஆடு, மாடு, கோழிகள் ஹராம் என்றால் நமக்கு ஆடு, மாடு, கோழி கறி சாப்பாட்டுக்கு திண்டாட்டம் வந்து விடும். எனவேதான் இணை வைக்கும் இமாமை பின்பற்றி தொழக் கூடாது என்கிற நாம் இணை வைக்கும் இமாம்கள் அறுப்பதை ஹராம் என சொல்லாமல் இருக்கிறோம் என்றும் விமர்சிக்கலாம் அல்லவா.

தடுக்க வேண்டும் அல்லவா.

இன்ன இன்ன மவுலவிகள் தங்கள், ஸாஹிபு தர்கா வழிபாடுடையவர்களாக இருப்பதால்; முஷ;ரிக் ஆகி விட்டார்கள். ஆகவே முஷ;ரிக்களான அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்று பெயர் குறிப்பிட்டு கூறி வருகின்றனர். இவர்கள் யாரையெல்லாம் முஷ;ரிக்கான மவுலவிகள் என்று அறிவித்துள்ளார்களோ அந்த மவுலவிகளில் பெரும்பாலோர் ஆண்டுதோறும் ஹஜ்ஜுக்கு வழிகாட்டிகளாக செல்கிறார்கள். சிலர் கடமையாகிவிட்ட ஹஜ்ஜுக்கு செல்கிறார்கள். மவுலவிகள் மட்டுமல்ல தங்கள், ஸாஹிபு தர்கா கொள்கை உடையவர்களில் வசதி உள்ளவர்களும் ஹஜ்ஜுக்கு செல்கிறார்கள். அவர்களெல்லாம் மக்கா காபிர்களுக்கு ஒப்பான முஷ;ரிக்குகள் என்று கூறி அவர்;கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்று சொல்பவர்கள் அவர்கள் ஹஜ்ஜுக்கு செல்வதை தடுக்க வேண்டும் அல்லவா.

கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?

நம்பிக்கை கொண்டோரே! நிச்சயமாக இணை கற்பிப்போர் (முஷ;ரிக்குகள்) அசுத்தமானவர்;களே (நஜீஸ்களே), எனவே அவர்கள் சங்கை மிகுந்த இப் பள்ளியை (மஸ்ஜிதுல் ஹராமை) இவ்வாண்டுக்குப் பின் அவர்;கள் நெருங்கக் கூடாது.

இது அல் குர்ஆன் 9:28 வசனத்தில் உள்ள கட்டளையாகும். இந்த ஆயத்துபடியும் இன்னுமுள்ள ஹதீஸ்கள்படியும் அவர்கள் ஹரம் எல்கைக்குள் செல்வதை தடுக்கும் முயற்சிகளில் ஏன் ஈடுபடவில்லை? அவர்கள் மக்கா காபிர்களுக்கு ஒப்பான முஷ;ரிக்கள் எனவே அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்று கூறி உள்ளது குர்ஆன் ஹதீஸ்களின் தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் என்பது உண்மையானால் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?

பத்திரிக்கைகளில் படம் போட்டு காட்டிடும் பகட்டுக்காகவா?

உடனே ஆயத்து ஹதீஸ் ஆதாரங்களுடன் சவூதி அரசுக்கு தகவல் தெரிவித்து. இவர்களெல்லாம் முஷ;ரிக்குகள் ஹரம் எல்கைக்குள் நெருங்க விடாமல் தடுக்கப்பட வேண்டியவர்கள் என்று அடையாளம் காட்டாமல் இருப்பது ஏன்? யாரை மக்கா காபிர்களுக்கு ஒப்பான முஷ;ரிக்கள் என்று கூறினார்களோ அவர்களையும் அழைத்து வந்து நபி வழியில் ஹஜ் செய்வது எப்படி என்ற பயிற்சி முகாம்கள் அல்லவா நடத்துகிறார்கள். பயிற்சி முகாம்கள் நடத்துவது ஏன்? நன்மைக்காகவா? பத்திரிக்கைகளில் படம் போட்டு காட்டிடும் பகட்டுக்காகவா? இது அவர்கள் கூறியுள்ள கருத்துக்கு அவர்களே முரண்படுவதாக இல்லையா?

சுற்றி வளைத்திடும் வியாக்கியான வித்தைகள்.

ஒருவர் பள்ளிக்கு தொழ வரும்போது யாரை தொழ வருகிறார். அல்லாஹ்வை தொழ வருகிறாரா? அவ்லியாவை தொழ வருகிறாரா? இன்ன அவ்லியாவுக்காக தொழப் போகிறேன். இன்ன பெரியாரை தொழப் போகிறேன் என்று ஒருவன் சொன்னால் அவனை பின் பற்றி தர்கா டிரஸ்டிகளும் தொழ மாட்டார்கள். அல்லாஹ்வைத்தான் தொழப் போகிறார் எனும்போது அவரை பின் பற்றக் கூடாது என்பதற்கு தெளிவான ஆதாரம் வேண்டும். சினிமா, டி.வி, கேமரா போன்ற விஞ்ஞான கண்டு பிடிப்புகள் சம்பந்தமான ஹராம் ஹலால்களுக்கு யாரும் நேரடி ஆதாரங்கள் கேட்க மாட்டார்கள். தொழுகை இன்றைய விஞ்ஞான கண்டு பிடிப்பு அல்ல. அல்லாஹ்வின் தூதர் மூலம் அல்லாஹ்விடமிருந்து வந்த நேரடி கட்டளையாகும். இதில் யாரையாவது பின் பற்றி தொழக் கூடாது என்று சொல்வதாக இருந்தால் அதற்கு குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து நேரடி ஆதாரங்கள்தான் தர வேண்டும். சுற்றி வளைத்திடும் வியாக்கியான வித்தைகள் காட்டி சமுதாயத்;தை கூறு போட்டிடும் விளக்கங்கள் கூறக் கூடாது. இது மாதிரியான விளக்கங்களை எதன் பெயரிலாவது அணிகளை உருவாக்கி தங்கள் தரப்பை நிலைநாட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள இயக்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் ஏற்கலாம். நபி வழியில் உள்ள முஸ்லிம்கள் ஏற்க முடியுமா?

ஈமான் கொள்ளாது நடித்த முனாபிக்குகள்.

ரசூலுல்(ஸல்) காலத்தில் இது மாதிரியான முஷ;ரிக்குகள் இருக்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். அல்லாஹ் ரசூலை நம்பி ஈமான் கொண்டுவிட்டு தவறான விளக்கங்களால் தவறு செய்பவர்களைவிட ஈமான் கொள்ளாது நடிக்கும் ஈமான் கொண்டதாக நடித்த முனாபிக்குகளைத்தான் முஸ்லிம்கள் இல்லை முஷ;ரிக்குகள் என்று தெளிவாகச் சொல்ல முடியும். அப்படிப்பட்டவர்களையே நபி(ஸல்) அடையாளம் காட்டி அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்று சொல்லவில்லை. என்பதை முந்தைய வெளியீட்டில் சுட்டிக் காட்டி இருந்தோம். ஈமான் கொள்ளாது நடித்த அந்த முனாபிக்குகளை அல் குர்ஆன் 9:28 வசனத்தின் கட்டளைப்படி ஹரம் எல்கைக்குள் வரக் கூடாது என்று நபி(ஸல்) தடுக்கவும் இல்லை என்பதையும் இங்கே சுட்டிக் காட்டிக் கொள்கிறோம்.

இது நமது விமர்சனம் அல்ல.

மார்க்கத்தை கற்றறிந்த அறிஞர்கள் கூட தவறான வாசகங்களை உபயோகித்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள். மக்கள் நேர் வழி பெறுவதும் வழி கெடுவதும் மார்க்க அறிஞர்கள் கையில்தான் இருக்கின்றது. எனவேதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஷஷஎனது உம்மத்தில் வழிகெடுக்கக் கூடிய தலைவர்களை நான் பயப்படுகிறேன் என்று கூறினார்கள். இது நமது விமர்சனம் அல்ல. ஏகத்துவம் 2004 ஆகஸ்ட் இதழில் 39 ஆம் பக்கத்தின் முதல் பாராவில் இடம் பெற்றுள்ள விமர்சனமாகும். இந்த விமர்சனம் இந்த தலைப்பின் பல இடங்களில் நினைவுபடுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். வஸ்ஸலாம்.

வெளியீடு: கா.அ. முஹம்மது பழுலுல் இலாஹி, துபை

No comments: