இரண்டு கோடிக்கும் மேலான சொத்துக்களை இழந்து நிற்கும் பள்ளி வாசலின் பரிதாப நிலை.
திருநெல்வேலி டவுண் சாலியா தெருவில் உள்ளது மஸ்ஜித் மஹ்மூதிய்யா ஜுமுஆ பள்ளிவாசல். இது ஹிஜிரி 1297 இல் (ஆங்கில ஆண்டு 1880 இல்) கட்டப்பட்டது. டிஸ்ரிக் முன்சிப் ஆக இருந்த மதார் ஸாஹிப் அவர்கள் இதை தனது சொந்தச் செலவில் கட்டினார்கள்.
80 பேர்கள் மட்டுமே நின்று தொழும் அளவுக்கு கட்டப்பட்ட இந்த பள்ளிவாசலுக்கு ஏராளமான சொத்துக்களையும் டிஸ்ரிக் முன்சிப் மதார் ஸாஹிப் அவர்கள் எழுதி வைத்துள்ளார்கள். இமாம், முஅத்தின் சம்பள வகைக்கும் விளக்கு எரிக்க எண்ணெய் வகைக்குமாக சில வீடுகளையும் ஒரு தோப்பையும் எழுதி வைத்துள்ளார். ரமழானில் நோன்பு கஞ்சி வகைக்காக சாலியா தெருவில் 2 வீடுகளை எழுதி வைத்துள்ளார். மேலும் பள்ளிவாசலுக்காக திருநெல்வேலி குற்றலாம் ரோட்டில் 2 கடைகள். திருநெல்வேலி டவுண் மேல ரத வீதியில் 2 கடைகள். என சொத்துக்களையும் எழுதி வைத்துள்ளார்.
ஆக இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு இரண்டு கோடிக்கும் மேலாகும். 4 கடைகள் ஒரு தோப்பும் 2 வீடுகள் இரண்டு கோடிக்கு மேலா என எண்ணாதீர்கள். இது புற நகர் அல்ல. இவை யாவும் திருநெல்வேலி டவுணின் மிக முக்கியமான மத்திய பகுதியில் உள்ளது.
இப்படி இரண்டு கோடிக்கு மேல் சொத்து உடைய இந்த பள்ளிவாசலை 1989இல் இழுத்து மூடி விட்டார்கள். மூடியவன் ஆர்.எஸ்.எஸ். காரனோ இந்து முன்னணியோ அல்ல. ஒரு முஸ்லிம் பெயர் தாங்கிதான். அவன் தான்தான் அக்குதார் என்று கூறி இழுத்து மூடி விட்டான். அத்துடன் சிறுகச் சிறுக பள்ளியின் எல்லா சொத்துக்களையும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு விற்று விட்டு திருநெல்வேலியை விட்டே ஓடி விட்டான்.
வேறு மாவட்டத்துக்கு சென்று விட்டாலும் பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்படாமல் இருக்க சதி வேலைகளை செய்து கொண்டே இருந்தான். பள்ளியை மீண்டும் திறந்து விட்டால் அவனது மோசடி மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்பதால், யாராவது பள்ளியின் பக்கம் தொழ வந்தால் முஸ்லிம் பெண்களை விட்டே கெட்ட அறுவெறுப்பான வார்த்தைகளால் திட்ட வைத்திருந்தான். அதற்காகவே சில முஸ்லிம் பெண்களை ஏற்பாடு செய்து வைத்திருந்தான். முஹல்லாவாசிகள் ஜமாஅத் நிர்வாக ரீதியாக ஒன்று கூட முயன்றால் முஸ்லிம் அல்லாத ரவுடிகளைக் கொண்டு மிரட்டி வந்தான்.
இந்தச் சூழலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2004 இல் திருநெல்வேலி டவுண் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து வந்த ஒரு மகான் அந்த பள்ளியை திறந்து நிர்வாகம் செய்தான். பள்ளியின் பெயரால் வசூல் செய்தான். தமிழ்நாட்டில் நாங்கள் மட்டும்தான் ஏகத்துவத்தை சொல்லுகிறோம் என மார் தட்டிக் கொள்ளும் அமைப்பின் ஆதரவில் உள்ள அவன் தொழிலே பள்ளியை வைத்து பிழைப்பு நடத்துவதுதான் என்பது பின்னர்தான் தெரிய வந்தது.
பள்ளிவாசல் இடத்தில் நின்ற பெரிய பெரிய மரங்கள் பிற சமுதாயத்தவர்கள் வெட்டி கொண்டு சென்றார்கள். அதைப் பார்த்து பிடித்த அந்த முஹல்லாவைச் சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் அஷ்ரப் என்பவர் விசாரித்தபொழுதுதான் பள்ளியை வைத்து பிழைப்பு நடத்துபவனின் முகத்திரை கிழிந்தது.
நன்றாக இருந்த பள்ளிச் சுவர்களின் வெளிப்புறத்தை சேதப்படுத்தி இருக்கிறான். அதை போட்டோ எடுத்து பள்ளியின் மராமத்து பணிக்கு உதவுங்கள் என்ற பெயரால் வசூல் செய்துள்ளான் இந்த விபரமும் தெரிய வர ஆட்டோ ஓட்டுனர் அஷ்ரப் அவர்கள் கடுமையாக தட்டிக் கேட்டு ஜமாஅத்தாரிடம் கணக்கு காட்டச் சொல்லி உள்ளார்.
ஆத்திரம் அடைந்த பள்ளித் திருடன் அவரை ஆள் வைத்து அடிக்க முயன்றான். பள்ளியின் பெயரால் பிழைப்பு நடத்தி வரும் பள்ளித் திருடனின் முகத்திரை கிழிந்ததும் 2005 ஆரம்பத்தில் பள்ளியை பூட்டி விட்டான். ஏகத்துவத்தை சொல்லுகிறோம் என மார் தட்டிக் கொள்ளும் அமைப்பின் ஆதரவில் உள்ள அவன். பள்ளியை சுற்றியுள்ள முஸ்லிம் அல்லாதவர்களின் கடும் எதிர்ப்பு உள்ளது என்று கூறி சாவியை திருநெல்வேலி வக்பு போர்டில் கொடுத்து விட்டான்.
ஆட்டோ ஓட்டுனர் அஷ்ரப் அவர்களும் அந்த முஹல்லாவைச் சார்ந்த பலரும் முயற்சி செய்தும் இரண்டு திருடன்களின் கூட்டணி எதிர்ப்பால் அந்தப் பள்ளியை மீண்டும் திறக்க முடியவில்லை. மாவட்ட வக்பு நிர்வாகம் பள்ளிச் சாவியை மஹல்லாவாசிகளிடம் கொடுக்க பயந்தது. எனவே அந்த முஹல்லாவாசிகள் சுற்று வட்டாரத்தில் உள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினரை அணுகினர் பள்ளியை திறக்க சுன்னத் வல் ஜமாஅத்தினர் யாரும் முன் வரவில்லை.
ஜமாஅத்துல் உலமா சபையினரை அணுகினர் ஜமாஅத்துல் உலமா சபையினரும் முன் வரவில்லை. தப்லீக் ஜமாஅத்தினரை அணுகினார்கள். உங்கள் பள்ளியில் பிரச்சனை உள்ளது. அதை நீக்கி விட்டு சொல்லுங்கள். மேலும் உங்கள் பள்ளியில் கழிவரை வசதி இல்லை அதனையும் ஏற்பாடு செய்து விட்டு சொல்லுங்கள் என தப்லீக் ஜமாஅத்தினர் கூறி விட்டனர். இப்படி சுற்று வட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு சபையையும் ஜமாஅத்தினரையும் பல முறை அணுகியும் அந்தப் பள்ளியை மீண்டும் திறக்க யாரும் முன் வரவில்லை.
இறுதியாக த.மு.மு.க. மாவட்ட நிர்வாகி உஸ்மான் அவர்களை அணுகினார்கள். அவரும் த.மு.மு.க. மாநில செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களும் பாழடைந்த நிலையில் முட்செடிகளால் சூழப்பட்டிருந்த பள்ளியை போய் பார்வையிட்டனர். 2007 ஜனவரியில் த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தூத்துக்குடிக்கு வந்தார்கள். அப்பொழுது அப்பாஸ், அஷ்ரப், காதர், சாகுல் ஹமீது போன்ற மஸ்ஜித் மஹ்மூதிய்யா ஜுமுஆ பள்ளிவாசல். முஹல்லா பெரியவர்கள் சென்று சந்தித்தனர். இந்தப் பள்ளியை திறந்து த.மு.மு.க.வினரே நிர்வாகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். முஹல்லாவாசிகள் நிர்வாகம் செய்யுங்கள் த.மு.மு.க. ஒத்துழைப்புத் தரும் என்று கூறினார்கள்.
நாங்கள் நிர்வாகம் செய்தால் பள்ளியின் சொத்துக்களை விற்றுத் தின்றவனும் பள்ளியின் பெயரால் வசூல் மோசடி செய்தவனும் ஆள் வைத்து மிரட்டுவார்கள். எனவே த.மு.மு.க.வினரே நிர்வாகம் செய்ய வேண்டும் என முஹல்லாவாசிகள் வற்புறுத்தினார்கள்.
முதலில் பள்ளியை திறக்க உரிய முயற்சி மேற்கொள்ளுமாறு அப்பொழுது த.மு.மு.க. மாவட்ட வர்த்தகர் அணி தலைவராக இருந்த உஸ்மான் அவர்களை த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பணித்தார்கள். பள்ளியை திறந்தால் இந்து முஸ்லிம் கலவரம் வரும் என்று பள்ளித் திருடன் பூச்சாண்டி காட்டியதால் மாவட்ட வக்பு நிர்வாகம் பள்ளியை திறக்க தயக்கம் காட்டி வந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி அவர்கள் 26.3.07 அன்று பொறுப்பு ஏற்றார்கள். 29.3.07 அன்று அஸரில் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பூட்டைத் திறந்து மஃ ரிபு தொழுகை நடத்தி விட்டு தகவல் தர வேண்டும் என்று திருநெல்வேலி வக்பு அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார். உடனே அன்று மஃரிபிலிருந்து மீண்டும் தொழுகை ஆரம்பமானது. உபயோகப்படுத்தப்படாததால் தூசிகளால் மூடப்பட்ட பள்ளியை த.மு.மு.க. தொண்டர்களும் முஹல்லாவாசிகளும் சுத்தம் செய்தனர். மீண்டும் ஒலி பெருக்கியில் பாங்கொலி கேட்டதால் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் பார்வை பள்ளியின் பக்கம் திரும்பியது.
1989க்குப் பிறகு முறையான எந்த மார்க்கப் பிரச்சாரமும் அங்கு நடைபெறவில்லை. 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக 29.4.2007 நெல்லை இப்னு கலாம் ரசூல் அவர்களைக் கொண்டு இஸ்லாமிய பிரச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டது. இருந்தாலும் தொழச் வந்தவர்கள் மீண்டும் பெண்களைக் கொண்டு பேச வைக்கப்பட்டார்கள். புதிய நிர்வாகிகள் மிரட்டப்பட்டார்கள். அஷ்ரப் அவர்களை தாக்க அஷ்ரப் அவர்கள் வீட்டுக்கு அடையாளம் தெரியாத சிலர் ஆயுதங்களுடன் வந்தார்கள். அப்பொழுது அஷ்ரப் அவர்கள் வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார்.
6.5.2007 அன்று நெல்லை வந்த வக்பு வாரிய தலைவரும் த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளருமான எஸ். ஹைதர் அலி அவர்கள் பள்ளி இடங்களை பார்வையிட்டார்கள். பள்ளிக்கு தொழ வருபவர்களை மிரட்டக் கூடியவர்களுக்கும் பெண்களை தூண்டி விட்டு பேச வைப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்து சென்றார்கள்.
முறையாக பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது. 11 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. த.மு.மு.க. நெல்லை மாவட்டச் செயலாளர் உஸ்மான் அவர்கள்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று முஹல்லாவாசிகள் ஒரு மனதாக முடிவு செய்து விட்டார்கள். செயலாளராக ஆட்டோ ஓட்டுனர் அஷ்ரப் அவர்களையும் பொருளாளராக எம். எஸ். காதர் அவர்களையும் தேர்வு செய்துள்ளார்கள்.
பள்ளியில் கழிவரை வசதி இல்லாததால் மரக் கம்புகளையும் ஓலை தடுப்புகளைக் கொண்டும் பிஸாப்கானா உருவாக்கினார்கள். சில சமூக விரோதிகள் இரவோடு இரவாக வந்து அதை பிரித்து எரிந்து விட்டு போய் விட்டார்கள். இந்தக் குறையை நிவர்த்தி செய்ய புதிய நிர்வாகிகள் பொது வேண்டுகோள் வைத்தனர். அதை ஏற்று திருநெல்வேலி டவுணில் உள்ள ஒரு பிரமுகர் இரு சிறிய கழிவரைகளையும் ஒழுச் செய்வதற்குரிய பைப்புகளையும் வைத்துக் கொடுத்துள்ளார். பள்ளியை வைத்து பிழைப்பு நடத்துபவன் சேதப்படுத்திய வெளிப்புறச் சுவர்களையும் பூசி கொடுத்துள்ளார்.
சாலியா தெரு மஸ்ஜித் மஹ்மூதிய்யா ஜுமுஆ பள்ளிவாசல் திருநெல்வேலி டவுணிலிருந்து தச்சநல்லூர் போகும் வழியில் மெயின் ரோட்டில் உள்ளது. பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட பிறகு அந்த வழியாகச் செல்லும் முஸ்லிம் அல்லாதவர்களில் தண்ணி பார்ட்டிகள் வந்து பள்ளியின் பில் புக் தாருங்கள் என கேட்டு வருகிறார்கள். அவர்களை விசாரித்தபொழுதுதான் பள்ளி பெயரால் வசூலித்து அறுபது நாற்பது என பங்கு போடப்பட்டுள்ள விபரங்கள் தெரிய வந்துள்ளது.
இப்பொழுது பள்ளியை வைத்து பிழைப்பு நடத்துபவன் திருநெல்வேலியில் வேறு ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிச் சுவர்களை அவனே சேதப்படுத்தி போட்டோ எடுத்து பள்ளியின் மராமத்து பணிக்கு உதவுங்கள் என்ற பெயரால் வசூல் செய்து வருகிறான். திருநெல்வேலியில் வசூல் செய்தால் மாட்டிக் கொள்வான் என்பதால் சென்னை போன்ற தொலை தூர நகரங்களுக்கும் சிங்கப்பூருக்கும் ஆள் அனுப்பி வசூல் செய்து வருகிறான் என்ற தகவல் கிடைத்துள்ளது. எனவே திருநெல்வேலியில் உள்ள சுத்து பத்து கிராமத்து பள்ளி பெயரால் யாரும் வசூலுக்கு வந்தால் நன்கு விசாரித்துக் கொள்ளுங்கள். பள்ளியின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களிடம் எதையும் கொடுத்து ஏமாறாதீர்கள்.
மஹ்மூதிய்யா பள்ளிக்கு சற்று அருகாமையில் ஒரு கிறஸ்தவ ஆலயம் உள்ளது. பள்ளிக்கு மிக மிக அருகில் ஒரு இந்துக் கோயில் உள்ளது. ஆக சாலியா தெரு மஸ்ஜித் மஹ்மூதிய்யா ஜுமுஆ பள்ளிவாசல் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என பல மதத்தவர்கள் சூழ அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பள்ளி மூடி கிடந்ததால் முஹல்லாவாசிகள் இஸ்லாம் மார்க்கம் பற்றிய விபரங்களை மறந்து விட்டனர். புதிய முஸ்லிம்கள் என்றே சொல்ல வேண்டும். பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ள அவர்களுக்கு இஸ்லாமிய நூல்களை அனுப்பிக் கொடுங்கள். உருது மொழியை தாய் மொழியாகக் கொண்ட அவர்களுக்கு உருதுவில் உள்ள நூல்களும் பயன்படும்.
பள்ளியின் தரை கூரை மற்றும் சுற்றுப் புறங்கள் மராமத்து செய்யப்பட வேண்டிய மோசமான நிலையில்தான் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடக் கூடியவர்கள் புனிதமிக்க ரமழானில் செய்யும் உதவிகளை தலைவர் (9443310150) செயலாளர் (9940842905) பொருளாளர் (9442063308) ஆகியவர்களை தொடர்பு கொண்டு உதவலாம். அல்லது நீங்களோ உங்கள் பிரதிநிதிகளோ நேரில் வந்து முழுமையாகவோ ஏதாவது ஒரு மராமத்து பணியையோ செய்து கொடுக்கலாம். நீங்களோ உங்கள் பிரதிநிதிகளோ நேரில் வந்து செய்வதையே தலைவர், செயலாளர், பொருளாளர் விரும்புகிறார்கள். வஸ்ஸலாம்.
Thursday, September 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment