Thursday, December 07, 2006

2006 டிசம்பர் 6 இல் திசை திரும்பிய பாராளுமன்றம்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 1992 டிசம்பர் 6 இல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு வந்த ஒவ்வொரு டிசம்பர் 6 களிலும் மேலப்பாளையத்தின் உணர்வுள்ள முஸ்லிம் இளைஞர்கள் வெகுண்டெலுந்தனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 ஐ துக்க நாளாக அறிவித்தனர். கறுப்புக் கொடிகளைக் கட்டி கடைகளை அடைத்து பந்த் நடத்தி பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டி வந்தனர். இந்த ஆண்டும் மேலப்பாளையத்தில் கடைகளை அடைத்து பந்த் நடத்தி எதிர்ப்பு காட்டியுள்ளனர். மேலப்பாளையம் போன்று உணர்வுள்ள முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் இது போன்று நடந்திருக்கலாம். இது அன்றி எந்த அமைப்புகளும் 92க்குப் பிறகு அமைப்பின் சார்பில் எந்த டிசம்பர் 6 ரிலும் பாபரி மஸ்ஜித் பற்றி எந்த பேச்சும் பேசவில்லை.
அது கிழட்டு நரிகளின் கூடாரமாக ஆகி விட்டது.
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கில ராணுவத்தின் துப்பாக்கி முன் ஆடையை தூக்கிக் காட்டியும் நெஞ்சை நிமிர்த்துக் காட்டியும் சுடுடா என வீரியத்துடன் கர்ஜித்த சிங்கங்கள் இருந்த முஸ்லிம் லீக் இருந்தது. 92இல் அது கிழட்டு சிங்கங்களின் கூடாரமாகக் கூட இருக்கவில்லை. கிழட்டு சிங்கங்களின் கூடாரமாக ஆகியிருந்தால் கூட அது சிங்கங்களின் கூடாரம் என்ற வீரியத்துடன் எதிரிகள் அச்சப்படும் வண்ணம் கர்ஜித்திருப்பர். ஆனால் அது கிழட்டு குள்ள நரிகளின் கூடாரமாக ஆகி இருந்தது. எனவே சடங்கு சம்பிரதாயத்துக்காக 92இல் மட்டும் அறிக்கை விட்டனர்.
எல்லா அவைகளிலும் பாபரி மஸ்ஜித் பற்றி பேசும் நிலை வந்தது.
அதனால் 92க்குப் பிறகு பாபரி மஸ்ஜித் விஷயத்தில் முஸ்லிம் லீக் மய்யத் லீக்கானது. எனவே டிசம்பர் 6இல் கூட பாபரி மஸ்ஜித் பற்றி சட்டமன்றம் பாராளுமன்றம் உட்பட நாட்டில் எங்குமே பேச நாதி இல்லை என்ற நிலை ஆனது. அல்லாஹ்வின் அருளால் 1995இல் வீறு கொண்டெழுந்தவர்களால் புணர் நிர்மானம் செய்யப்பட்ட த.மு.மு.க. உருவானது. த.மு.மு.க. தான் முதன் முதலில் அமைப்பு சார்பான எதிர்ப்பைக் காட்டியது. பாபரி மஸ்ஜித்துக்காக தமிழகத்தில் த.மு.மு.க. குரல் எழுப்பிய பிறகுதான் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6களில் சட்ட மன்றம் பாராளுமன்றம் என எல்லா அவைகளிலும் பாபரி மஸ்ஜித் பற்றி பேசும் நிலை வந்தது. சட்ட மன்றத்தில் தேசிய லீக் லத்தீப் ஸாஹிபும் பாராளுமன்றத்தில் பனாத்வாலாவும் குரல் கொடுத்தனர்.
பாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலி.
1996இல் இருந்து டிசம்பர் 6ஐ துக்க நாள் என்று கூறி பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து லோக்சபாவையும் ராஜ்யசபாவையும் ஒத்தி வைக்குமாறு இடதுசாரி கட்சிகள் குரல் எழுப்பி வந்தன. இதை 7 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து செய்து வந்தன. பாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலி. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அமளி என்ற செய்தி ஊடகங்களில் கண்டு வந்தோம். அப்பொழுதெல்லாம் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட தமிழ்நாட்டிலிருந்து பாராளு மன்றத்துக்கு சென்றிருக்கவில்லை.
2004இல் எதுவும் நடக்கவில்லை.
15ஆண்டுகளுக்கு (1989க்குப) பிறகு 2004இல் மு.லீக் தலைவரான காதர் மைதீன் என்பவர் உட்பட 2முஸ்லிம்கள் பாராளுமன்றத்துக்குச் சென்றனர். உணர்வுள்ள முஸ்லிம்களின் அமைப்பான த.மு.மு.க.வின் பேராதரவில் வென்ற முஸ்லிம் எம்.பி.க்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து விட்டனர். இனி அவர்கள் கர்ஜிப்பார்கள் என்று இடதுசாரிகள் எண்ணினார்களோ என்னவோ? 2004இல் இடதுசாரிகள் எதுவும் பேசவில்லை. காதர் மைதீனோ கிதர்(எங்கே) மைதீன் (என்று) ஆகி விட்டார். எனவே இரு அவைகளிலும் பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து 2004இல் எதுவும் நடக்கவில்லை.
பேரெழுச்சியையும் புத்துணர்ச்சியையும் சமுதாயத்துக்கு தந்தது.
இருந்தாலும் டெல்லியில் பாராளுமன்றத்தை நோக்கி த.மு.மு.க. நடத்திய பேரணி. த.மு.மு.க. தலைவர்கள் பிரதமர் மற்றும் சோனியாவை சந்தித்து பாபரி மஸ்ஜித்தைக் கட்டித் தரக் கோரினார்கள். தமிழக எம்.பி.க்களில் முஸ்லிம் அல்லாத எம்.பி.க்களும் த.மு.மு.க. தலைமையின் கீழ் டெல்லியில் அணிவகுத்தனர். பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து 2004இல் மக்களவையிலும் மாநிலங்களவையிலும்; அமளி நடைபெறாதது சமுதாயத்துக்கு ஒரு பொருட்டாகத் தெரிந்ததில்லை. த.மு.மு.க.வின் டெல்லி பேரணி மக்களவை மாநிலங்களவை அமளிகளை விட பேரெழுச்சியையும் புத்துணர்ச்சியையும் சமுதாயத்துக்கு தந்தது.
சமுதாயம் அமைதி பெற்றது.
2005லும் த.மு.மு.க. டெல்லி செல்லும் என்று சமுதாயம் எதிர் பார்த்தது. த.மு.மு.க. அறிவிக்கும் டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பலர் குளிர் ஆடைகளையும் வாங்கி தயாராக வைத்திருந்தனர். சில தூர நோக்கத்துடன் மீண்டும் டெல்லி சென்று போராடும் திட்டத்தை த.மு.மு.க. தவிர்த்தது. 2005லும் மக்களவை மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து எதுவும் நடக்கவில்லை. தமிழகத்தில் நடந்த போராட்டங்களை மட்டும் கண்டு சமுதாயம் அமைதி பெற்றது.
இன்னொரு பிரச்சனையால் சட்ட மன்றம் அமளியாகி இருந்தது.
2001-2006 வரையிலான சட்ட சபையில் மு.லீக் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் இருக்கவில்லை. இப்பொழுது இருக்கிறார்கள் தேசிய லீக் லத்தீப்புக்குப் பிறகு மு.லீக்கர்கள் பாபரி மஸ்ஜிதுக்காக டிசம்பர் 6இல் சட்ட மன்றத்தில் குரல் எழுப்புவார்கள் என்று பலர் நம்பி இருந்தனர். (நாம் நம்பவில்லை என்பது தனி விஷயம்.) மக்கள் எதிர் பார்த்தபடி தமிழக சட்ட மன்றம் அமளியானது. ஆனால் அது அ.தி.மு.க.வினர் கொண்டு வந்த இன்னொரு பிரச்சனையால் சட்ட மன்றம் அமளியாகி இருந்தது.
நம்பி ஏமாந்த நம் சமுதாயம் கொதிக்கத் துவங்கி விட்டது.
2006 டிசம்பர் 6 மதியம் தொலைக் காட்சிகளில் மக்களவை மாநிலங்களவை அமளி காட்சிகளைக் காட்டினார்கள். ஆ பாராளு மன்றத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலிக்கிறது என்று மகிழ்ந்தார்கள். தலைப்புச் செய்தியிலும் ஷஷபாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலி மக்களவை மாநிலங்களவைகளில் அமளி என்றுதான் சொல்லப்பட்டது. இதைக் கேட்டதும் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பாராளுமன்றத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் எதிர்ப்பு காட்டி விட்டார்கள் என்றே நம்பி மகிழ்ந்தது நம் சமுதாயம். விரிவான செய்தியைக் கேட்டதும் நம் சமுதாயத்தவர் மனங்கள் இடிந்து விட்டன. வழக்கம் போல் நம்பி ஏமாந்த நம் சமுதாயம் கொதிக்கத் துவங்கி விட்டது.
இக்கதி ஏற்பட்டிருக்குமா?
7 ஆண்டுகளாக தொடர்ந்து டிசம்பர் 6ஐ துக்க நாள் என்று கூறி பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து அமளி நடந்த பாராளுமன்றம் திசை திரும்பி விட்டது. பாபரி மஸ்ஜிதை கட்டித் தர வேண்டும் என்ற குரல் ஒலிக்க வேண்டிய பாராளு மன்றத்தில் பள்ளி இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்ற குரல் ஒலித்து திசை திரும்பியுள்ளது. உயிரை பணயம் வைத்து உழைக்கும் த.மு.மு.க. தொண்டர்கள் உழைப்பின் மூலம் சட்ட மன்றத்துக்கும் பாராளு மன்றத்துக்கும் யார் யாரையோ அனுப்பி விட்டதால்தான் இக்கதி. த.மு.மு.க. சார்பிலான உண்மையான முஸ்லிம்கள் உணர்வுள்ள முஸ்லிம்கள் சுய சின்னத்தில் சட்ட மன்றத்துக்கும் பாராளு மன்றத்துக்கும் சென்றிருந்தால் இக்கதி ஏற்பட்டிருக்குமா?
பத்வாவை மாற்றியதுடன் பி.ஜெ.யே தேர்த்தலில் களப் பணி ஆற்றினார்.
எனவே சட்ட மன்றம் பாராளு மன்றம் உட்பட ஆட்சித் துறை அனைத்துக்கும் த.மு.மு.க.வினர் செல்ல வேண்டும். தேர்தலில் த.மு.மு.க. போட்டியிட வேண்டும். இது 2006 டிசம்பர் 6 ஏற்படுத்தியுள்ள நிர்ப்பந்தம். தேர்தலில் போட்டியிடுவது ஹராம் என்ற பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்ட பத்வாவின் தாக்கத்திலிருந்து த.மு.மு.க. விடுபட வேண்டும். தேர்தலில் களப் பணி ஆற்றினால் ஈமான் போய் விடும் என்று 2004இல் பத்வா கொடுத்தவர்தான் பி.ஜெ. அது பிராடுத்தனமான பத்வா என்பதை த.மு.மு.க. 2004இல் களப்பணி ஆற்றி நிரூபித்தது. பிறகு களப் பணி பத்வாவை மாற்றியதுடன் பி.ஜெ.யே 2005இல் தேர்த்தலில் களப் பணி ஆற்றினார்.
த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி.
அது போல் தேர்தலில் போட்டியிடும் முடிவை த.மு.மு.க அறிவித்து விட்டால். அடுத்து பி.ஜெ.யும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து அவரே தேர்தலில் நின்று விடுவார். 2006 டிசம்பர் 6 ஏற்படுத்தியுள்ள நிர்ப்பந்தம். தேர்தலில் போட்டியிடும் முடிவை த.மு.மு.க. விரைந்து எடுத்தாக வேண்டும் என்பதே. இந்த முடிவை எடுப்பதில் கால தாமதம் செய்தால் சமுதாயத்துக்கு தீங்குதான் ஏற்படும். சட்ட ரீதியாக போராட த.மு.மு.க. வந்த பின்தான் சட்டத்தை கையிலெடுத்து செயல்படுபவர்கள் ஒதுங்கினார்கள். இதை த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி மற்றுமுள்ள தலைமைப் பொறுப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வஸ்ஸலாம்.
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

No comments: