Wednesday, June 14, 2006

இனி அந்த அம்மாவிடம் கடுமை இருக்காது.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 14-06-2006

விளம்பர விரும்பிகளால் ஏற்படும் விபரீதங்கள்.

சமுதாய நலனில் அக்கறையுள்ள கண்ணியத்திற்குரியவர்களுக்கு கா.அ.மு. உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பழைய ஆட்சியின் கொடுமை இவ்வாட்சியிலும் தொடரும் அவலம் என்ற தலைப்பில் ஒரு மெயில் வந்துள்ளதை அறிவீர்கள். 10-06-2006 அன்று எனக்கு போன் செய்த தங்கப்பா அவர்கள் இந்த மெயிலுள்ள விஷயமாகவும் என்னிடம் பேசினார். அன்சாரி நாளை பரோலில் வருகிறார் அவரிடம் பேசுங்கள் என்றும் கூறினார்.

சிறைவாசிகளுக்குத் தெரியாமல் தங்கப்பா மறைத்து விட்டார்.

த.மு.மு.க. தலைவர்களுடன் பேசினீர்களா? என்று கேட்டேன் இல்லை என்றார் தங்கப்பா. பேசுங்கள் என்றேன், அவர் நான் பேச மாட்டேன் நீங்கள் பேசுங்கள் என்றார் தங்கப்பா. நீங்களே பேசுங்கள் என்றேன். காரணம் தங்கப்பா கேட்டுக் கொண்டதற்கிணங்க பல விஷயங்களை ஜவாஹிருல்லாஹ், ஹைதர் ஆகியவர்களிடம் பேசி த.மு.மு.க. மூலம் செய்து கொடுத்திருக்கிறேன். செய்து கொடுத்தும் த.மு.மு.க. சிறைவாசிகளுக்கு செய்த சேவைகளையெல்லாம் சிறைவாசிகளுக்குத் தெரியாமல் தங்கப்பா மறைத்து விட்டார். சிறைகளுக்கு சென்று நேரில் சந்தித்த போது இதனை அறிந்தேன்.

குடும்பங்களின் அவலங்களுக்கு முக்கிய காரணம்.

த.மு.மு.க. செய்த உதவியை சிறைவாசிகளுக்கு மறைத்து விட்டது பெரிய விஷயமல்ல. இவரது கோரிக்கைகளையெல்லாம் செய்து கொடுத்த த.மு.மு.க.வுக்கு எதிராக பொய்யான செய்திகள் சிறைவாசிகள் பெயரால் வரவும் துணை நின்று த.மு.மு.க.வுக்கு துரோகம் செய்து விட்டார். அலி அப்துல்லாஹ் பெயரால் உள்ள நோட்டீஸ் சைட்டில் வர வழி செய்துள்ளார். நான் கேட்டதற்கு அலி அப்துல்லாஹ் நம்ம கண்ரோலில் இல்லை. நாம சொன்னால் கேட்க மாட்டார் என்று சொன்னார். அலி அப்துல்லாஹ் அவர்களிடம் பேசிய போதுதான் உண்மை தெரிந்தது. அடுத்து அபூஸைபுத்தீன் என்ற பெயரால் சைட்டில் செய்தி போட்டார். அதில் தங்கப்பாவின் மெயில் ஐ.டி. இருந்தது. அதைப் பற்றி கேட்டதற்கு அவரிடம் சொல்லியாச்சு கேட்க மாட்டேன்கிறார் என்றார். அப்படியானால் நீங்கள் எப்படி அதை மெயிலாக அனுப்பலாம் என்று கேட்டேன் சரியான பதில் இல்லை.

குடும்பங்களின் அவலங்களுக்கு முக்கிய காரணம்.

இதனால்தான் த.மு.மு.க. தலைமையிடம் தங்கப்பாவையே பேசுங்கள் என்று கூறினேன். அதே நேரம் தங்கப்பா அணியிடம் குடி கொண்டு விட்ட விளம்பர மோகத்தையும் சுட்டிக் காட்டி விமர்சித்தேன். ஆட்சி மாறினால் முந்தைய ஆட்சி அமர்த்திய அரசு வக்கீல்கள் ராஜினாமா செய்வது நடைமுறையில் உள்ளது. அதை பெரிய விவகாரமாக ஆக்கி பத்திரிக்கை மூலம் விளம்பரம் தேடியுள்ளீர்கள் என்று விமர்சித்து கண்டித்தேன். இந்த விளம்பர மோகம்தான் தமிழகத்தைச் சார்ந்த பல சிறைவாசிகள் குடும்பங்களின் அவலங்களுக்கு முக்கிய காரணம். அவர்களுக்கு ஏற்பட்ட விபரீதங்களும் விளம்பர விரும்பிகளால் ஏற்பட்ட விபரீதங்கள்தான்.

குணங்குடி ஹனீபா அவர்களை உரிமையுடன் கூற முடியும்.

பேச்சு வார்த்தையில் எளிதாக முடிய வேண்டியதை விளம்பர நோக்கில் விவகாரமாக ஆக்கி விடுகிறார்கள். பெரும்பாலான சிறைவாசிகளின் பாதிப்புகளுக்கு காரணமே அவர்களது வாய்தான். இது விஷயத்தில் மற்றவர்களை சுட்டிக் காட்டுவதை விட எங்களது சம்பந்தியாக ஆகி விட்ட குணங்குடி ஹனீபா அவர்களை உரிமையுடன் கூற முடியும். அவரோடு சம்பந்தம் செய்தது அவர் ஒரு சிறைவாசி என்பதால்தான். அதற்கு முன் குடும்ப ரீதியாக வேறு எந்த உறவும் கிடையாது. இதை மொட்டை கடித பேர்வழிகள் புரிய வேண்டும்.

கணவன் இருந்தும் விதவையாக ஆக்கியது.

ஓன்றுக்கு பல முறை அவரிடமும் அவரது பிள்ளைகளிடமும் நேரில் கூறி இருக்கிறேன். குணங்குடி ஹனீபா அவர்கள் சிறை சென்றதற்கு காரணம் அவர் குற்றம் செய்தார் என்பதற்காக அல்ல. அவர் எந்த குற்றமும் செய்யவே இல்லை. இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றாகத் தெரியும். அவரை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் சேர்த்தது. இத்தனை ஆண்டு காலமாக சிறையில் தள்ளியது. அவரது மனைவியை கணவன் இருந்தும் விதவையாக ஆக்கியது. அவரது பிள்ளைகளை தந்தை இருந்தும் அனாதைகளாக ஆக்கியது. இவற்றுக்கெல்லாம் காரணம் தேவையில்லாமல் பத்திரிக்கைகளுக்கு அவர் அளித்த பேட்டிதான்.

மேலப்பாளையம் சிறைவாசிகளிடம் பேசினேன்.

நான் தமிழகத்தால் இருந்தபொழுது சிறைவாசிகளுக்கு ஏதோ ஒரு பிரச்சனை. அதற்காக அவர்கள் எதிர்ப்பைக் காட்ட உள்ளார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே இது விஷயமாக உடனடியாக சிறைவாசிகளிடம் பேசுங்கள் என்று த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் போன் செய்தார்கள். மேலப்பாளையம் சிறைவாசிகளிடம் பேசினேன். மதுரை சிறையில் உள்ள ராஜ உசேன் அவர்களிடம் போய் பேசுங்கள் என்றார்கள். உடனே 19-04-2006 புதன் அன்று மாலை மதுரை மத்திய சிறை சென்றேன். என்னுடன் மேலப்பாளையத்தில் அல்-உம்மா என்று அறியப்பட்டவர்களையும் அழைத்துச் சென்றேன்.

ஜட்ஜுக்கு எதிராக எதிர்ப்பை காட்ட உள்ளோம்.

இமாம் அலி வழக்கை விசாரிக்கும் நீதிபதி சாவித்திரி சரி இல்லை. ஆர்.எஸ்.எஸ். மெண்டாலிட்டியாக உள்ளார். காலையிலிருந்து மாலை வரை காக்க வைக்கிறார். ஒண்ணுக்கு கூட போக அனுமதிப்பதில்லை. தண்ணீர் கூட குடிக்க விடுவதில்லை. இப்படி கோர்ட்டில் கொடுமைப் படுத்துகிறார். தொழுகைக்கு அனுமதிப்பதில்லை. தலையில் புண் இருந்ததால் தொப்பி போட்டுக் கொண்டு வந்தவரை தொப்பியை கழட்டு என்றார். இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைக் கூறினர். அதற்காக ஜட்ஜுக்கு எதிராக எதிர்ப்பை காட்ட உள்ளோம் என்றும் ராஜ உசேன் கூறினார்.

த.மு.மு.க. தலைமை மூலம் நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்கிறேன்.

இதைக் கேட்டவுடன் அப்படியே ஈ-மெயிலாக அனுப்பி விளம்பரம் தேடும் முயற்சியில் ஈடுபடவில்லை. நீங்கள் சிறைவாசிகளாக உள்ளீர்கள். எவ்வளவு காலம்தான் சிறையிலேயே கிடக்கப் போகிறீர்கள். உங்கள் மீது நல் எண்ணம் ஏற்பட்டு விடுதலையாக வேண்டாமமா? எனவே உங்களுக்காக நீங்கள் எதிர்ப்பு காட்டும் முறை சரி இல்லை. நீங்கள் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறீர்கள். அந்த அம்மா தீர்ப்பு வழங்கும் இடத்தில் இருக்கிறார். வேகப்படாதீர்கள் விவேகமாக செயல்படுங்கள். உங்கள் குறைகளைச் சொல்லி விட்டீர்கள் அல்லவா. முறையாக த.மு.மு.க. தலைமை மூலம் நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்கிறேன். ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்கள் சொல்லித்தான் வந்துள்ளேன் என்றேன்.

மக்கள் உரிமையில் போடச் சொல்லுங்கள்.

சுமார் ஒரு மணி நேரம் பேசி அவர்கள் எதிர்ப்பு காட்டும் திட்டத்தை கைவிடச் செய்தேன். சரி நாங்கள் எதிர்ப்பு காட்டும் திட்டத்தை விட்டு விடுகிறோம். உடனே சாவித்திரியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லுங்கள். மதுரையில் நீங்களே தலைமை தாங்குங்கள். எங்கள் சிறைவாசிகள் குடும்பத்தாரே நிறைய வருவார்கள். அல்லது த.மு.மு.க. சார்பாக கண்டன போஸ்ட்டர் ஒட்ட அனுமதி வாங்கித் தாருங்கள். நாங்களே செலவு செய்து போஸ்ட்டர் ஒட்டிக் கொள்கிறோம். என் பெயரில் கண்டன அறிக்கையை மக்கள் உரிமையில் போடச் சொல்லுங்கள். இப்படி நிறைய சொன்னார்கள்.

வெட்கங் கெட்ட விளம்பர பிரியர்களாக இருந்தால்.

அவர்கள் சொன்ன விஷயங்கள் யாவும் த.மு.மு.க.வுக்கும் எனக்கும் விளம்பரம் தேடித் தரக் கூடியவைதான். இதுதாண்டா சமயம் தேர்தல் நேரம் வேறு நல்ல விளம்பரம் கிடைக்கும் என பயன்படுத்திக் கொண்டோமா? மெயில் போட்டோமா? ராஜா உசேன் பெயரால் அறிக்கை வெளியிட்டு வெப் சைட்டுக்கு விளம்பரம் தேடினோமா? வெட்கங் கெட்ட விளம்பர பிரியர்களாக இருந்தால் இதைத்தான் செய்திருப்பார்கள்.

வியாபரா நோக்குடைய சக்கரை மிட்டாய் வியாபாரிகள்.

சிறைவாசிகள் சொன்னவை யாவும் மனம் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் சொன்னவை. அவர்கள் அந்த நிலையில்தான் இருப்பார்கள். நாம் தான் எது நல்லது என்று ஆய்வு செய்து செயல்பட வேண்டும். குழந்தைகள் சாக்குலேட்டுகள் கேட்டுத்தான் அடம் பிடிக்கும். அதனால் ஏற்பட்டுள்ள சலி, இருமல், காய்ச்சல், புண் மற்றுமுள்ள நோய் நீங்காது மேலும் கூடும் என்பதை குழந்தைகள் அறிய மாட்டார்கள். அன்றைக்கு தந்த சாக்குலேட்டுகள்தானே இன்றைக்கு ஏன் தர மறுக்கிறாய் என்றுதான் கேட்பார்கள். வியாபரா நோக்குடைய சக்கரை மிட்டாய் வியாபாரிகள் குழந்தைகளை சுற்றி சுற்றித்தான் வருவார்கள். காரணம் அவர்களுக்கு குழந்தைகள் பற்றி கவலை கிடையாது. வியாபாரம்தான் அவர்களது நோக்கம்.

தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தவில்லை.

ராஜா உசேன் கூறிய குற்றச்சாட்டுக்களை தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியவர்களுக்கு போன் போட்டுச் சொன்னேன். அப்பொழுது அவர்களிருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தார்கள். இதுதான் வாய்ப்பு என அதை அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தவில்லை. வெப் சைட் விளம்பர விரும்பிகள் போல் அவர்கள் இருந்திருந்தால் அதையே தேர்தல் பிரச்சாரமாக ஆக்கி இருப்பார்கள். சரி அதிகாரிகளிடம் பேசி சரி செய்ய முயற்சிக்கிறோம் என்றே சொன்னார்கள்.

நீ உன் நெற்றியில் உள்ள பொட்டை அழி.

அதன் பிறகு வக்கீல் ஆபீஸுக்குப் போனோம். அங்கே சீனியர் வக்கீல் இல்லை. ஜுனியர் இருந்தார். அவரிடம் (ஹாமித் பக்ரியுடன் கைதாகி இருந்த) இளையான்குடி அப்துல்லாஹ் நீங்கள் சொன்னபடி 36 தொப்பிகள் வாங்கி கொடுத்து விட்டேன். நாளை கோர்ட்டுக்கு வரும்போது எல்லாரும் தொப்பி போட்டுக் கொண்டு வருவார்கள் என்றார். உடனே வக்கீல் நாளை தொப்பி பற்றி ஜட்ஜ் பேசினால் நீ உன் நெற்றியில் உள்ள பொட்டை அழி என்று சொல்வேன் என்றார். அப்பொழுதுதான் வருத்தப்பட்டேன். நான் ராஜா உசேன் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்பொழுதுதான் இளையான்குடி அப்துல்லாஹ் தொப்பி பார்சலை கொடுத்தார். அது இதுக்குத்தான் என தெரிந்திருந்தால் அப்பொழுதே இந்த விபரீத விளையாட்டு வேண்டாம் என தடுத்து இருக்கலாமே என வருந்தினேன்.

இனி அந்த அம்மாவிடம் கடுமை இருக்காது.

மறுநாள் காலை 8 மணிக்கு த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி போன் செய்தார். மேலே பேசி விட்டோம். அவர்கள் உடனடியாக டிஸ்ரிக் ஜட்ஜு மூலம் அந்த அம்மாவிடம் பேசி விட்டார்கள். அந்த ஜட்ஜ் நான் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று கூறி இருக்கிறார். அப்படி நடந்திருந்தாலும் இல்லை என மறுத்து உள்ளதே நல்ல நிலைதான். இன்று தொப்பி போட்டுக் கொண்டு போகும் விஷயமும் அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது. தொப்பி போட்டுக் கொண்டு போனாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். தொப்பி சம்பந்தமாக அந்த அம்மாவிடம் கேட்டதற்கு, ஒரு வழக்கில் உள்ளவர்களை 2 அணிகளாக கொண்டு வருகின்றனர். அவர்களை யூனிபாமாக (ஒரே அணியாக) கொண்டு வாருங்கள் என்றேன். அதைத்தான் தவறாக புரிந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.மொத்தத்தில் இனி அந்த அம்மாவிடம் கடுமை இருக்காது. அதற்கு முன் அடையாளமாக அந்த கேஸில் உள்ள ஒரு அணி வந்ததும் அடுத்த அணி வராமலே வந்ததாக இன்ற பதிந்து விடுவார்கள் என்றார்.

த.மு.மு.க. தலைமைக்கு எங்கள் நன்றியை தெரிவியுங்கள்.

இந்த தகவலை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கச் செய்தேன். அந்த அம்மாவிடம் மாற்றம் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் வீம்புக்கு தொப்பி போட்டு மீண்டும் விவகாரத்துக்கு வழி வகுக்க வேண்டாம் என்றும் கூறினேன். அவர்களும் வீம்பு பண்ணும் நோக்கில் தொப்பி அணிய இருந்ததை தவிர்த்தனர். அன்று மாலை மதுரை சிறைவாசிகளிடமிருந்து கிடைத்த தகவல். நீங்கள் சொன்ன மாதிரி ஜட்ஜ் நடந்து கொண்டார். ஒரு அணி மட்டும் ஆஜரானோம். அடுத்த அணியை வேனிலிருந்தபடியே திருப்பி அனுப்பி விட்டனர். நல்ல மாற்றம் சந்தோஷம். த.மு.மு.க. தலைமைக்கு எங்கள் நன்றியை தெரிவியுங்கள்.

சிறைவாசிகளின் நலனுக்காகத்தான் சொல்கிறோம்.

ஏந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இப்படி முறையாக அணுக வேண்டும். முறையாக அணுகியும் பலன் இல்லை என்றால்தான் பிரச்சனையை வெளியே கொண்டு வர வேண்டும். அதுவும் சிறைவாசிகள் பெயரால் கொண்டு வரக் கூடாது. சிறைவாசிகளும் அதை கையிலெடுக்கக் கூடாது என்று சொல்கிறோம். ஏன் சொல்கிறோம் சிறைவாசிகளின் நலனுக்காகத்தான் சொல்கிறோம். அவர்களது விடுதலைக்கு தடையாக உள்ளதே அவர்களது முரட்டுத் தன்மை மாறவில்லை என்ற குற்றச்சாட்டுதான். ஆட்சி மாறி எவ்வளவு நாட்களாக ஆனாலும் எல்லா செயல்பாடுகளும் முந்தைய நடை முறைப்படியே இருக்கும். எது அரசின் கவனத்திற்கு கொண்டு போகப்படுகிறதோ அதுதான் புதிய உத்தரவுக்குள்ளாகும்.

ஜவாஹிருல்லாஹ் சொன்ன மாதிரி 2 நாளில் நடந்தது.

nஷரீப் விஷயத்தில் போலீஸ்தான் பழைய நடைமுறையை பின்பற்றியுள்ளது. போலீஸ் செய்த செயலை புதிய அரசின் செயலாக சித்தரிப்பது சரியா? இது தேவையில்லாமல் புதிய அரசை பகைக்கும் தன்மையா இல்லையா? த.மு.மு.க.வை அணுகி அது ஈடுபட மறுத்ததா? சிறைத்துறை எஸ்றா மாற்றப்பட வேண்டும் என்றார்கள். தங்கப்பாவே என்னிடம் பல முறை கூறி இருக்கிறார். த.மு.மு.க. தொடர்ந்து கடுமையாக போராடி வந்தது. அவர் மாற்றப்படுவதற்கு 2 நாளுக்கு முன்பாக த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் சொன்னார் எஸ்றா 2 நாளில் மாற்றப்படுகிறார் என்று. இதை தங்கப்பாவிடம் சொன்னேன். ஜவாஹிருல்லாஹ் சொன்ன மாதிரி 2நாளில் மாற்றம் நடந்தது. http://www.tmmkonline.org/tml/archieves/others/98_711.htm

த.மு.மு.க.வின் முயற்சியால் சிறையில் கடுமை குறைந்தது.

சிறையில் கடுமையாக நடக்கிறார்கள் த.மு.மு.க. தலையிட்டால்தான் முடியும். த.மு.மு.க.வில் சொல்லுங்கள் என்றார் தங்கப்பா. நூறாண்டு பாரம்பரியம் என சொல்லிக் கொள்ளும் கட்சியின் பெயரைச் சொல்லி அவர்களிடம் சொல்லுங்களேன் என்றேன். அவங்களுக்கு மதிப்பே இல்லைங்க. அவங்களால ஒண்ணும் ஆகாதுங்க. த.மு.மு.க.வால்தான் முடியுங்க என்றார் தங்கப்பா. த.மு.மு.க.வின் முயற்சியால் சிறையில் கடுமை குறைந்தது. இப்ப கடுமை குறைஞ்சிட்டுங்க என்றார் தங்கப்பா.

த.மு.மு.க. தலைமையை அணுகாதது ஏன்?

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று சிறைவாசிகளுக்கு பிரியாணி செய்து கொடுக்க அனுமதி தர மறுக்கிறார்கள் த.மு.மு.க.விடம் சொல்லுங்கள் என்றார் தங்கப்பா. த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் சொன்னேன். மேலதிகாரிகளிடம் பேசி விட்டு தகவல் தந்தார். அதை தங்கப்பாவிடம் தெரிவித்தேன். எங்கள் சார்பில் நன்றி சொல்லி விடுங்கள் என்றார். எதற்கும் தங்கப்பா த.மு.மு.க. தலைமைக்கு நேரடியாக நன்றி சொன்னது கிடையாது. இப்படி பல விஷயங்களை அ.தி.மு.க. ஆட்சியிலேயே த.மு.மு.க. செய்து கொடுத்திருக்கவே nஷரீப் விஷயத்தில் மட்டும் தங்கப்பா த.மு.மு.க. தலைமையை அணுகாதது ஏன்?

சமுதாய நலனில் அக்கறை உடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கு கால அளவு கிடையாது. அவர்களை விடுதலை செய்து விடும்படி சுப்ரீம் கோர்ட் கூட உத்தரவு போட முடியாது. ஆனால் ஒரு மாநில அரசு நினைத்தால் எப்பொழுதும் விடுதலை செய்யலாம். எனவே போலீஸ் செய்த நடை முறைச் செயலை புதிய அரசின் செயலாக சித்தரித்துள்ளது தேவையற்ற பகைமையைத்தான் ஏற்படுத்தும். அதற்கு துணை போகும் விளம்பர விரும்பிகளால் விபரீதங்கள்தான் ஏற்படும். இந்த தவறான செயலை சமுதாய நலனில் அக்கறை உடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

விளம்பர விரும்பிகளிடமிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக.

அ.தி.மு.க. ஆட்சியின்போது கூட தங்கப்பா நிறைய மெயில்கள் அனுப்பி இருக்கிறார் பலர் பார்வேடு செய்திருக்கிறார்கள். நான் பார்வேடு செய்தது கிடையாது. சிறைவாசிகள் பெயரால் அரசுக்கெதிராக அறிக்கைகள் வெளியிடச் செய்வது. அதை பரப்பவது அறிவுடையவர் செயல் அல்ல. சிறைவாசிகளின் விடுதலையை விரும்புவோர் செய்யும் செயலுமல்ல. இது போன்ற விளம்பர விரும்பிகளால் சிறைவாசிகளுக்கு கேடுதான் விளையும். விளம்பர விரும்பிகளிடமிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக. ஆமீன். வஸ்ஸலாம்
கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி

No comments: