Saturday, May 12, 2007

கருணாநிதி குடித்ததோ மேலப்பாளையம் தண்ணீர்.

மேலப்பாளையவாசிகள் அப்பாவிகள் ஏமாளிகள்.
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் த.மு.மு.க மாநில பொதுச் செயலாளருமான மாண்புமிகு எஸ். ஹைதர் அலி ஸாஹிப் அவர்கள் 6.5.2007 ஞாயிறன்று நெல்லை மாநகருக்கு வருகை தந்தார்கள். நெல்லை மாநகரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். இறுதியாக இரவு 8.30மணிக்கு மேலப்பாளையம் அல்லாமா இக்பால் பசார் திடலில் மேலப்பாளையம் அனைத்து பள்ளி ஜமாஅத்தார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்டோ காஜா அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். நெல்லை இப்னு கலாம் ரசூல் அவர்கள் நுகர்வோர் என்ற தலைப்பில் மார்க்கப் பிரச்சார உரையாற்றினார். கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியை அறிமுக உரையாற்றுமாறு பணிக்கப்பட்டது. அவர் ஆற்றிய உரையின் கரு.
மேலப்பாளையமே இருண்டு போய் இருந்தது.
அறிமுக உரையாற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளேன். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் த.மு.மு.க மாநில பொதுச் செயலாளருமான மாண்புமிகு அண்ணன் எஸ். ஹைதர் அலி அவர்களுக்கு மேலப்பாளையத்தில் அறிமுகம் தேவை இல்லை. அவரை யார் மறந்தாலும் மேலப்பாளையவாசிகள் அவரை மறக்க மாட்டார்கள் மறக்க முடியாது. 1997 ஆம் ஆண்டு நடந்த அசம்பாவித சம்பவங்களினால் மேலப்பாளையம் ஒரு தீவு போல் ஆகி இருந்தது. ஊரில் இருந்தவர்கள் ஊரை விட்டு வெளியே போக முடியாது. வெளியூரிலிருந்தவர்கள் ஊருக்கள் வர முடியாது. இப்படி மேலப்பாளையம் மற்ற ஊர்களுடன் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டிருந்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது. மேலப்பாளையமே இருண்டு போய் இருந்தது.
அறிமுகம் தேவை இல்லை.
இந்த இக்கட்டான நேரத்தில் மேலப்பாளையம் நகருக்குள் வந்து ஒரு வாரம் முகாமிட்டு களப் பணியாற்றிவர்தான் இன்று தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக ஆகி இருக்கும் த.மு.மு.க மாநில பொதுச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் எஸ். ஹைதர் அலி அவர்கள். வக்பு வாரிய தலைவர் வருகிறார் என நான் அழைப்புக் கொடுக்கச் சென்றபொழுது காங்ரஸ் கட்சியைச் சார்ந்த முஹம்மது அலி அவர்களும் இதனை நினைவு கூர்ந்தார்கள். எனவே அவருக்கு அறிமுகம் தேவை இல்லை.
அவரை உயர்வுபடுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
12 ஆண்டு காலமாக சமுதாயத்துக்காக கோரிக்கைகளை எழுதி ஆட்சியாளர்களைத் தேடிச் சென்று கோரிக்கை மனுக்களை கொடுத்துக் கொண்டிருந்தவர் அண்ணன் எஸ். ஹைதர் அலி அவர்கள். இன்று சமுதாயம் கோரிக்கை மனுக்களை எழுதிக் கொடுக்க கோரிக்கை மனுக்களை வாங்கும் இடத்திற்கு வந்திருக்கிறார். கோரிக்கை மனுக்களை கொடுக்கும் நிலையிலிருந்து கோரிக்கை மனுக்களை வாங்கும் நிலைக்கு அவரை உயர்வுபடுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
மக்களை விட்டும் அந்நியப்பட்டு இருந்தார்கள்.
நான் இங்கு எந்த கட்சி சார்பிலும் பேசவில்லை. ஒரு மேலப்பாளையம்வாசி என்ற முறையில் பேசுகிறேன். இங்கு கூடி இருக்கும் ஜமாஅத்தார் சார்பில் பேசுகிறேன். இதுவரை எத்தனையோ வக்பு வாரிய தலைவர்கள் வந்திருக்கிறார்கள். தமிழ் பேசும் வக்பு வாரிய தலைவர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை வந்த வக்பு வாரிய தலைவர்கள் அனைவரும் உருது பேசும் முஸ்லிம்கள் என்றுதான் மக்கள் நம்பி இருக்கிறார்கள். காரணம் அவர்கள் அனைவரும் அந்த அளவுக்கு மக்களை விட்டும் அந்நியப்பட்டு இருந்தார்கள்.
பொது மக்கள் உங்களிடம் அதிகமாகவே எதிர் பார்க்கிறார்கள்.
நீங்கள் அப்படி இல்லை உங்களை மக்கள் விளங்கி வைத்திருக்கிறார்கள். இதுவரை வந்த வக்பு வாரிய தலைவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு கட்சியின் சார்பானவர்களாகத்தான் மக்களால் கருதப்பட்டார்கள். அதனாதல்தான் அவர்கள் வக்பு வாரிய தலைவர்களாக பொறுப்பு ஏற்றபொழுது பொது மக்கள் அங்கு கூடவில்லை. அவர்களது கட்சிகாரர்கள் கூட கூடியது இல்லை. வக்பு மெம்பர்கள் மட்டுமே வந்திருப்பார்கள். ஆனால் நீங்கள் வக்பு வாரிய தலைவராக பொறுப்பேற்று விட்டு வரும்பொழுது வெளியில் பொது மக்கள் கூடி இருந்ததை கண்டீர்கள். பொது மக்கள் உங்களிடம் அதிகமாகவே எதிர் பார்க்கிறார்கள்.
எந்தக் கோரிக்கைகளாக இருந்தாலும் உங்களிடம்தான் வைப்போம்.
1997ஆம் ஆண்டு துபை வந்திருந்தபொழுது மேலப்பாளையம் நலனுக்காக உங்களிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தேன். அப்பொழுது த.மு.மு.க மாநில பொதுச் செயலாளர் என்ற பொறுப்பைத் தவிர வேறு அரசு ரீதியான எந்தப் பொறுப்பிலும் நீங்கள் இருக்கவில்லை. இருந்தாலும் உங்களால் முடியும் என்ற நம்பிக்கையில் கோரிக்கை வைத்தேன். இன்று அரசு ரீதியான பொறுப்பில் இருக்கிறீர்கள். வக்பு வாரிய தலைவராகத்தானே இருக்கிறேன் அதற்கு சம்பந்தம் இல்லாத துறை கோரிக்கைகளை வைக்கிறீர்களே என்று சொல்லக் கூடாது. எந்தக் கோரிக்கைகளாக இருந்தாலும் உங்களிடம்தான் வைப்போம்.
பெண்கள் நிலை எப்படி இருக்கும் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களைப் பொறுத்த வரை நீங்கள் வக்பு வாரிய தலைவர் மட்டும்தான். எங்களைப் பொறுத்த வரை அனைத்து துறை அமைச்சரும் நீங்கள்தான் எங்களுக்கு. எனNவு உங்களிடம்தான் அனைத்து கோரிக்கைகளையும் வைப்போம். மேலப்பாளையம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பிளாட்பாரம் கிடையாது. சமீபத்திலே நாகர்கோயில் செல்வதற்காக மேலப்பாளையம் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றேன். கழுத்துக்கு மேலே படி இருக்கிறது. முஸ்லிம் பெண்களெல்லாம் அதில் ஏற ரொம்ப ரொம்ப கஸ்டப்படுகிறார்கள். ஆண்கள் நிலையே கஸ்டம் என்றால் பெண்கள் நிலை எப்படி இருக்கும் புரிந்து கொள்ளுங்கள்.
அந்த அளவுக்கு பரிதாபமான பிள்ளை அது.
எனவே ரெயில்வே இணை அமைச்சர் வேலு அவர்களிடம் பேசுவீர்களோ லாலுவிடம் பேசுவீர்களோ எங்களுக்குத் தெரியாது. மேலப்பாளையம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பிளாட்பாரம் வேண்டும். இந்தக் கோரிக்கையை உங்களிடமே வைக்கிறோம். எப்பொழுது பார்த்தாலும் எங்கள் ஊர் எங்கள் ஊர் என நான் சொல்வதாகச் சொல்கிறீர்கள். எங்கள் ஊர் மக்கள் மேலப்பாளையவாசிகள் எந்த அளவுக்கு அப்பாவிகள் ஏமாளிகள் என்பதைச் சொல்லுகிறேன் கேளுங்கள். அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள். மேலப்பாளையம் என்ற பிள்ளை அழாது. அழவும் தெரியாது. அடித்தாலும் அழாது அந்த அளவுக்கு பரிதாபமான பிள்ளை அது.
மேலப்பாளையம் பஸ் நிலையம் என்று பெயர் வைக்கக் கூடாதா?
உதாரணத்துக்கு மேலப்பாளையம் எல்கைக்குள் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை எடுத்துக் கொள்ளுங்கள் இதற்கு காயிதே மில்லத் பெயர் வைக்க வேண்டும் என்றார்கள். மறுத்து விட்டார்கள். அதை விட்டு விடுவோம் மேலப்பாளையம் எல்கைக்குள் இருக்கும் பஸ் நிலையத்துக்கு குறைந்த பட்சம் மேலப்பாளையம் பஸ் நிலையம் என்று பெயர் வைக்கக் கூடாதா?
பெரியாரா அண்ணாவா பழங்கா நத்தமா? மாட்டுத் தாவணியா?
இங்கிருந்து மதுரை சென்றால் மதுரையா என கேட்கமாட்டான். பெரியாரா அண்ணாவா பழங்கா நத்தமா? மாட்டுத் தாவணியா? என்றுதான் கேட்பார்கள். இந்த 4 பஸ் நிலையங்களும் மதுரை என்ற அந்த மாநகர் எல்கைக்குள்தான் இருக்கின்றன. இங்கிருந்து நாகர்கோயில் போனால் மீனாட்சிபுரமா? வடசேரியா? என கேட்பார்கள். இரண்டுமே நாகர்கோயில் என்ற நகராட்சி எல்கைக்குள்தான் இருக்கின்றன.
வண்ணாரப் பேட்டை பாளையங்கோட்டை என்றெல்லாம் டிகட் கொடுப்பார்கள்.
மேலப்பாளையம் எல்கைக்குள் இருக்கும் பஸ் நிலையத்திற்கு மேலப்பாளையம் என்ற பெயர் கிடையாது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் என பெயர் வைத்துள்ளார்கள். மதுரை, திருச்சி சென்னை போன்ற வட பகுதியிலிருந்தோ தூத்துக்குடி, திருச்செந்தூர் போன்ற கிழக்குப் பகுதியிலிருந்தோ வரும்போது சங்கர் நகர், தாழையூத்து, திருநெல்வேலி ஜங்ஷன், வண்ணாரப் பேட்டை பாளையங்கோட்டை என்றெல்லாம் டிகட் கொடுப்பார்கள். இவை அனைத்தும் திருநெல்வேலி என்ற மாநகராட்சி பகுதியில்தான் உள்ளன.
இழிச்ச வாயன் மேலப்பாளையத்துக்காரன்.
மேலப்பாளையம் என்ற பெயரில் மட்டும் டிகட் கொடுக்க மாட்டார்கள். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் என்றுதான் டிகட் கேட்பார்கள் டிகட் கொடுப்பார்கள். மேலப்பாளையம் என்று கேட்டால் கொடுக்க மாட்டார்கள். ஏன்னா இழிச்ச வாயன் மேலப்பாளையத்துக்காரன்.
தூங்கியது நாம் அல்லவா.
இப்பொழுது வந்த பஸ் நிலையம்தான் அப்படி என்றால் ரயில் நிலையத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திருச்செந்தூருக்கு போகும் வழியில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் மேலப்பாளையத்துக்கு உட்பட்ட மேலப்பாளையத்தின் வடக்கு பகுதியில் உள்ள ரயில் நிலையம் அமைந்தது. அதற்கு குரிச்சி ரெயில் நிலையம் என பெயர் வைத்தார்கள். குரிச்சி என்பது மேலப்பாளையம் எல்கைக்குட்பட்ட ஒரு சிறு பகுதி. குரிச்சி ரெயில் நிலையம் என பெயர் வைத்ததற்கு குரிச்சி வாழ் இந்து மக்களை குறை சொல்ல முடியாது. அவர்களது உணர்வை ஆர்வத்தை மதிக்கிறோம். தூங்கியது நாம் அல்லவா.
மேலப்பாளையம் என பெயர் வர வழி செய்தோம்.
நாகர்கோயில் கன்னியாகுமரி ரயில் பாதை அமைத்தார்கள். மேலப்பாளையத்துக்கு உட்பட்ட மேலப்பாளையத்தின் மேற்கு பகுதியில் ரயில் நிலையம் அமைந்தது. அதற்கு சந்தனம்மாள்புரம் என பெயர் வைத்தார்கள். சந்தனம்மாள்புரம் என்பது மேலப்பாளையம் எல்கைக்குட்பட்ட இந்து மக்கள் மட்டும் வாழும் ஒரு சிறு தெருவின் பெயர். இதிலும் சந்தனம்மாள்புரம் வாழ் இந்து மக்களை குறை சொல்ல மாட்டோம். அவர்களது உணர்வை ஆர்வத்தை மதிக்கிறோம். அதிலும் கண்டு கொள்ளாமல் இருந்தது நாம் அல்லவா. 1972இல் மாணவர்களாக இருந்த நாங்கள் தலையிட்டு அதற்கு மேலப்பாளையம் என பெயர் வர வழி செய்தோம்.
தொழில் வளம் பெற வழி பிறக்கும்.
பஸ் நிலையம் ரெயில் நிலையம் பெயர்களால் என்ன பயன் என எண்ணாதீர்கள். திருநெல்வேலி மநாகராட்சிக்கு உட்பட்ட திருநெல்வேலி ஜங்ஷன், திருநெல்வேலி டவுண், வண்ணாரப் பேட்டை பாளையங்கோட்டை, தச்சநல்லூர், பேட்டை அடுத்துள்ள சங்கர் நகர், தாழையூத்து என எல்லாப் பகுதிகளும் வளர்ச்சி அடைந்துள்ளன. மேலப்பாளையம் மட்டும் எல்லா வகையிலும் பின் தங்கி உள்ளது. மேலப்பாளையம் பகுதியில் உள்ள இந்த பஸ் நிலையத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல கேரளாவின் பல பகுதிகளிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் பஸ்கள் வருகின்றன. காலப் போக்கில் மற்ற மாநிலங்களிலிருந்தும் பஸ்கள் வரும். இதனால் மேலப்பாளையம் என்ற ஊர் மேலும் மேலும் பல நகரங்களிலும் அறிமுகமாகும். தொழில் வளம் பெற வழி பிறக்கும்.
மேலப்பாளையம் ரெயில் நிலையம் திட்டமிட்டு டம்மி ஆக்கப்படுகிறது.
அதுபோல் ஒரு ரெயில் நிலையத்திற்கு பெயர் வைத்து விட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலுமுள்ள கம்யூட்டர்களிலும் பெயர் பதிவாகி விடும். திருநெல்வேலி ஜங்ஷன், திருநெல்வேலி டவுண் என ரெயில் நிலையங்கள் உள்ளன. திருச்சி ஜங்ஷன், திருச்சி டவுண் என ரெயில் நிலையங்கள் உள்ளன. இப்படி ஒரே ஊரின் பெயரில் இரண்டு ரெயில் நிலையங்கள் உள்ளன. மேலப்பாளையம் பெயரால் மட்டும் ரெயில் நிலைய பெயர் வைக்க கஸ்டமாக இருக்கிறது. அப்படியே பெயர் வைத்து விட்டாலும். அந்த மேலப்பாளையம் ரெயில் நிலையம் திட்டமிட்டு டம்மி ஆக்கப்படுகிறது.
மேலப்பாளையம் ரெயில் நிலையத்தை புறக்கணிக்கும் நிலை.
திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வரையிலான அனைத்து ரெயில் நிலையங்களும் நல்ல முறையில் கட்டப்பட்டிருக்கிறது. பூங்காக்கள் மாதிரி அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. மேலப்பாளையம் ரெயில் நிலையம் மட்டும் கரடு முரடான மேடு பள்ளங்களாக கபரஸ்தான் மாதிரி காட்சி அளிக்கிறது. இதனால் மேலப்பாளையம்வாசிகள் கூட மேலப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து போகாமல் திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து போகிறார்கள். மேலப்பாளையம் ரெயில் நிலையத்தில் வந்திறங்கமால் திருநெல்வேலி ஜங்ஷன் வந்திறங்குகிறார்கள். மேலப்பாளையவாசிகளே மேலப்பாளையம் ரெயில் நிலையத்தை புறக்கணிக்கும் நிலை.
அதற்குப் பெயர் பாளையங்கோட்டை மத்திய சிறை.
திருநெல்வேலியிலே ஒரு மத்திய சிறை இருக்கிறது. அதற்கு பாளையங்கோட்டை மத்திய சிறை என்று பெயர். அது பாளையங்கோட்டை பகுதியிலா இருக்கிறது? மேலப்பாளையம் எல்கையில் இருக்கிறது. அந்த மத்திய சிறைக்கு தண்ணீர் மேலப்பாளையம் பஞ்சாயத்திருந்து போனது. பிறகு நகராட்சியானதும் மேலப்பாளையம் நகராட்சியிலிருந்து தண்ணீர் போனது. இப்பொழுது மாநகராட்சியான பின்னரும் மேலப்பாளையம் மண்டலத்திலிருந்துதான் தண்ணீர் போகிறது. ஆனால் அதற்குப் பெயர் பாளையங்கோட்டை மத்திய சிறை. பெயர்களால் என்ன பயன் என கேட்பவர்களுக்கு இதில் மிகத் தெளிவான பதில் இருக்கிறது.
கருணாநிதி குடித்ததோ மேலப்பாளையம் தண்ணீர்.
தமிழக முதல்வர் கருணாநிதி பாளையங்கோட்டை என்ற பெயரால் உள்ள சிறையினிலே இருந்ததால் பாளையங்கோட்டை சிறையினிலே... என்ற பாடல் பாடப்பட்டது. அதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் அந்த ஊர் பிரபலமானது. கருணாநிதி முதல்வராக வரும்பொழுதெல்லாம் பாளையங்கோட்டை என்ற பெயரால் உள்ள சிறையினிலே குடித்த தண்ணீருக்கு நன்றி செலுத்தும் விதமாக பாளையங்கோட்டைக்கு என ஏதாவது திட்டங்கள் அறிவிக்கிறார். அவர் குடித்ததோ மேலப்பாளையம் தண்ணீர். நன்றி செலுத்துவதோ பாளையங்கோட்டைக்கு.
மேலப்பாளையம் பெயரில் கோட்டை விட்டது.
கருணாநிதி முதல்வராக வரும்பொழுதெல்லாம் அடிக்கடி பாளையங்கோட்டை வந்து செல்கிறார். அதே காரணத்துக்காக அவரது அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் பாளையங்கோட்டைக்கு வந்து செல்கின்றனர். அத்தோடு அவர்கள் இலாகாக சார்பாக ஏதாவது திட்டங்களையும் அறிவித்துச் செல்கின்றனர். மேலப்பாளையம் பெயரில் கோட்டை விட்டது. அதனால் பாளையங்கோட்டை பயன் பெறுகிறது.
வயல்களை இழந்தவர்கள் மேலப்பாளையவாசிகளான முஸ்லிம்கள்.
1970இல் மேலப்பாளையத்தில் 80 ஏக்கர் விளை நிலத்தை ரெயில்வே இலாகா எடுத்துக் கொண்டது. இதனால் வயல்களை இழந்தவர்கள் மேலப்பாளையவாசிகளான முஸ்லிம்கள். திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் உள்ள கூட்ஸ் எனும் சரக்கு வண்டிகள் நிலையத்தை மேலப்பாளையத்தில் அமைக்கவே 80 ஏக்கர் விளை நிலத்தை அரசு எடுத்தது. இது அமைந்திருந்தால் மேலப்பாளையம் ஒரு போக்கு வரத்து உள்ள இடமாக ஆகி இருக்கும். அதை ஒட்டி வேறு தொழில் வளங்களும் தோன்றி இருக்கும். பொருளாதாரத்திலும் மேலப்பாளையம் மேம்பாடு அடைந்திருக்கும்.
சரக்கு வண்டிகள் நிலையம் திட்டம் கைவிடப்பட்டது.
சரக்கு வண்டிகள் நிலையம் மேலப்பாளையத்தில் அமைத்தால் ரயில்வே கேட் அடிக்கடி பூட்டப்படும். அதனால் திருநெல்வேலி டவுணுக்கு போய் வரும் மேலப்பாளையவாசிகளின் போக்கு வரத்து பாதிக்கப்படும் எனவே மேலப்பாளையத்தில் அமைக்கவே வேண்டாம் என எதிர்ப்புத் தெரிவிக்க வைத்தார்கள். அப்பாவி மேலப்பாளையவாசிகளும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். மேலப்பாளையத்தில் சரக்கு வண்டிகள் நிலையம் என்ற திட்டம் கைவிடப்பட்டது. இப்பொழுது ஒரு நாளைக்கு 14 தடவைக்கு மேல் ரயில்வே கேட் பூட்டப்படுகிறது. மேலப்பாளையம் பின்னடைவுக்கு மேலப்பாளையவாசிகளே காரணம்.
சரக்கு வண்டிகள் நிலையம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
டவுண் போக்கு வரத்து பாதிக்கப்படும் என்றால் ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்திருக்க வேண்டும். இந்த அறிவு கூட இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டார்கள். மேலப்பாளையம் முஸ்லிம்களிடமிருந்து கையகப்படுதத்தப்பட்ட வயல்கள் அனைத்தையும் இன்று முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இப்பொழுதும் அந்த நிலம் ரெயில்வே இலாகாவுக்கு சொந்தமானதுதான். எனவே டவுண் மேலப்பாளையம் வழியில் மேம் பாலம் அமைத்து அந்த சரக்கு வண்டிகள் நிலையம் திட்டத்தை நிறைவேற்ற வழி செய்ய வேண்டும்.
வேலைக்குச் சென்று வந்தவர்கள் மேலப்பாளையவாசிகள்.
முன்பு நூல் மில் நிலையம் வர இருந்தது. மேலப்பாளையத்தில் மில் தொழில் வந்தால் கைத் தொழிலான நெசவுத் தொழில் பாதிக்கப்படும் என்றார்கள். சரக்கு வண்டிகள் நிலையம் என்ற திட்டம் கைவிடப்பட எப்படி மேலப்பாளையவாசிகள் காரணமாக ஆக்கப்பட்டர்களோ அதுபோல்தான் முன்பு மில் தொழில் வர தடையாக மேலப்பாளையவாசிகள் ஆக்கப்பட்டார்கள். ஒட்டு மொத்த மேலப்பாளையவாசிகளும் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். மேலப்பாளையத்திற்கு வர இருந்த மில் தொழில் திருநெல்வேலி பேட்டைக்குச் சென்றது. அந்த பேட்டை மில்லுக்கு இரவு பகல் என்று பாராமல் இரவு 12மணிக்கும் பகல் ஒரு மணிக்கும் மழை வெயில் என்று பாராமல் தினமும் வேலைக்குச் சென்று வந்தவர்கள் மேலப்பாளையவாசிகள்.
கைத்தறி தொழில் இன்று முற்றிலும் அழிந்து விட்டது.
அதற்கு முன்னர் மொரார்ஜி, மூல்சந்த் போன்ற ஏராளமான மின் தறி துணி மில்கள் மேலப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட இருந்தது. அப்பொழுதும் கைத் தொழிலான நெசவுத் தொழில் பாதிக்கப்படும் என்று கூறினார்கள். அப்பாவிகளான மேலப்பாளையவாசிகளைக் கொண்டே அந்த திட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து கைவிடப்பட வைத்தார்கள். அந்த துணி மில்கள் பம்பாயில் அமைக்கப்பட்டன. பம்பாயில் அமைக்கப்பட்ட அந்த துணி மில்களிலும் போய் வேலை செய்தவர்கள் மேலப்பாளையவாசிகளே. எந்த கைத் தொழிலான நெசவுத் தொழில் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவித்தார்களோ அந்த கைத்தறி தொழில் இன்று முற்றிலும் அழிந்து விட்டது.
மேலப்பாளையவாசிகள் அப்பாவிகள் ஏமாளிகள்.
எனவே தொழில் கல்விக் கூடமோ, ஆசிரியர் பயிற்சிக் கூடமோ, கல்லுரியோ வக்பு வாரியம் சார்பில் அமைத்துத் தர வேண்டும். மேலப்பாளையத்தை முன்னேற்றம் காணச் செய்ய வேண்டும். அதற்குரிய சரியான திட்டத்தை வகுத்து வக்பு வாரியம் சார்பில் அமைத்து தர வேண்டும். அப்படி அமைக்கப்படும்பொழுது கூட சரக்கு வண்டிகள் நிலையம், நூல் மில் நிலையம், மின் தறி துணி மில்கள் வர எந்த மேலப்பாளையவாசிகள் தடையாக ஆக்கப்பட்டார்களோ அவர்களைக் கொண்டே எதிர்ப்பு தெரிவிக்க வைக்கப்படுவார்கள். அப்பொழுது நீங்களும் பின் வாங்கி விடாமல் மேலப்பாளையவாசிகள் அப்பாவிகள் ஏமாளிகள் என்பதை கவனத்தில் கொண்டு அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

No comments: