Thursday, June 04, 2015

சுவனத்தில் ஆதம்[அலை]-ஹவ்வா[அலை] ஆடை அவிழ்ந்ததா? பீஜே அன்றும்-இன்றும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான். அல்-குர்'ஆன் 7 ;22

மேற்கண்ட இந்த வசனத்திற்கு, ''ஆதம்-ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் அந்த மரத்தினை சுவைத்தவுடன் அவர்களின் ஆடை நீங்கி, அவர்களின் வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவர்கள் சுவனத்தின் இலைகளைக் கொண்டு மறைத்துக் கொண்டனர்.''என்ற விளக்கத்தை அறிஞர்கள் முன்வைத்துள்ளார்கள். அறிஞர்களின் இந்த வாதம் தவறு என்று கூறும் அறிஞர் பீஜே அவர்கள்
''இம்மரத்தைச் சாப்பிடும் முன் ஆண், பெண் என்ற இனக் கவர்ச்சி அவர்களுக்கு இருக்க வில்லை. இம்மரத்தைச் சாப்பிட்டபின் அவர் களுக்குப் பாலுணர்வு ஏற்பட்டது என்று கருதுவது தான் சரியாகும். இதைச் சாப்பிட்டவுடன் சொர்க்கத்தின் இலைகளால் இருவரும் தம்மை மறைத்துக் கொண்டார்கள் என்று அடுத்தடுத்த வசனங் களில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இம் மரம் பாலுணர்வை ஏற்படுத்தும் மரம் என்பது தெரியவரும்.'' என்று தனது திருக்குர்'ஆன் தமிழாக்கம் முதல் பதிப்பில் சொன்னார். பின்னாளில் எழுந்த விமர்சனங்களை கண்டு, இப்போது இறுதியாக ''அம்மரத்தை புசித்ததால் அவர்களின் வெட்கத் தலங்களின் தனித்தன்மை அவர்களுக்கு தெரியவந்தது.'' என்று கூறுகிறார்.

இந்த வசனத்தை பொருத்தவரை இது பீஜே அவர்களின் மூன்றாவது பரிமாணமாகும்.

பரிமாணம்;1 இந்த மரத்தை நெருங்காதீர்கள் என்று திருக்குர்ஆன் 2:35, 7:19,20,22, 20:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது குறித்து பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஆனால் திருகுர்ஆனிலும், நபிமொழிகளிலும் இது எந்த மரம் எனக் கூறப்படவில்லை. மரம் எதுவென் பதில் முக்கியத்துவம் ஏதுமில்லை. எல்லா வசதிகளையும் செய்து கொடுத்த பின்பும் ஒரே ஒரு மரத்தை நெருங்காமல் ஆதம்(அலை) தம்மைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதும், அவர் வெளியேற்றப்பட்டதற்கு அது காரணமாக அமைந்தது என்பதுதான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். திருகுர்ஆனிலும், நபிமொழியிலும் கூறப்படாததைக் கூறுவோர் இறைவன் பெயரில் இட்டுக் கட்டிய குற்றத்தைச் சுமப்பவர்களாவர்.
பரிமாணம்;2 இம்மரத்தைச் சாப்பிடும் முன் ஆண், பெண் என்ற இனக் கவர்ச்சி அவர்களுக்கு இருக்கவில்லை. இம்மரத்தைச் சாப்பிட்டபின் அவர்களுக்குப் பாலுணர்வு ஏற்பட்டது என்று கருதுவது சரியாகும்.
பரிமாணம்;3  ''அம்மரத்தை புசித்ததால் அவர்களின் வெட்கத் தலங்களின் தனித்தன்மை அவர்களுக்கு தெரியவந்தது.''
முதல் பரிமாணத்தில் அது எந்த மரமாக இருந்தால் நமக்கென்ன என்கிறார். இரண்டாவது பரிமாணத்தில் அது பாலுணர்வை தூண்டிய மரம் என்கிறார். மூன்றாவது பரிமாணத்தில் அது அவர்களின் வெட்கத்தலங்களின் தனித்தன்மையை உணர்த்திய மரம் என்கிறார். இப்போதைய தனது பரிமாணங்களுக்கு பீஜே ஒரு வசனத்தை மேற்கோள் காட்டுகிறார். அது இதுதான்
"நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.(20:118)
பார்த்தீர்களா! இந்த வசனத்தில் அல்லாஹ் சுவனத்தில் நிர்வாணமாக இருக்கமாட்டீர் என்று சொல்கிறான். பிறகு எப்படி ஆதம்-ஹவ்வா நிர்வானமகியிருப்பார்கள் என்று கூறுகிறார். அறிஞர் பீஜேயின் வேலையே முன்னால் உள்ள வசனங்களையும், பின்னால் உள்ள வசனங்களையும் விட்டுவிட்டு தனக்கு தேவையானதை மட்டும் வெட்டி ஒட்டுவதுதான். மேற்கண்ட வசனத்திற்கான விளக்கம் பெற எங்கும் போக வேண்டியதில்லை. பீஜே விட்டுவிட்ட  இதையொட்டிய வசனங்களை சேர்த்து பார்த்தாலே விளங்கிக் கொள்ள முடியும். 
அப்பொழுது "ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.  (20:117
"நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.  (20:118)
"இன்னும் இதில் நீர் தாகிக்கவும், வெயிளில் (கஷ்டப்)படவும் மாட்டீர் (என்று கூறினோம்).  (20:119)
ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி "ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?" என்று கேட்டான்.  (20:120)
பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர் உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.  (20:121)
பின்னர் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான்.  (20:122)
பீஜே சொல்வது போல் வெறுமனே இறைவன் நிர்வாணமாக இருக்க மாட்டீர் என்று மட்டும் சொல்லவில்லை. ஆதம் தம்பதிகளே! இந்த சுவனத்தில் நீங்கள் பசியுடனோ, தாகத்துடனோ, வெளியில் கஷ்டப்பட்டுக் கொண்டோ இருக்கவேண்டியதில்லை என்றும் சொல்லும் இறைவன் நிர்வாணமாகவும் இருக்கமாட்டீர்கள் என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்? ஆதம் தம்பதிகளுக்கு சுவனத்தில் செய்து கொடுத்துள்ள வசதி வாய்ப்புகளை கூறுகின்றான். அந்த வசதி வாய்ப்புகளை அனுபவித்த நிலையில், ஆதம் ஹவ்வா தம்பதிகள் மாறு செய்ததால் அங்கே நிர்வாணமாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதில் அறிஞர் பீஜே குழம்புவதும்-குழப்புவதும் ஏன்? பீஜேயின் கூற்றுப்படி ஆதம் அலை, ஹவ்வா அலை ஆகியோருக்கு சுவனத்தில் நிர்வாணமே இருக்ககூடாது என்றால் அவர்கள் தாம்பத்தியத்திலும் கூட நிர்வாணம் இருக்கக் கூடாதா என்ற கேள்வி எழுமே! அதற்கு என்ன பதில் சொல்வார்? அவ்விருவருக்கும் தாம்பத்தியம் தடை செய்யப்பட்டது என்று கூறுவரா?
இதுபோக, ஆதம்-ஹவ்வா ஆடை அவிழ்ந்தது என்ற அறிஞர்களின் கருத்து தவறு என்று இன்று சொல்கிறாரே! அதே பீஜே அவர்கள், அல்ஜன்னத் டிசம்பர் 94 இதழில், 'நிர்வாணமாக குளிக்கலாமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது,
''ஆதம் ஹவ்வா இருவரும் தடையை மீறி விலக்கப்பட்டதை உண்டவுடன் அவர்களின் மறைவிடங்கள் வெளிப்பட்டன. நிர்வாணிகளாயினர்.உடனே சொர்க்கத்தின் இலைகளால் தங்களை மறைத்துக் கொள்ளலானார்கள் என்ற விபரம் 7 ;22 20;121 ஆகிய வசனங்களில் கூறப்படுகின்றது. மனிதர்கள் குறிப்பாக நபிமார்கள் தம் மறைவிடங்களை மறைத்துக் கொள்ளும் இயல்பினராகவே உள்ளனர் என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம். கணவன் மனைவி ஆகிய இருவர் மட்டுமே இருந்த நிலையில், வேறு எவரும் இல்லாத நிலையில் இறைவன் முன்னிலையில் வெட்கப்பட்டுக்கொண்டே ஆதமும் ஹவ்வாவும் தங்களை மறைந்துக் கொண்டனர்.'' என்று பதிலளித்துள்ளார்.
அதாவது இந்த பதிலில் ஏற்கனவே உறுப்பும் இருந்து, உணர்ச்சியும் இருந்து, உறுப்பின் தனித்தன்மைகளையும் உணர்ந்துள்ள மனிதன் ஒருவர் தான் கேட்கின்றார். நான் ஆடையின்றி குளிக்கலாமா என்று? உடனே அறிஞர் பீஜே, ஆதம்-ஹவ்வா அலை தம்பதியைப் பார்த்தீர்களா? அவர்கள் யாருமே இல்லாமல் தனித்திருந்த போதும், நிர்வாணமானவுடன் தங்களை மறைத்துக் கொண்டார்கள். இதுதான் மனித இயல்பு என்று கூறுகிறார். ஆனால் இன்றைக்கோ அல்ஜன்னத்தில் கூறியதற்கு மாற்றமாக, மனமுரண்டாக அடுத்தடுத்த மூன்று பரிமாணங்களைக் கண்டிருக்கிறார். இன்னும் எத்தனையோ?
நன்றி Mohammed Zubair



No comments: