Saturday, February 02, 2019

*திருச்சி இஜ்திமா களத்தில்ஹுத் ஹுத் பறவை ...*

திருச்சி இனாம் குளத்தூர்... இஜ்திமா பந்தலை பறந்த வண்ணம் சுற்றிப் பார்த்த ஹுத் ஹுத் பறவைக்கு ஆச்சரியம் ... மூன்று லட்சம் என்றார்கள் முப்பது லட்சம் என்றார்கள் தலைகளை பார்த்தால் கோடிகளை தாண்டும் போல் தெரிகிறதே... மாஷா அல்லாஹ்.... பிரம்மிப் போடு கூட்டத்தினுள் புகுந்து சென்ற ஹுத் ஹுத் பறவைக்கு ஆச்சரியங்கள் பல காத்திருந்தது...
https://fazlulilahi.blogspot.com/2019/02/blog-post.html

கூட்டத்தில்யாரும் படுத்துக்கொண்டு இருக்கவில்லை... பேசிக்கொண்டிருக்கவில்லை ... செல்போனை நோண்டிக் கொண்டு இருக்கவில்லை.... அரைத்தூக்கத்தில் தலையாட்டி பயான் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.... வந்திருந்த அனைவரும் பொறுப்புடன் உட்கார்ந்து பயான் கேட்டுக்கொண்டு இருந்ததைப் பார்த்த ஹுத் ஹுத் விற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை..
மாஷா அல்லாஹ் ...மாஷா அல்லாஹ்.... இது ஹிதாயத்திற்கான கூட்டம் தான்.. நாம் தான் இவர்களை தவறாக புரிந்து கொண்டோம்...
ஹுத் ஹுத் வும் ஒரு ஓரத்தில் அமர்ந்து ஸஅத் சாஹிபின் பயான் கேட்க ஆரம்பித்தது ...
" என் பெயருக்கு பின்னால் *மௌலானா* என்று அழைப்பதை விட்டுவிடுங்கள். நான் எந்த மவ்லவி பட்டமும் மதரசாவில் ஒதி வாங்கியதில்லை.. இங்கு நான் என் பலத்தை காட்டி தப்லீக்கின் அடுத்த கட்ட தலைவராக ஆகுவதற்காக இந்த கூட்டத்தை கூட்டவில்லை... தேவ்பந்த்தின் ,பாகியாத்தின் ஃபத்வாக்கள் எனக்கு எதிராக இருப்பதால் இந்த இஜ்திமாவோடு என் தலைமை பதவியை ராஜினாமா செய்கிறேன்... நீங்களே நம் தப்லீக்கின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் " ... என்று ஸஅத் மௌலானாவின் உரை பந்தல் முழுக்க உரக்க கேட்டுக் கொண்டிருந்தது.... ஆஹா இவ்வளவு நல்ல மனிதரை நாம் குறையாய் பேசிவிட்டோம்...
வருத்தத்துடன் ஹுத் ஹுத் பந்தலை கொஞ்சம் அப்படியே சுற்றி வந்தது...
*அமீர் சாப்புகள் எல்லாம் மொட்டையடித்து மீசையை வழித்து அலங்கோலமாய் இல்லாமல் முடி வளர்த்து மீசையை அழகாய் ஒதுக்கிவிட்டு நபியின் உண்மையான சுன்னத்தான கோலத்தில் வலம் வந்து கொண்டிருந்தது ஹுத் ஹுத் வின் கண்களே பட்டுவிடும் போலிருந்தது...*
ஒரு ஓரத்தில் கைலியை முட்டி வரை உயர்த்தி கட்டியிருந்த ஒரு சாத்தியிடம் ஒரு அமிர்சாப் உபதேசம் செய்து கொண்டிருந்தார்..." தம்பி நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் கரண்டை காலுக்கு கீழேதான் வேட்டி கட்ட கூடாது என்று தடுத்து இருக்கிறார்கள் அதற்காக நீங்கள் முட்டிவரை வேட்டியை உயர்த்தி கட்டி இருப்பது பார்ப்பதற்கே நல்லா இல்லை.. கைலியை இறக்கி கட்டுப்பா"... என்று கூறிக் கொண்டிருந்தார்...
ஆஹா ! ஆஹா ! எவ்வளவு மாற்றம் ... ஹுத் ஹுத் விற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை...
பள்ளி அமீர் சாப் களுக்கும், நிர்வாகிகளுக்கும் பக்கத்து அரங்கத்தில் காலை பத்து மணிக்கு *குஸுசி* பயான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது விரைந்து செல்லுங்கள்"... என்று ஒரு அறிவிப்பு மைக்கில் ஒலித்தது...
பறந்து சென்ற ஹுத் ஹுத் முதல் ஆளாய் பயான் கேட்க வசதியாய் அரங்கத்தின் ஒரு கம்பியில் அமர்ந்து கொண்டது..
பலதடவை ஜில்லா போய் பழக்கப்பட்ட ஓர் மௌலாவின் உரை ஆரம்பமானது... பள்ளி ஆலிம்களின் கண்ணியம் காப்பது பற்றி அவர் பேசிய உரை கேட்டு ஹுத் ஹுத்விற்கு புல்லரித்தது....
"நீங்கள் என்னதான் ஜில்லா போயிருந்தாலும் நீங்கள் மௌலவி ஆக முடியாது . சிறுவயதிலேயே ஊரைப் பிரிந்து உறவைப் பிரிந்து பல வருடங்கள் ஆசிரியருக்கு முன் மண்டியிட்டு மார்க்கக் கல்வி கற்ற ஆலிமின் முன் நாம் ஒருபோதும் சமமாக மாட்டோம் .. எனவே உங்கள் பள்ளியில் உங்களின் கால்களுக்கு கீழே ஆலிமை அமர வைத்து நீங்கள் சேரிலே ஓர் ஆலிமை போல் அமர்ந்து ஒரு போதும் பயான் செய்யாதீர்கள்"...
"குர்ஆன்தான் நமக்கான வேதம் . எனவே தஃலீம் கிதாப்பு தான் என் முதல் வேதம் .. அதைத்தான் அதிகாலையில் பள்ளி இமாம் படிக்க வேண்டும் என்று சட்டம் போட்டு அதை வாசிக்காத.... குர்ஆன் தர்ஜுமா வாசிக்கிற இமாமை எதிரியாய் நினைத்து பள்ளியிலிருந்து அகற்ற நினைப்பது மாபெரும் பாவமாகும்" என்பதை உணருங்கள் ..."
ஹுத் ஹுத் மெய் மறந்து உரை கேட்டுக் கொண்டிருந்தது ...
" திக்ருகளின் சிறப்புகளை நாம் படிப்பது முக்கியம் அல்ல .. மாறாக பள்ளி இமாம் நடத்தும் திக்ருகளின் சபைகளிலும் அமர்வதற்கு முயற்சி செய்யுங்கள்... *ஷப் ஷாரி* இரவுகளில் மட்டும் பள்ளிகளில் தங்குவது பெரிய விஷயமல்ல .. மாறாக புனித மிஃராஜ் , பரா அத் இரவு போன்ற இரவிற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்...
அமீர் சாப் உரை தொடர கேட்டுக் கொண்டிருந்த ஹுத் ஹுத் விற்கு புல்லரித்தது ..
*மாஷா அல்லாஹ்... இந்த இஜ்திமா பெரிய மாற்றத்தை நோக்கி செல்கிறதே.... சரிதான் உலகமே நொடிக்கு நொடி மாறும்போது இவர்கள் மாறுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே*
அமீரின் உரை மேலும் தொடர்ந்தது ...
"நீங்கள் சாத்திகளை கூட்டிக்கொண்டு ஜமாத் போனால் வசதியான பள்ளிவாசல்களை தேடி போகாதீர்கள் ... எத்தனையோ கிராமங்களில் சிறிய பள்ளிகள் இருக்கின்றன... அதில் பள்ளியின் தொடர்பு இல்லாத எத்தனையோ மக்கள் அங்கு இருக்கிறார்கள் ... எனவே அங்கு செல்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள் மேலும் பள்ளிவாசலில் தங்கும்போது அதன் ஒழுக்கங்களை பேணுங்கள்... உள் பள்ளியில் உறங்குவதற்கு இதிகாஃப் உள்ளவர்களுக்கே அனுமதி ... அதுபோல அங்கு நீங்கள் உபயோகிக்கும் மின்சாரம் தண்ணீருக்கு நாளை இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் .. எனவே மூன்று நாள் முடித்துவிட்டு ஒரு பள்ளியில் இருந்து கிளம்பும்போது கண்டிப்பாக மின்சாரத்தை உபயோகப்படுத்தியதற்கு அந்த பள்ளிக்கு கண்டிப்பாக சிறு தொகை கொடுத்து விட்டு வாருங்கள் ... *நாம் கறி மீன் சாப்பிடுவதில் எப்படி கணக்கு பார்ப்பதில்லையோ அதுபோல் அல்லாஹ்வின் பள்ளிக்கு கொடுத்துவிட்டு செல்வதில் கணக்கு பார்க்காதீர்கள்"*..
ஹுத் ஹுத் விற்க்கு மயக்கம் வராத குறைதான் ... இறக்கைகளை தட்டி பேசிய அமீரையும் , அரங்கத்தையும் மனதார பாராட்டிவிட்டு அடுத்த அரங்கம் நோக்கி பறந்தது ...
வழியில்... *அரசியல் இயக்க தலைவர்கள் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருக்க "நாங்கள் எல்லாம் ஹிதாயத்தை நாடியே வந்திருக்கிறோம் .. அரசியல் நோக்கத்தோடு வரவில்லை"*... என ஹுத் ஹுத் விடம் சத்தியம் செய்ய சந்தோஷத்துடன் பறந்தது ஹுத் ஹுத் ...
மூத்த உஸ்தாத் மார்கள் எல்லாம் இஜ்திமா வந்ததை கேள்விப்பட்டு அங்கிருந்தஉலமாக்களின் அரங்கத்தில் நுழைந்தது ஹுத் ஹுத் ...
என்னதான் மூத்த ஆலிமானாலும்,பேராசிரியர் ஆனாலும் , ஏன்.. மதரஸா நாஜிரே ஆனாலும் ஜில்லா போயிருந்தால் மட்டுமே மேடையில் அமரவும் ,பேசவும் அனுமதி .. இங்கு எப்படியோ தெரியவில்லையே ...? என்கிற பதைபதைப் போடு உள்ளே நுழைந்த ஹுத் ஹுத் விற்கு ஆச்சரியம் காத்திருந்தது ...
ஜில்லா போன இமாம்கள் முன்னாள் தலைவர்கள் கீழே அமர்ந்து இருக்க ஜில்லா போகாத முதர்ரிசு களுக்கும் மதரஸா நாஜீர்களுக்கும் , பேராசிரியர்களுக்கும் கண்ணியம் கொடுத்து அவர்கள் மேடையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த கண்கொள்ளா காட்சி ஹுத் ஹுத் வின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது....
கண்ணீரை தன் இறக்கைகளால் துடைத்துக் கொண்டே வெளியே வந்த ஹுத் ஹுத் விற்கு இந்த மாற்றங்களை பார்த்து தன் நிலை திரும்பவே சில நிமிடம் ஆனது ...
மூன்றாம் நாள் லுஹர் தொழுகை முடிந்து பெரிய பந்தல் நிரம்பி வழிந்தது .. மாநாட்டில் தீர்மானம் ஸ அத் மௌலானாவால் வாசிக்கப்பட்டு கொண்டிருந்தது...
" நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருப்பதால் யாரும் இப்போது 40 நாள் ஜமாஅத் செல்ல வேண்டாம் என்றும் ஒற்றுமையாய் ஓட்டு போட்டு எதிரிகளை தோல்வியடைய செய்ய வேண்டும் என்றும் இந்த இஜ்திமாவின் மூலம் தீர்மானம் நிறைவேற்ற படுகிறது...
மேலும் விரைவில் பாபரி மசூதியை கட்டவேண்டும் எனவும் , அதுபோல் ஆங்காங்கே முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்றும் இந்த இஜ்திமா கேட்டுக்கொள்கிறது.. *குறிப்பாக இங்கு வந்திருக்கும் அமீர் சாப்புகளால் இந்த இஜ்திமா விற்கு கோடிக்கணக்கில் செலவழித்தது போல் விரைவில் ஒரு கோடி ரூபாய் திரட்டி கடந்த புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை நாகை மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்கு நிவாரணமாக விரைவில் வழங்கப்படும்..* என்று இந்த இஜ்திமாவில் தீர்மானம் இயற்றப் படுகிறது....
இறுதியில் ஸ அத் மௌலானாவால் நீண்ட துஆ ஒத ... அதன் பின் அனைவரும் எழுந்து நின்று நபி (ஸல்) அவர்களின் மீது யா நபி பைத் ஒத இஜ்திமா மாநாடு இனிதே நிறைவு பெற்றது ...
ஹுத் ஹுத் விற்கு ஒன்றும் புரியவில்லை .. மாஷா அலலாஹ் .. இவர்களிடம் எவ்வளவு பெரிய மாற்றங்கள் ... விரைவில் பார்த்த கேட்ட விஷயங்களை எல்லாம் ஊர் சென்று இவர்களை பற்றி ஒரு தொடராக எழுதி மக்கள் மனதில் இந்த தப்லீக்கிகளை பற்றி இருக்கிற கெட்ட எண்ணங்களை போக்க வேண்டும் ...
சந்தோஷத்துடன் ஹுத் ஹுத் பறக்க ஆரம்பித்தது ...
*அல்லாஹு அக்பர் ... அல்லா......ஹு அக்பர் ...* அதிகாலை பாங்கோசை காதில் அறைய திடுக்குற்று எழுந்தது ஹுத் ஹுத் ... அப்படியானால் இது வரை கண்டதெல்லாம் கனவா...? பனிக்காற்று தன் இறகுகளின் மேலே மோத நிஜம் உரைக்க.... அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றது ஹுத் ஹுத் ...
*கண்களில் தூக்கமும் , கண்ட கனவும் களைய.. விரக்தியில் பள்ளியை நோக்கி விரைந்து சென்றது ஹுத் ஹுத் ..*
"இந்த இஜ்திமா வின் பரக்கத்தால் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் தொழுகையாளிகள் நிரம்பி வழிவார்கள் .. என்று யாரோ ஒரு புண்ணியவான் தளத்தில் எழுதியது ஞாபகம் வர பள்ளியை பார்த்ததில் வழக்கமான ஒன்றரை சப்பே நின்றிருந்தது .. அந்த அதிகாலை தொழுகையில் இஜ்திமா விற்கு எல்லோரையும் அழைத்து போன அமீர் சாப்பை காணவில்லை ...
காரணம் கேட்டதில் அனைவரையும் அழைத்துச் சென்றதில் அலுப்பாம் .. அடுத்த வக்துக்கு கண்டிப்பாய் வருவதாய் சொல்லி இருக்கிறாராம் ...
ம் .... எத்தனை ஆயிரம் ஹஜ்ரத் ஜீ வந்தாலும் இவர்களை திருத்தவே முடியாது ..
ஹுத் ஹுத் வரிசையில் நின்று தொழ ஆரம்பித்தது ...
*وَقَالُوْا قُلُوْبُنَا فِىْۤ اَكِنَّةٍ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَيْهِ وَفِىْۤ اٰذَانِنَا وَقْرٌ وَّمِنْۢ بَيْنِنَا وَبَيْنِكَ حِجَابٌ فَاعْمَلْ اِنَّنَا عٰمِلُوْنَ‏ *
*மேலும் அவர்கள்: “நீர் எதன் பக்கம் எங்களைஅழைக்கின்றீரோ அதனை விட்டும் எங்கள் இருதயங்கள்மூடப்பட்டுள்ளன .. எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது; எங்களுக்கிடையிலும் உமக்கிடையிலும் திரை இருக்கிறது; (நாங்கள் திருந்த மாட்டோம் )ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்து கொண்டிருக்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.*
இமாம் ஒதிய குர்ஆனின் ஆயத் அர்த்தமாய் ஹுத் ஹுத் வின் காதுகளில் வந்து விழுந்தது ..
_____________________________
*ஹுத் ஹுத் பறவையின் சிறகுகள் இன்னும் விரியும் இன்ஷா அல்லாஹ்...*
_____________________________

https://m.facebook.com/story.php?story_fbid=1096245843869781&id=100004531261903

No comments: