Saturday, July 08, 2006

ஒரு தவறும் செய்யாதவர்களே இமாமாக இருக்கவேண்டுமா?

இமாமத் செய்பவருக்குரிய தகுதிகள் யாவை?

1. இறைவனுக்குச் சமமாக பிறரை அழைக்கின்ற இமாமைப் பின்பற்றி தொழலாமா?

2. சமாதிகளுக்கு நேர்ச்சை செய்வோரிடம் மாடு, சேவல், தங்கம், வெள்ளி சாமான்களைக் காணிக்கையாகப் பெறுகின்ற இமாமைப் பின்பற்றித் தொழலாமா?

3. ஸிர்க்ர்க், பித்அத் ஆகியவற்றில் ஈடுபடும் இமாமை பின்பற்றித் தொழலாம?
4. தாடி இல்லாத இமாமைப் பின்பற்றித் தொழலாமா?

5. பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?

6. 20 ரக்அத் இமாமைப் பின்பற்றி எட்டு ரக்அத்கள் தொழலாமா?

7. பித்அத் இமாமைப் பின்பற்றித் தொழலாமா?

8. சம்பளம் வாங்கிக் கொண்டு தொழவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா?

9. வழிகெட்ட ஆலிம்களைப் பின்பற்றித் தொழ மனம் இடம் கொடுக்காத நிலையில் வீட்டில் தொழலாமா?

10. பெண்கள் இமாமாகத் தொழ வைக்கலாமா? அவர்களுக்கு ஜமாத் தொழுகை உண்டா?

11. கயிறு மந்திரித்தல், தாயத் கட்டுதல், மவ்லீது ஓததல்போன்ற வேலையில் ஈடுபடும் இமாமைப் பின்பற்றித் தொழ அனுமதி உண்டா?

12. தாயத் கட்டியுள்ள இமாமைப் பின்பற்றித் தொழலாமா?

13. கப்ரிலேயே காலத்தை ஓட்டும் இமாமைப் பின்பற்றித் தொழ அனுமதி உண்டா?

14. புகை பிடிக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா?

15. பிஸ்மில்லாஹ்வை விட்டுவிட்டு பாதிஹா சூராவை ஓதும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா?

16. பஜ்ருத் தொழுகையில் குனூத் ஓதும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா? தொழலாம் என்றால் நாமும் ஓதவேண்டுமா?

17. தொழுகையின் கடமைகளையும், சுன்னத்களையும் முறையாக நிறை வேற்றாத இமாமைப் பின்பற்றலாமா?

18. மக்கா காபிர்களின் அதே கொள்கையை ஆதரிக்கும் இமாம்களைப் பின்பற்றித் தொழலாமா?

பதில்

இந்த வினாக்களுக்கு விடை அளிப்பதற்கு முன் இந்த வினாக்கள் தோன்றுவதற்குரிய காரணங்களை அறிந்து கொண்டு அந்தக் காரணங்கள் சரியா என்பதை முடிவு செய்துவிட்டால் விடை கிடைத்துவிடும்.
மனித உள்ளங்களில் பதிந்துள்ள நம்பிக்கையே

இமாம்களாக இருப்பவர்கள் மற்ற மனிதர்களைப் போல் தவறு செய்பவர்களல்ல மற்ற மனிதர்களிடம் உள்ள பலவீனங்கள் இமாம்களிடம் இருக்க முடியாது பின்பற்றித் தொழுபவர்களை விட இமாமாக இருப்பவர்கள் எல்லா விதத்திலும் உயர்ந்தவர்கள் என்று மனித உள்ளங்களில் பதிந்துள்ள நம்பிக்கையே இது போன்ற கேள்விகள் எழக் காரணமாகின்றது.
மனிதர்களில் எவருக்குமே அந்த தகுதி கிடையவே கிடையாது.

எந்த ஒரு தவறும் செய்யாதவர்கள் மாத்திரம்தான் இமாமாக இருக்க வேண்டும் என்று கூறினால் - எதிர்பார்த்தால் - மனிதர்களில் எவருக்குமே அந்த தகுதி கிடையவே கிடையாது எந்த ஒருவரையும் எந்த காலத்திலும் இமாமாக ஏற்கவே முடியாது போய்விடும்.

தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக அவர்களை எண்ணுவதும் எல்லா மக்களையும் விட இமாம்கள் மிக உன்னதமானவர்கள் என்று கருதுவதும் தான் தனி மனித வழிபாட்டின் ஆணிவேராகும்.

''ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்பவர்கள்தான் தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் அதற்காக வருந்தி திருந்திக் கொள்பவர்களே'' என்பது நபிமொழி. (திர்மிதீ, இப்னுமாஜா, தாரமி, அஹ்மது)
உத்திரவாதம் எதுவும் இஸ்லாத்தில் இல்லை.

மற்ற மனிதர்களிடம் தவறுகளைக் காணும் போது சுட்டிக் காட்டித் திருத்தும் கடமை நமக்கு இருப்பது போலவே இமாம்களாக இருப்பவர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டித் திருத்துவதும் கடமையாகும். மற்றவர்கள் செய்யும் தவறுகளைத் திருத்த அவதாரம் எடுத்தவர்கள் இமாம்கள் அவர்கள் தவறு எதுவும் செய்யமாட்டார்கள் என்ற உத்திரவாதம் எதுவும் இஸ்லாத்தில் இல்லை.
இமாம்களை மனிதப் புனிதர்களாக கருதிவிட வேண்டாம்.

இமாம்களாக இருப்பவர்கள் தவறுகள் செய்து கொண்டே இருக்கலாம் என்று ஆதரிப்பதாக எவரும் கருதிவிடக்கூடாது. தவறுகள் சுட்டிக் காட்டப்படும் போது தங்களைத் திருத்திக் கொள்ள அவர்கள் முன் வர வேண்டுமென்பது மிகமிக அவசியமே! இங்கே நாம் சொல்ல வருவது என்ன வென்றால் இமாம்களை மனிதப் புனிதர்களாக கருதிவிட வேண்டாம். எத்தனையோ இமாம்களைவிட, அவர்களைப் பின்பற்றித் தொழுவோர் சிறந்தவர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டால் இந்தக் கேள்விகளில் பல எழாமல் போய்விடும்.
நபி (ஸல்)அவர்கள் நிர்ணயித்துச் சொன்ன தகுதிகள்

இதன் காரணமாகத்தான் நபி (ஸல்) அவர்கள் இமாமத் செய்பவருக்குரிய தகுதிகளைக் குறிப்பிடும் போது 'ஒரு தவறும் செய்யாதவர்களே இமாமாக இருக்கவேண்டும்' என்று கூறவில்லை மாறாக அவர்கள் நிர்ணயித்துச் சொன்ன தகுதிகளை காண்போம்.

''மூன்று பேர் ஓரிடத்தில் இருந்தால் அவர்களில் ஒருவர் இமாமத் செய்யட்டும். இமாமத் செய்ய அவர்களில் மிகவும் தகுதியானவர் அதிகம் ஓதுபவராகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஸயீத் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ, அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
தகுதியில் பலர் சம நிலையிலிருந்தால்.

''அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள் ஒரு சமுதாயத்துக்கு இமாமத் செய்யட்டும்! அல்லாஹ்வின் வேதத்தை அறிந்து கொள்ளும் தகுதியில் பலர் சம நிலையிலிருந்தால் அவர்களில் சுன்னத்தை (நபிவழியை) நன்கு அறிந்தவர் இமாமத் செய்யட்டும்! அதிலும் பலபேர் சம நிலையிலிருந்தால் யார் முதலில் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜிரத் செய்தாரோ அவர் தகுதியுடையவராவார். அதிலும் பலபேர் சம நிலையிலிருந்தால் அவர்களில் வயது அதிகமுள்ளவர் இமாமத் செய்ய வேண்டும்'' என நபி (ஸல்) கூறினார்கள். உக்பா இப்னு அம்ரு (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
மூத்த வயதுடையவர் இமாமத் செய்யட்டும்?

நானும் எனது தோழர் ஒருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து திரும்பும் போது ''தொழுகை நேரம் வந்து விடுமானால் நீங்கள் பாங்கு இகாமத் கூறுங்கள்! உங்களிருவரில் மூத்த வயதுடையவர் இமாமத் செய்யட்டும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். மாலிக் இப்னு ஹூலைரிஸ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் வேறொரு அறிவிப்பின்படி கிராஅத் (குர்ஆன் ஓதுவ)தில் அவ்விருவரும் சமமான தகுதிகளைப் பெற்றிருந்ததாகக் குறிப்பிடுகின்றது.

இமாமத் செய்வதற்குரிய முக்கிய தகுதிகள் எவை என்பதை இந்த நபிமொழிகள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. ஓரு சமுதாயத்தில் இருப்பவர்களில் யார் குர்ஆனை நன்கு ஓதுபவர்களாக, அதை அறிந்தவர்களாக, நபிவழியைத் தெரிந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் இமாமத் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது.

இது பற்றி இன்னமும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்துச் சென்றிருக்கிறார்கள். அவற்றையும் கவனித்தால் பெரும்பாலான கேள்விகளுக்கு விடை தெளிவாகும்.
அவர்களுடனும் தொழுங்கள்!

''தொழுகையை அதற்குரிய நேரம் தவறித் தொழக்கூடிய கூட்டத்தினரை நீங்கள் அடைய நேரும். அவர்களின் காலத்தை நீங்கள் அடைந்தால் உங்கள் இல்லங்களில் (உரிய நேரத்தில்) தொழுது கொள்ளுங்கள்! பின்பு அவர்களுடனும் தொழுங்கள்! அவர்களைப் பின்பற்றித் தொழும் தொழுகையை உபரியான (நபில்) தொழுகையாக கருதிக் கொள்ளுங்கள்.'' என்று நபி (ஸல்) கூறினார்கள். இப்னு மஸ்ஊது (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது.
அவர்களைப் பின்பற்றாதீர்கள் என்று நபி (ஸல்) கூறவில்லை.

தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் நேரம் கழித்து தொழுவது போன்ற பித்அத் எதுவும் இருக்க முடியாது. தொழுகைக்கான நேரம் முடிந்துதான் அவர்கள் தொழுவார்கள் என்றால் நம் தொழுகையை உரிய நேரத்தில் நிறை வேற்றி விட வேண்டும். ஆனால் அவர்களுடனும் சேர்ந்து நபிலாக எண்ணிக் கொண்டு தொழுது விட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் போதிக்கிறார்கள். அவர்கள் தொழுகையை நேரம் தவறிச் செய்யும் பித்அத்தைச் செய்கிறார்கள் என்பதற்காக அவர்களைப் பின்பற்றாதீர்கள் என்று நபி (ஸல்) கூறவில்லை.
இந்த ஹதீஸ் மூலம் பித்அத் செய்வோர், தவறான காரியங்களில் ஈடுபடுவோர் ஆகியவர்களைப் பின்பற்றி சுன்னத்கள் தொழலாம். பர்ளு தொழக்கூடாது என்று சிலர் கருதுவது சரியானதல்ல.
நபிலாகக் கருதும்படி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

ஏனெனில் ஒவ்வொரு தொழுகைக்கும் நபி (ஸல்) அவர்கள் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளார்கள். அந்த தொழுகையை அந்த நேரத்தில் தொழும்போதுதான் அது அந்த தொழுகையாக நிறை வேறும். உதாரணமாக லுஹர் தொழுகையை அதற்குரிய நேரம் முடிந்த பின் ஒரு இமாம் தொழ வைத்தால் அதைப் பின்பற்றி நாம் லுஹர்த் தொழுகையைத் தொழுதால் நாமும் நேரம் தவறித் தொழுதவர்களாக நேரும். இதன் காரணமாகவே வீட்டிலேயே உரிய நேரத்தில் தொழுது கொண்டு அவர்களுடன் தொழும் தொழுகையை நபிலாகக் கருதும்படி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் அவர்களைப் பின்பற்றித் தொழுவது கட்டாயமில்லை. விரும்பினால் அவர்களைப் பின் பற்றித் தொழலாம். விரும்பினால் அவர்களைப் பின் பற்றித் தொழுவதை தவிர்க்கலாம்.
அவர்களுடன் நான் தொழலாமா?

''எனக்குப் பின் சில தலைவர்கள் தோன்வார்கள். தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதை விட்டும் அவர்களைப் பல காரியங்கள் தடுத்து விடும். எனவே நீங்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள்!'' என்று நபி (ஸல்) கூறினார்கள். அப்போது ஒருமனிதர் ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் நான் தொழலாமா?'' என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''ஆம்! நீங்கள் விரும்பினால் தொழுதுகொள்! என்று பதிலளித்தார். உபாதா இப்னுஸ்ஸாமித் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபூதாவூத், அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
தொழ தடையில்லை.

இந்த நபி மொழி மூலம் இத்தகையோரைப் பின் பற்றித் தொழுவது கட்டாயமில்லை என்று உணரலாம். மேற்கூறிய ஹதீஸ்கள் மூலம் பித்அத்தான, மார்க்கமுரணான செயல்களில் ஈடுபடுவோரை பின் பற்றித் தொழ தடையில்லை என்று அறிகிறோம்.
உங்களுக்கு நன்மையாகவும், அவர்களுக்கு கேடாகவும் அது அமையும்.

சிலபேர் உங்களுக்கு (இமாமாக) தொழுகை நடத்துவார்கள் அவர்கள் (தொழுகையைச்) சரியான முறையில் நடத்தினால் உங்களுக்கும், அவர்களுக்கும் பயனுள்ளதாகும். அவர்கள் (தொழுகையில்) தவறுதலாக நடந்து கொண்டால் (நீங்கள் சரியாகத் தொழுதுவிடும் போது) உங்களுக்கு நன்மையாகவும், அவர்களுக்கு கேடாகவும் அது அமையும் என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹூரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.
பஜ்ரில் இமாம் குனூத் ஓதினால்.

இமாமாக இருப்பவர் பாதிஹா சூராவுடன் பிஸ்மில்லாவை ஓதாவிட்டாலோ, கைகளை உயர்த்துவது போன்ற சுன்னத்துகளை விட்டு விட்டாலோ, பஜ்ரில் குனூத் ஓதினாலோ பின்பற்றித் தொழுவோர் சரியாகத் தங்களின் கடமைகளை நிறை வேற்றும் வரை அவர்களின் தொழுகை பாதிக்காது என்பதை மேற்கூறிய ஹதீஸிலிருந்து அறிகிறோம். பஜ்ரில் இமாம் குனூத் ஓதினால் பஜ்ருத் தொழுகையில் இல்லாத ஒரு அம்சத்தை அவர் ஏற்படுத்துகிறார் நாம் அதில் பங்கெடுக்காமல் மவுனமாக நின்றுவிட்டால் நமது தொழுகை பயனுள்ளதாகும். என்பதை மேற்கண்ட ஹதீஸ் மூலம் அறிகிறோம்.
சிந்திக்கும் போது விளங்கமுடியும்.

இமாம்கள் நேரம் தவறி பர்ளுத் தொழுகையை நிறை வேற்றிக் கொண்டிருக்கும் போது அவரைப் பின்பற்றி நாம் நபிலாகத் தொழலாம் என்ற ஹதீஸ் மூலம் 20 ரக்அத்கள் தொழவைக்கும் இமாமைப் பின்பற்றி 8 ரக்அத்கள் தொழலாம் என்பதை சிந்திக்கும் போது விளங்கமுடியும்.
பின்பற்றாது புறக்கணிப்பது கட்டாயமல்ல.

இமாம்களாக இருப்பவரின் தவறான நடத்தைகளின் காரணமாக அவர்களைப் பின்பற்றாது புறக்கணிப்பது கட்டாயமல்ல என்ற அடிப்படையில் தான் நபித் தோழர்களின் வாழ்விலும் சான்றுகள் உள்ளன.
'பித்னா' (குழப்பம்) உடைய இமாம் எங்களுக்குத் தொழுகை நடத்துகிறார்.

உஸ்மான் (ரலி) அவர்கள் முற்றுகையிடப்பட்டபோது அவர்களிடம் உபைதுல்லாஹ் இப்னு அதீ அவர்கள் வந்து ''நீங்கள் பொது மக்களின் இமாமாக இருக்கின்றீர்கள். முற்றுகை இடப்படும் நிலைமைக்கு நீங்கள் ஆளாகியுள்ளீர்கள்! 'பித்னா' (குழப்பம்) உடைய இமாம் எங்களுக்குத் தொழுகை நடத்துகிறார். (அவரைப் பின்பற்றித் தொழுதால்) நாங்கள் குற்றவாளிகளாவோமா என்று அஞ்சுகிறோம் என்று கூறினார்.
அவர்களின் தவறுகளை நீ தவிர்த்துவிடு.
அதைக் கேட்ட உஸ்மான் (ரலி) அவர்கள் ''மனிதர்கள் செய்யும் நல்லறங்களில் தொழுகை மிகவும் சிறந்ததாகும். மக்கள் அதை அழகிய முறையில் நடத்தும் வரை அவர்களுடன் நீயும் அழகிய முறையில் அதை நடத்திக்கொள்! அவர்கள் தவறிழைத்தால் அவர்களின் தவறுகளை நீ தவிர்த்துவிடு'' என்று கூறினார்கள். புகாரியில் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது.
இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கின்றன.

கொடுமையான ஆட்சி புரிந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூசுபைப் பின்பற்றி இப்னு உமர் (ரலி) தொழுத நிகழ்ச்சி புகாரியில் இடம் பெற்றுள்ளது. மர்வான் என்ற மன்னரைப் பின்பற்றி அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் பெருநாள் தொழுகை தொழுது அவரது தவறுகளைச் சுட்டிக் காட்டிய ஹதீஸ் முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜாவில் இடம் பெற்றுள்ளது. மேலே சொன்ன நபி மொழிகளுடன் இந்த நபித்தோழர்களின் செயல்களும் பொருந்தும் விதமாக அமைந்து இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கின்றன.
தவறுகள் புரிவோரை இமாம்களாக ஏற்றுத்தொழ தடை இல்லை.

ஆனால் எவர்கள் மக்கா காபிர்களின் அதே கொள்கையைத் தங்களின் கொள்கையாகக் கொண்டிருப்பது திட்டவட்டமாகத் தெரிகின்றதோ, இணை வைத்தலை ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றதோ, அத்தகையோரை இமாமாக ஏற்பதற்கு மேற்கூறிய ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை. இறைவன் எத்தகைய காரியங்களைச் செய்பவர்களைக் காபிர்கள் என்று அறிவிக்கிறானோ அவர்களை இமாம்களாக தலைவர்களாக ஏற்கலாகாது, ஏனைய தவறுகள் புரிவோரை இமாம்களாக ஏற்றுத்தொழ தடை இல்லை.
பெண்கள் இமாமத்.

'பெண்கள் ஆண்களுக்கு இமாம்களாகத் தொழ வைக்கலாகாது' என்று இப்னுமாஜாவில் இடம் பெற்ற ஹதீஸ் ஆதாரமற்றதாகும் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் அத்தபீபீ, என்பவர் இட்டு க்கட்டி கூறக்கூடியவர். இவர் இந்த ஹதீஸின் அறிப்பாளர்களில் ஒருவராக இடம் பெறுகிறார். எனவே இது சரியான ஹதீஸ் அல்ல. பெண்கள் இமாமத் செய்யலாம். தன குடும்பத்தைச் சேர்ந்த ஆண் சிறுவர்களுக்கு கூட இமாமத் செய்யலாம். என்பதற்கு ஆதாரம் உள்ளது.
அந்தப் பெண்மணி இமாமத் செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குச் செல்லும்போது உம்மு வரகா என்ற பெண்மணி வந்து 'அல்லாஹ்வின் தூதரே! உங்களுடன் சேர்ந்து போரில் கலந்து கொள்ள எனக்கும் அனுமதியளியுங்கள்!' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை அவரது குடும்பத்தினருக்கு இமாமாக நின்று தொழவைக்கு மாறும் நபி (ஸல்) கட்டளையிட்டனர். அந்தப் பெண்ணுக்கு ஒரு சிறுமியும், ஒரு சிறுவரும் இருந்தார்கள். அவ்விருவரையும் தனக்குப்பின்னால் நிறுத்தி அவ்விருவருக்கும் இமாமாக அந்தப் பெண்மணி இமாமத் செய்தார்கள் என்ற ஹதீஸ் அபூதாவூத், இப்னுகஸைமா, ஹாகிம், தாரகுத்னீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ் மூலம் பெண்களும் இமாமத் செய்யலாம் என அறிகிறோம்.

அல் ஜன்னத் 1989 ஜனவரி கேள்வி பதில்பகுதியிலிருந்து இதை எடுத்தெழுதி அனுப்பியவர்
முஃமின் பில்லாஹ்

No comments: