Sunday, May 28, 2006

நாலு கணவன்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 28-05-2006

நாலு மனைவி சரியென்றால் நாலு கணவன் சரியென்றாகுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. சகோதரர் புகாரி அவர்களின் 1. ஆவது எதிர் பார்ப்பான ''தொழுகை தமிழில்தான் இருக்க வேண்டும்'' என்பதைப் பற்றிய விளக்கத்தை முந்தைய வெளியீட்டில் பார்த்தோம். ''ஒருவனுக்கு ஒரு மனைவி போதும். நாலு மனைவி சரியென்றால் நாலு கணவன் சரியென்று ஆக வேண்டும்'' இது புகாரி அவர்களின் இரண்டாவது எதிர்பார்ப்பாகும். இது பற்றிய விளக்கத்தை இந்த இதழில் பார்ப்போம்.

சம உரிமை கோருபவர்கள் சரி சமமானவர்களாகவும் இருக்க வேண்டும்.

இந்த எதிர்பார்ப்புப்படி ஒரு ஆணுக்கு நாலு மனைவி என்பது எத்தனை வழிகளில் சரியென்றாகிறதோ அத்தனை வழிகளிலும் பெண்ணுக்கு நாலு கணவன் என்பது சரி என்றாக வேண்டும். இந்த கருத்தும் அதில் மறைந்திருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் இருவர் அல்லது இரு தரப்பினர் சம உரிமை கோரலாம். சம உரிமை கோருகிறார்கள் என்ற காரணத்தால் மட்டும் சம உரிமை வழங்கிட முடியாது. சம உரிமை கோருபவர்கள் சரி சமமானவர்களாகவும் இருக்க வேண்டும். இதுதான் நியதி.

வெளிப்படையான வித்தியாசங்களை ஏராளமாக கூற முடியும்.

அந்த வகையில் ஆணும் பெண்ணும் சமமா? ஆணும் பெண்ணும் சமம் என்று வரட்டு வாதம் செய்பவர்களால் கூட சமம் என்பதை நிரூபிக்க முடியாது. நடை, உடை, பாவணை, பேச்சு, உடல்வாகு, மனம், குணம் என அனைத்திலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் இல்லை என்பதற்கு இது மாதிரியான வெளிப்படையான வித்தியாசங்களை ஏராளமாக கூற முடியும். இந்த வெளிப்படையான வித்தியாசங்களை விட்டு விடுவோம். இங்கு எதிர்பார்க்கப்படும் சம உரிமையே நாலு கணவன் என்பதுதான். எனவே அதை ஒட்டியே நமது விளக்கத்தை காண்போம்.

4 மனைவிகளுக்கும் 4 குழந்தைகளை கொடுக்க முடியும்.

ஒரு ஆண் ஒரே நேரத்தில் நாலு பெண்களை திருமணம் செய்து கொண்டார் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆண் அவரது 4 மனைவிகளுடன் 10 மாதங்களோ, ஒரு ஆண்டோ வாழ்ந்து விட்டால் 4 மனைவிகளுக்கும் 4 குழந்தைகளை கொடுக்க முடியும். அதாவது அந்த 4 மனைவிகள் அவர் மூலம் ஒரே காலத்தில் தனித் தனியே 4 பிள்ளைகளை பெற்றெடுக்க முடியும். இந்த பிள்ளை இன்ன மனைவிக்குப் பிறந்தது என்று கணவரும் அறிவார்.இந்த பிள்ளை இன்ன தாய்க்கும் இன்ன தந்தைக்கும் பிறந்தது என ஊர் உலகமும் எளிதில் அறியும்.

4 கணவர்களுக்கும் 4 பிள்ளைகளை பெற்றுக் கொடுக்க முடியுமா?

புகாரி அவர்கள் எதிர்பார்ப்புப்படி ஒரு பெண் ஒரே நேரத்தில் நாலு ஆண்களை திருமணம் செய்து கொண்டார் என்று வைத்துக் கொள்ளட்டும். அந்தப் பெண் அவரது 4 கணவர்களுடன் ஒரு ஆண்டு வாழ்ந்து விட்டால் அந்த 4 கணவர்களுக்கும் அவர் 4 பிள்ளைகளை பெற்றுக் கொடுக்க முடியுமா? ஒரு ஆண் தனது 4 மனைவிகள் மூலம் 4 பிள்ளைகள் பெற முடியும். இது மாதிரி ஒரு பெண் 4 கணவர்களுக்கும் 4 பிள்ளைகளை பெற்றுக் கொடுக்க முடியுமா? ஒரு பெண் ஒரே கர்ப்பத்தில் 2 பெற்றாலும் 4 பெற்றாலும். ஒரு கருவின் (ஒரு ஆணின்) மூலம் மட்டுமே பெற முடியும். இதுதான் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மை.

குழந்தைகளுக்கு இதைவிட வேறு கேவலம் உண்டா?

ஒரு ஆணுக்கு 4 மனைவிகள் மூலம் பத்துப் பதினைந்து பிள்ளைகள் பிறந்தாலும் அந்தப் பிள்ளைகளின் தந்தை யார்? தாய் யார்? என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 4 கணவர்களுடனுள்ள ஒரு பெண் பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்கு தாய் யார்? என்பது மட்டும் தான் தெளிவாக தெரியும். தந்தை யார்? என்பதை தெரிந்து கொள்ள முடியாது. தன் தந்தை யார்? என்று தெரிந்து கொள்ள முடியாத இந்த நிலையை விட மோசமான நிலை வேறு உண்டா? அந்தக் குழந்தைகளுக்கு இதைவிட வேறு கேவலம் உண்டா?

யார்தான் ஜீரணிப்பார்கள். யாரால்தான் ஜீரணிக்க முடியும்.

மனிதனுக்கு ஆரம்ப உறவே தாய் தந்தை உறவுதான். ஆந்த ஆரம்ப உறவிலேயே சிக்கல் என்றால்? இது போல் உருவாகக் கூடிய, தகப்பன் யார் என்று தெரியாத வாரிசுகள் நிலை என்ன ஆகும். தந்தை பெயர் தெரியாதவர்கள் என்பதால் சமுதாயம் ஒரு மாதிரியாக பார்க்கும். அந்தப் பார்வையால் மனம் உடைந்து மன நோயாளிகளாக ஆவார்கள். நாட்டில் மன நோயாளிகள் கூட்டம் பெருகும். பல அப்பன்களுக்கு பிறந்தவர்கள் என்றழைக்கப்படுவார்கள். இந்த வார்த்தையை யார்தான் ஜீரணிப்பார்கள். யாரால்தான் ஜீரணிக்க முடியும்.

யாரை நிர்ப்பந்திக்க முடியும்.

ஒரு ஆண் நான்கு மனைவிகள் மூலம் 10 பிள்ளைகளைப் பெற்றாலும் அந்த 10 பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பு அந்த ஒருவனையே சாரும். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்க வேண்டிய கடமை அவனுக்கு மட்டுமே ஏற்படும். மறுத்தால் கூட சமுதாயம் நிர்ப்பந்தம் செய்யலாம். ஆனால் ஒரு பெண் நான்கு கணகளுடன் வாழ்ந்து பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு இந்த உரிமை கிடைக்குமா? உத்திரவாதம்தான் கொடுக்க முடியுமா? அந்த பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை எந்தக் கணவன் மீது சுமத்த முடியும். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவைக் கொடுக்குமாறு யாரை நிர்ப்பந்திக்க முடியும்.

குழந்தையைக் கூறு போட்டு பிரித்துக் கொடுக்க முடியுமா?

நான்கு கணவர்களுமே அந்தக் குழந்தைகள் தங்களுக்கு பிறந்ததில்லை என்று மறுத்து விட்டால் என்ன ஆகும். என்ன ஆதாரத்தின் அடிப்படையில் ஒரு கணவன் மீது பொறுப்பைச் சுமத்த முடியும். இதனால் வளரப் போகும் அந்தக் குழந்தையின் ஆரம்ப காலமே இருள் சூழ்ந்ததாக அல்லவா ஆரம்பமாகும். அப்படியானால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும். அது போல் ஒவ்ஒவாரு கணவவனும் தன்னுடையது என்று உரிமை கொண்டாடினால் ஆளுக்கு ஒரு பாகம் என அந்தக் குழந்தையைக் கூறு போட்டு பிரித்துக் கொடுக்க முடியுமா?

தந்தையின் சொத்து என்று பங்கு கேட்க முடியுமா?

ஒருவனுக்கு 4 மனைவியர் மூலம் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவன் இறந்த பின் அத்தனை குழந்தைகளுக்கும் தந்தை இன்னார் என்று தெரிவதால் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவனது சொத்தில் பங்கு கேட்க முடியும். 4 கணவருடையவளின் கணவர்களில் எவர் இறந்தாலும், அவளது பிள்ளைகள் தந்தையின் சொத்து என்று பங்கு கேட்க முடியுமா? எந்தப் பிள்ளையாலும் வாரிசு உரிமை கொண்டாட வழியில்லாமல் போகும். யாராலும் சொத்தில் பங்கு கேட்க முடியாது.

உலகத்தாருக்குள்ள நன்மைகளை புரியலாம்.

மேலும் ஒருவன் நாலு மனைவிகளை கட்டியாக வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். நான்கு திருமணங்களை செய்யுமாறு இஸ்லாம் கட்டளை எதுவும் பிறப்பிக்கவிi;லை. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி தேவை என்ற எதிர்பார்ப்புள்ளவர்களுக்கு அனுமதி மட்டுமே வழங்கியுள்ளது. ஏன் இந்த அனுமதி என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்தால். இதில் இந்த உலகத்தாருக்குள்ள நன்மைகளை புரியலாம். அது பற்றிய ஆய்வை எழுதுவதாக இருந்தால் இன்னும் நீண்டு கொண்டே போகும்.

'எய்ட்ஸ்' என்ற கொடிய நோய் யாரிடமிருந்து உற்பத்தியாகிறது.

நமது இந்த ஆக்கம், ''.. நாலு கணவன் சரியென்று ஆக வேண்டும்'' என்ற எதிர்பார்ப்பு சரியில்லை என்பதை விளக்குவதற்காகவே உள்ளது. எனவே ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை பெண்களுக்கு அனுமதிக்காமல் இஸ்லாம் தடை விதித்துள்ளது ஏன் என்பது சம்பந்தமான விளக்கத்தை மட்டுமே இதில் காண்போம். இன்று உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கொடிய நோய் ஷஎய்ட்ஸ். இந்த எய்ட்ஸ் என்ற கொடிய நோய் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும்தான் வருகிறது. அது மட்டுமல்ல பெண்ணிடமிருந்து ஆணுக்கும், ஆணிடமிருந்து பெண்ணுக்கும்தான் பரவுகிறது. ஆனால் இந்த 'எய்ட்ஸ்' என்ற கொடிய நோய் யாரிடமிருந்து உற்பத்தியாகிறது. இதுதான் சிந்திக்க வேண்டிய ஒன்று.

இதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களிடம் உறவு வைத்துள்ள ஆணிடமிருந்து இந்த ஷஎய்ட்ஸ் என்ற நோய் உற்பத்தி ஆகவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களிடம் உறவு வைத்துள்ள பெண்களிடமிருந்துதான் இந்த 'எய்ட்ஸ்' என்ற கொடிய நோய் உற்பத்தியாகிறது. இது மருத்துவ உலகம் கண்டுபிடித்துள்ள உண்மை. மருத்துவ உலகம் தந்துள்ள ஆய்வறிக்கை. இந்த நோய் முதலில் உருவானது அமெரிக்காவில்தான். காலம் காலமாக ஒரே நேரத்தில் 4 பெண்களை திருமணம் செய்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் அரபு நாடுகளில் அல்ல. இதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறேன். பெண்ணின் விந்து சக்தியும் ஆணின் விந்து சக்தியும் இணைவதால் எய்ட்ஸ் உற்பத்தி ஆகாது. ஒரு பெண்ணிடமுள்ள ஆணின் விந்து சக்தியுடன் இன்னொரு ஆணின் சக்தி இணைவதால்தான் எய்ட்ஸ் உற்பத்தியாகிறது.

பெண்கள் உடனடியாக மறுமணம் செய்யக் கூடாது.

ஒருவனுக்கு 4 மனைவியர் வரை அனுமதி அளித்துள்ள மாதிரி மனைவி இறந்து விட்டால், அல்லது விவாக ரத்து ஆகி விட்டால் உடனடியாக மறுமணம் செய்து கொள்ளவும் ஆண்களுக்கு அனுமதி அளித்துள்ளது இஸ்லாம். ஆனால் கணவன் இறந்து விட்டால் அல்லது விவாக ரத்து ஆகி விட்டால் உடனடியாக மறுமணம் செய்து கொள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை. பெண்கள் உடனடியாக மறுமணம் செய்யக் கூடாது என்று தடையும் விதித்துள்ளது. கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும் கர்ப்பமாக இல்லாவிட்டால் நான்கு மாதம் 10 நாட்களும் (இத்தா) கழியும் வரையிலும் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்கிறது இஸ்லாம்.

கற்பனைகளை விரிவுரைகளாக்கி வழங்கியவர்களும் உண்டு.

ஏன் இந்த சட்டம் என்பது சம்பந்தமாக பலரும் பலவிதமான விளக்கங்களை தந்துள்ளார்கள். ஷஇத்தா என்பதற்கு கரு அறியும் காலம் வரை காத்திருத்தல் என்பதுதான் பொருள் என விளக்கம் சொன்னவர்களும் உண்டு. அதற்காக கற்பனைகளை விரிவுரைகளாக்கி வழங்கியவர்களும் உண்டு. கருவில் உள்ளது முதல் கணவனின் குழந்தையா? இரண்டாவது கணவனின் குழந்தையா? என்ற பிரச்சனை வரும் என்று கூறி இதை அறியத்தான் ஷஇத்தா என்று கூறியும் விரிவுரை வழங்கி இருக்கிறார்கள்.

மார்க்க விளக்கம் போல் காட்டினர்.

கருவறையில் குழந்தை இருப்பதை அறிய ஒரு மாதம் போதுமே. அந்த மாதத்தில் மாத விலக்கு வந்தால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே. நான்கு மாதம் 10 நாட்கள் என்பது அதிகம் அல்லவா என்று கேட்டனர். இதற்கும் தங்கள் வாதத் திறமையை பயன்படுத்தி பதில் அளித்து மார்க்க விளக்கம் போல் காட்டினர்.

கருவறையில் குழந்தை இருக்கிறதா என்பதை அறிவதற்காக அல்ல.

கருவறையில் குழந்தை இருப்பதை அறியத்தான் என்றால் குழந்தை இருக்கிறது என்று அறிந்த பின் திருமணம் செய்ய அனுமதித்திருக்க வேண்டுமே. கர்ப்பமாகி இருந்தால் குழந்தை பிறக்கும் வரை இத்தா இருக்க வேண்டும் என்ற சட்டம் ஏன்? கணவனை பிரியும்போது முதல் மாதக் கருவை சுமந்திருந்தால் பிரசவிக்கும் வரை அதாவது 8 அல்லது 9 வரை இத்தா இருக்க வேண்டும் என்று உள்ளதே ஏன்? எனவே இதையெல்லாம் ஆய்வு செய்தால் இத்தா என்பது கருவறையில் குழந்தை இருக்கிறதா என்பதை அறிவதற்காக அல்ல என்பதை புரியலாம்.

'எய்ட்ஸ்' என்ற கொடிய நோய் உற்பத்தியாகாமல் தடுப்பதற்காகவே.

மனிதனின் உடலில் உணவாகச் செல்லும் ஒரு பொருளின் சக்தி அந்த உடலை விட்டு முழுமையாக காலியாக 40 நாட்களிலிருந்து 3 மாதங்கள் வரை ஆகும். இது பொருளைப் பொறுத்து வித்தியாசப்படும். உடலுறவின் மூலம் பெண்ணின் உடலுக்குள் செல்லும் ஆணின் விந்து அதன் சக்தியை முழுமையாக இழக்க எத்தனை மாதங்கள் வரை ஆகும். இதை ஆய்வு செய்தால் ஷஎய்ட்ஸ் என்ற கொடிய நோய் உற்பத்தியாகாமல் தடுப்பதற்காகவே இத்தா என்பதை அறியலாம். புகாரி அவர்களின் மீதமுள்ள 8 எதிர்பார்ப்புகளுக்கும் அடுத்த இதழில் பதில் இன்ஷh அல்லாஹ். வஸ்ஸலாம்.

அன்புடன்: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி
அன்புடன்: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

குறிப்பு:- பல சகோதரர்கள் தங்கள் மெயில்களுக்கு முன் போல் உடனுக்குடன் பதில் கிடைப்பதில்லை என்று வருத்தப்பட்டுள்ளனர். பலர் சமீப காலமாக சிறைவாசிகள் பெயரால் உலவி வரும் மெயில்கள் பற்றியே கேட்டுள்ளனர்.03-04-2006 திங்கள் கிழமை மாலை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கும், 19-04-2006 புதன் மாலை மதுரை மத்திய சிறைக்கும், 26-04-2006 புதன் மாலை கோவை மத்திய சிறைக்கும், 15-05-2006 செவ்வாய் மதியம் திருச்சி சிறைக்கும், 25-05-2006 வியாழன் காலை மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கும், 26-05-2006 வெள்ளி மாலை சென்னை மத்திய சிறைக்கும் சென்றேன். அங்குள்ள அல்-உம்மா, ஜிஹாத் கமிட்டி மற்றுமுள்ள சிறைவாசிகளை சந்தித்துப் பேசினேன். இந்த பணிகளாலும் இது போன்ற இன்னும் பல பணிகளாலும்தான் பதில் எழுத முடியவில்லை. சிறைவாசிகள் சம்பந்தமான சகோதரர்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கும் மொட்டைக் கடிதங்களுக்கும் விரைவில் பதில் தருவேன் இன்ஷh அல்லாஹ்.

Saturday, May 20, 2006

தமிழில் தொழுகை

உலகளாவிய மார்க்கத்தை ஒரு மொழிக்குள் நின்று பார்க்கக் கூடாது.

அன்புள்ள பசுலுள் இலாஹி அவர்களுக்கு எனது நண்பர் புகாரியின் கேள்விஙைதங்களுக்கு அனுப்பியுள்ளேன்.. தயவுசெய்து தகுந்த பதிலை தாருங்களேன்.
அன்புடன்.
ரசிகவ் ஞானியார்
---------- Forwarded message ----------From: Asan Buhari <buhari@gmail.com>Date: May 16, 2006 3:56 AM Subject: Re: A Prostitute (SALMA) and TMMKTo: ரிஷி ரிஸ்வான் <msmrishi@gmail.com>Cc: Mujib <mujibudeen@gmail.com>, sadayan sabu < sadayan.sabu@gmail.com>, "A.R. ZAREENA" <rzareena@gmail.com>, Asif Meeran AJ , Abul <abulfasal@gmail.com>, JAZEELA BANU <sjazeela@gmail.com>, gnaniyar rasikow mailto:rasikow@gmail.com

அன்பின் ரிஸ்வான்,
அமைதியும் அன்புமே ஆளட்டும் (அஸ்-அலை) எனக்கென சில எதிர்பார்ப்புகள் உண்டு. ஏனோ இவ்வேளையில் அதைச் சொல்ல வேண்டுமென விழைகிறேன்.
1. தொழுகை தமிழில் இருக்கவேண்டும்
2. ஒருவனுக்கு ஒரு மனைவி போதும். நாலு மனைவி சரியென்றால் நாலு கணவன்சரியென்று ஆகவேண்டும்.
3. ஓர் ஆணைப்போல ஒரு பெண் சாட்சி சொன்னால் அது செல்லுபடியாகவேண்டும்
4. ஆணைப்போல அனைத்தையும் பெண்ணும் கற்கவேண்டும்
5. ஆணின் சொத்துரிமைபோல பெண்ணுக்கும் வேண்டும்
6. பெண் படுக்கையறையில் தனக்கு விருப்பமில்லை என்று சொன்னால் அவள்நரகத்துக்குச் செல்லக்கூடாது.
7. சொர்க்கத்தில் கவர்ச்சியான வாலிபர்கள் ஆண்களுக்குக் கிடைப்பார்கள்என்று இருத்தல் கூடாது.
8. சொர்க்கத்தில் ஏழு கன்னியர் காத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுதல் கூடாது.
9. ஆணும் பெண்ணும் அறிவிலும் அன்பிலும் பண்பிலும் உரிமையிலும் இணையானவர்கள் என்பதை ஏற்கவேண்டும்.
10. காபிர்கள் என்று கேவலமாக எவரையும் எண்ணுதல் கூடாது.
அன்புடன் புகாரி
உலகளாவிய மார்க்கத்தை ஒரு மொழிக்குள் நின்று பார்க்கக் கூடாது.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 20-05-2006

உலகளாவிய மார்க்கத்தை ஒரு மொழிக்குள் நின்று பார்க்கக் கூடாது.

கண்ணியத்திற்குரிய ஞானியார் அவர்கட்கு கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. உங்கள் நண்பர் புகாரியின் கேள்விகளுக்கு பதில் தரும்படி எழுதி அவரது மெயிலை பார்வேடு செய்திருந்தீர்கள். இஸ்லாம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவது அரிது என்றிருந்தது. அது ஒரு காலம். இறையருளால் இப்பொழுது ஏராளமான இஸ்லாமிய இணைய தளங்கள் வந்து விட்டன. அவற்றில் பல்வேறு விதமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் விளக்கங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் பதில் தரும்படி நீங்கள் எனக்கு எழுதியுள்ளதால் எனக்குத் தெரிந்த விளக்கங்களை விரிவாகவே தருகிறேன். இன்ஷhஅல்hஹ்.

நடை முறைக்கு சாத்தியமாகாது.

சகோதரர் புகாரி அவர்கள் எழுதியுள்ள 10 விஷயங்களை அவர் கேள்விகள் என்று குறிப்பிடவில்லை. 10 விஷயங்களையும் அவரது எதிர் பார்ப்புகள் என்றே குறிப்பிட்டுள்ளார். கேள்விகள், சந்தேகங்கள், விமர்சனங்கள் புகாரி அவர்கள் குறிப்பிட்டுள்ள மாதிரியான எதிர்பார்ப்புகள் எதுவாக இருந்தாலும் அவரவர் வாழும் சூழ்நிலைகளால்தான் ஏற்படுகின்றன. கைர். சகோதரர் புகாரி அவர்களின் 1.ஆவது எதிர் பார்ப்பான் ''தொழுகை தமிழில்தான் இருக்க வேண்டும்'' என்பதை எடுத்துக் கொள்வோம். இது போன்றவற்றை படிப்பதற்கும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் கவர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் நடை முறைக்கு சாத்தியமாகாது.

தாய் (தமிழ்) மொழியை தொழுகையில் மட்டும் ஏன் தவிர்க்கிறது?

இஸ்லாம் கூறும் வணக்கங்களில் தொழுகையில் மட்டும்தான் தாய் (தமிழ்) மொழி தவிர்க்கப்படுகிறது. மற்றபடி வேண்டுதல்கள் (பிரார்த்தனைகள்) யாவையும் தாய் (தமிழ்) மொழியில் கேட்க தடை இல்லை. இன்னும் சொல்லப் போனால் சில வேண்டுதல்களை தாய் (தமிழ்) மொழியில்தான் கேட்க வேண்டும் என்கிறது இஸ்லாம். அப்படிப்பட்ட இஸ்லாம் தாய் (தமிழ்) மொழியை தொழுகையில் மட்டும் ஏன் தவிர்க்கிறது? சிந்தித்தால் விளங்கலாம்.

மளையாளிகளுக்கு வடத்தே இடத்தே என கூற வேண்டும்.

உதாரணத்திற்கு இந்திய ராணுவத்தை எடுத்துக் கொள்வோம். இந்தியாவின் ராணுவத்தில் தமிழர்களுக்கு தமிழில்தான் ஆணைகளை கூற வேண்டும் என்று நாம் எதிர்பார்த்தால் மளையாளிகளுக்கு மளையாளத்தில்தான் ஆணைகளை கூற வேண்டும் என்று மளையாளிகளும் எதிர்பார்ப்பார்கள். எனவே இந்த எதிர்பார்ப்பையும் ஏற்கத்தான் வேண்டும். இதை ஏற்றால் லெப்ட் ரைட் என்று கூறாமல் தமிழர்களுக்கு வலது இடது என கூற வேண்டும். மளையாளிகளுக்கு வடத்தே இடத்தே என கூற வேண்டும். இப்படியே போனால் நாட்டிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் வரும்.

மொழி வாதம் பேசியே நின்று விடும்.

அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் என்ற பெயரில் ராணுவ ஆணைகளை அமைத்தால் என்ன ஆகும்? ஒரு தலைமையின் கீழ் ஓர் ஆணையின் கீழ் இல்லாத இப்படி உருவாக்கப்பட்ட ராணுவம் போர் களங்களுக்கு சென்றால் என்ன ஆகும்? அனைத்து மொழிகளிலும் ஆணைகளை சொல்லி முடிப்பதற்குள் எதிரி நாட்டு ராணுவம் நம் நாட்டுக்குள் புகுந்து விடும். அல்லது போர் களங்களுக்கு செல்லாமலே கதை முடிந்து விடும். அதாவது ஒவ்வொரு மொழிக் குழுவும் அந்த மொழிக்காரர்களை முதலில் அனுப்பு, இந்த மொழிக்காரர்களை முதலில் அனுப்பு என்று மொழி வாதம் பேசியே நின்று விடும்.

எங்கள் மொழியில்தான் ஆணைகளை கூற வேண்டும்.

எத்தனையோ விஷயங்களில் மாநிலத்துக்கு தகுந்தவாறு மொழி வாதம் பேசி வரும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இவர்களில் எந்த அரசியல்வாதியும் ராணுவத்தில் எங்கள் மொழியினருக்கு எங்கள் மொழியில்தான் ஆணைகளை கூற வேண்டும் என்ற வாதம் வைக்கவில்லையே ஏன்? குறைந்த பட்சம் தங்கள் மாநில காவல் துறையிலாவது எங்கள் மொழியில்தான் ஆணைகளை கூற வேண்டும் என்ற வாதம் வைத்தார்களா? இல்லையே.

முட்டாள் அரசியல்வாதிகள் கூறினாலும் கூறலாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எங்கும் தமிழ் எதிலும் என்று கூறுபவர்களை பெருவாரியாக கொண்டதுதான் தமிழ்நாடு. இந்தக் கோஷத்திற்கு சொந்தக்காரர்கள்தான் 35 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார்கள். தெலுங்கு தேசம் என்ற பெயரில் கட்சி கண்டு ஆட்சி அமைத்தவர்கள் ஆந்திராவில் உண்டு. கன்னடக் கருணாநிதி என்றழைக்கப்பட்ட வாட்டாள் நாகராஜை கண்டதுதான் கர்நாடகம். இப்படி மொழி உணர்வுகளைக் கொண்ட எல்லா மாநிலத்திலும் போலீஸ் ஆணைகளுக்கு இன்றும் லெப்ட் ரைட் தான் பயன்படுத்தப்படுகிறது. இதை ஏன் மாநிலத்துக்கு தகுந்தவாறு மாற்றுமாறு யாரும் கூறவில்லை. சுயநல மிக்க முட்டாள் அரசியல்வாதிகள் கூறினாலும் கூறலாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முன்னுதாரணமே இஸ்லாம்தான்.

இஸ்லாம் காட்டிய தொழுகை முறைதான்.முட்டாள் அரசியல்வாதிகள் கூற்றுப்படி போலீஸ் ஆணைகளை மாநில மொழியில் அமைத்தாகி விட்டது என வைத்துக் கொள்வோம். மாநில மொழியில் பழகிய பல்வேறு மாநில போலீஸ்கள் கலவரம் போன்ற அவசர தேவைக்கு ஒரு மாநிலத்திற்கு வந்தால் என்ன ஆகும். ஒவ்வொரு மொழியினருக்கும் அவரவர் மொழியில் ஆணையிட வேண்டும். அதற்குள் கலவரக்காரர்கள் காவல் துறையை மொழி வாரியாக காலி செய்து விடுவார்கள். அதனால்தான் பல மொழிக்காரர்கள் இடம் பெறக் கூடிய ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் ஒரு மொழி மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன்னுதாரணமே இஸ்லாம்தான். இஸ்லாம் காட்டிய தொழுகை முறைதான் இந்த ஒருமைப்பாட்டையும் கட்டுக்கோப்பையும் உலகுக்கு கற்றுக் கொடுத்தது.

உலகுக்கு ஏராளமான பயன்களும் படிப்பினைகளும் உள்ளன.

முஸ்லிம்கள் தொழும்போது அணி வகுத்து நிற்பதைப் பார்த்துதான் அணி வகுப்பு முறையை உலகம் கண்டது. ஒருவர் முன் நிற்க அவர் கூறும் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அனைவரும் குனிவது நிற்பதை கண்டுதான் ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் ஒரு ஆணை முறை வந்தது. இஸ்லாம் வகுத்து தந்துள்ள ஒவ்வொரு வணக்க முறைகளிலும் உலகுக்கு ஏராளமான பயன்களும் படிப்பினைகளும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் பல மொழியினராக உள்ள மனிதர்கள் ஒரு மொழிக்கு கட்டுப்பட்டு இயங்குவது என்ற முறை.

தமிழ்நாட்டில் பாங்கு அழைப்பு தமிழில் இருந்தால் என்ன?
தொழுகை நேரம் வந்ததும் பாங்கு, அதான் என்ற அழைப்பு விடுக்கப்படுகிறது. இது தொழுகை நேரம் வந்து விட்டது என்பதை மட்டும் அறிவிக்கவில்லை. ஜமாஅத்தாக (சேர்ந்து) தொழ வாருங்கள். அதற்கான பள்ளிவாசல் இங்கு இருக்கிறது என்பதையும் பறை சாற்றுகிறது. ''தொழுகை தமிழில்தான் இருக்க வேண்டும்'' என்று எதிர் பார்ப்பவர்கள் தமிழகப் பள்ளிவாசல்களில் தொழுகை அழைப்பு தமிழில்தான் இருக்க வேண்டும் என்றும் எதிர் பார்க்கலாம். புரியாத மொழியில் அழைப்பதை விட புரிகின்ற மொழியில் அழைக்க வேண்டும் என்றும் எதிர் பார்க்கலாம். அரபு நாட்டிலுள்ளவர்களுக்கு அரபு மொழியில் அழைப்பது சரி. தமிழ்நாட்டில் பாங்கு அழைப்பு தமிழில் இருந்தால் என்ன? என்றும் கேட்கலாம். எனவே இதைப் பற்றியும் விளங்க வேண்டும்.

அந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களுடன் சேர்ந்து தொழத்தான் விரும்புவார்.

இஸ்லாம் ஏக இறைவன் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் என்ற இறை வசனத்தை ஏற்காதவர்கள் உலகில் உண்டு. அவர்கள் கூட இஸ்லாம் உலகளாவிய மார்க்கம் என்ற உண்மையை உணர்ந்து இருக்கிறார்கள். அந்த இஸ்லாம் கற்றுத் தந்த வணக்கங்களில் கூட்டாகச் செய்ய வலியுறுத்தப்பட்ட வணக்கம்தான் தொழுகை. ஜமாஅத்தாக (கூட்டாக) தொழுகை நடந்து கொண்டிருக்கும்பொழுது தனித்து தொழுவது ஹராம் என தடை செய்துள்ளது இஸ்லாம். தனித்து தொழுவதை விட ஜமாஅத்தாக தொழும்போது 27 மடங்கு நன்மை அதிகம் எனவும் இஸ்லாம் கூறுகிறது. எனவே இந்த 27 மடங்கு நன்மை பெற விரும்பும் முஸ்லிம் எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களுடன் சேர்ந்து தொழத்தான் விரும்புவார்.

ஓட்டுப் பிச்சைக்காக ஏதோ ஒரு கட்சிக்காரன் மைக் போட்டு அழுகிறான்.

சேர்ந்து தொழ வேண்டும் என்ற எண்ணம் உடைய ஒரு அமெரிக்கர் இந்தியா வந்துள்ளார். அல்லது ஒரு இந்தியர் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். அல்லது நமது நாட்டிலேயே தனது மாநில மொழி மட்டுமே தெரிந்த முஸ்லிம் இன்னொரு மாநிலத்துக்கு செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். தொழுகை நேரம் வந்ததும் அந்த பகுதி மொழியில் தொழுகை அழைப்பு விடுக்கப்படுகிறது. அந்த பகுதி மொழி தெரியாதவர் என்ன நினைப்பார். தேர்தல் நேரமாக இருந்தால் ஓட்டுப் பிச்சைக்காக ஏதோ ஒரு கட்சிக்காரன் மைக் போட்டு அழுகிறான் என்றே எண்ணுவார்.

உலக நாடுகளின் தேசிய கீதங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது.

அதனால் தொழுகை நேரம் வந்து விட்டதை அவர் உணர மாட்டார். அந்த பகுதியில் பள்ளிவாசல் உள்ளதை அறிய மாட்டார். இஸ்லாம் காட்டியுள்ள ஒரே அழைப்பு முறையால் உள்ள பயன். மொழி விளங்குகிறதோ இல்லையோ, இது முஸ்லிம்களின் தொழுகை அழைப்பு என முஸ்லிம் அல்லாதவர்களும் விளங்கி விட்ட நிலை. எனவே எந்த நாட்டவரும் எந்த நாட்டுக்குச் சென்றாலும் இது தொழுகை அழைப்பு என்பதை உணர்வார். அருகில் பள்ளிவாசல் உள்ளதை எளிதில் அறிவார். இந்த பாங்கு முறைதான் இன்று உலக நாடுகளின் தேசிய கீதங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது.

தேசிய கீதம் தாய் (தமிழ்) மொழியில் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டையும் கட்டுப்பாட்டையும் கருத்தில் கொண்டு மொழி உணர்வு பாராமல் செயல்படுத்தும் செயல்களில் தேசிய கீதமும் ஒன்று. இதில் நமது சொந்த எதிர்பார்ப்புகளுக்கும் மொழி உணர்வுளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒருமைப்பாட்டை கட்டுக் கோப்பை கெடுத்து விடக் கூடாது என்பதில் ஒவ்வொரு நாட்டின் குடி மகனும் உறுதியாக உள்ளான். அதனால்தான் நமது நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் இருந்தும் வங்காள மொழியில் உள்ள தேசிய கீதத்தை அனைத்து மொழியினரும் ஏற்று இருக்கின்றனர். மனித உணர்வு நமது தேசிய கீதம் தாய் (தமிழ்) மொழியில் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கும். நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக இந்த எதிர்பார்ப்பை ஒதுக்கித் தள்ளி விடுகிறோம். நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக நமது எதிர்பார்ப்பை புறந் தள்ளி விட்டு அந்நிய மொழியை ஏற்றுக் கொள்கிறோம்.

நமது மொழி எதிர்பார்ப்பை திணிக்க எண்ணக் கூடாது.

அது போல்தான் உலக ஒருமைப்பாட்டுக்காக தொழுகையிலும் பாங்கிலும் நமது எதிர்பார்ப்பை புறந் தள்ளி விட வேண்டும். இதனால் உலகளாவிய ஒற்றுமை என்ற நன்மை ஏற்படுகிறது. இனம், குலம், நிறம், நாடு, என பாகுபாடு பாராமல் எல்லா பிரிவுகளையும் மறந்து உலக அளவில் மனிதர்களை ஒன்றிணைப்பது தொழுகை. மொழி உட்பட அனைத்து வேறுபாடுகளையும் மறந்து நாம் அனைவர்களும் மனிதர்கள் என்ற ஒருமைப்பாடு இதன் மூலம் நிலை நிறுத்தப்படுகிறது. எனவே அதில் நமது மொழி எதிர்பார்ப்பை திணிக்க எண்ணக் கூடாது.

மொழி தெரிந்தவர் குனிவார். மொழி தெரியாவர் பணிவார்.

பள்ளிவாசல்களில் தொழும்போது அங்கே நில்லுங்கள் என்றோ குனியுங்கள் என்றோ சொல்லப்படுவதில்லை. அல்லாஹு அக்பர் என்றதும் கட்டுக் கோப்பாக அணி வகுத்து நிற்பார்கள். அல்லாஹு அக்பர் என்றதும் குனிந்து நிற்பார்கள். ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்றதும் நிமிர்ந்து நிற்பார்கள். அல்லாஹு அக்பர் என்றதும் பணிந்து தரையில் சாஷ;டாங்கம் செய்வார்கள். அல்லாஹு அக்பர் என்றதும் எழுந்து உட்காருவார்கள். இப்படி அனைத்தும் குறிப்பிட்ட வார்த்தையின் கீழ் கட்டுக் கோப்பாக நடக்கும். இந்த யூனிபாம் முறை இல்லாமல் அவரவர் மொழியில் சொன்னால் என்ன ஆகும். மொழி தெரிந்தவர் குனிவார். மொழி தெரியாவர் பணிவார். கட்டுக் கோப்பு சீர் குலையும்.

இப்படி ஆய்வு செய்வது பயனாக இருக்கும்.

எனவே உலகளாவிய மார்க்கமான இஸ்லாத்தை ஒரு மொழிக்குள் நின்று பார்க்கக் கூடாது. இந்த தொழுகை முறை மூலம் இஸ்லாம் உலகுக்கு யூனிபாம் - கட்டுக் கோப்பு முறையையும் கற்றுத் தந்துள்ளது. ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்றும் கற்றுத் தருகிறது. எனவே நமது எதிர் பார்ப்புகளை இஸ்லாத்தில் நுழையச் செய்வது எப்படி என்று ஆய்வு செய்வது சரி அல்ல. அதைவிட இந்த முறைகளை இஸ்லாம் ஏன் அமைத்து தந்துள்ளது என்று ஆய்வு செய்ய வேண்டும். இப்படி ஆய்வு செய்வது பயனாக இருக்கும். புகாரி அவர்களின் மற்ற 9 எதிர்பார்ப்புகளுக்கு அடுத்த இதழில் பதில் இன்ஷh அல்லாஹ். வஸ்ஸலாம்.

அன்புடன்: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி