பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 20-09-2006
உறவுகளை வெட்டி (முறித்து) வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. உண்மையை உரத்துக் கூறும் உமர் என்ற பெயரில் மெயில்கள் அனுப்பி வரும் முத்துப் பேட்டை பரகத் அலி அவர்களே! உங்களைப் போன்றவர்கள் செய்து வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதில் அளிக்கும் மார்க்கக் கடமையை செய்து வந்திருக்கிறோம். அது போல் உபதேசம் என்ற மார்க்கக் கடமையை இந்த மெயில் மூலம் செய்கிறோம்.
நீங்கள் செய்துள்ள தில்லுமுல்லுகளை பட்டியலிடுவதற்காக இதை எழுதவில்லை.
வார்த்தைக்கு வார்த்தை பதில் எழுதி விட்டது போல் எண்ணிக் கொண்டு எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக என்ன என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த வழியில் இலங்கை டூ காத்தான்குடி என்ற தலைப்பில் மெயில் அனுப்பியுள்ளீர்கள். அதிலுள்ள உங்கள் அறியாமையை நீங்கள் செய்துள்ள தில்லுமுல்லுகளை பட்டியலிடுவதற்காக இதை எழுதவில்லை. பலஹீனத்தினால் இப்படி எழுதி இருக்கிறேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்து விடக் கூடாது. அதனால் அந்த மெயிலில் நீங்கள் செய்துள்ள தில்லுமுல்லுகளில் ஒன்றை மட்டும் சுட்டிக் காட்டி விட்டு இந்த மெயிலின் நோக்கத்திற்கு வருகிறேன்.
அந்நஜாத் வெளிவர காரணமாக இருந்தது.
'இலங்கையைப் பொறுத்த வரை ஏகத்துவ எழுச்சி என்பது வான்சுடர் என்ற பத்திரிக்கை வாயிலாக நிஸார் குவ்வத்தி என்ற அறிஞர் மூலம் ஏற்பட்டது. அவர் இறந்ததும் தவ்ஹீத் இறந்தது என இலங்கையிலுள்ள எல்லா சுன்னத் ஜமாஅத் பள்ளி குத்பாக்களிலும் பேசினார்கள். அந்த அளவுக்கு இலங்கையில் தவ்ஹீத் தாக்கத்தை ஏற்படுத்தியது நிஸார் குவ்வத்திதான். அவர் ஏற்படுத்திய அந்த தாக்கம்தான் தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி ஏற்பட வாயிலான அந்நஜாத் வெளிவர காரணமாக இருந்தது' என்று நான் எழுதி இருந்தேன்.
இடைச் செருகல்கள் செய்து எழுதி வாதம் வைத்துள்ளீர்கள்.
அதை உங்கள் மெயிலில் வான்சுடர் என்ற பத்திரிக்கையின் வாயிலாக நிஸார் குவ்வத்தி என்ற அறிஞர் தான் ஏகத்துவத்தை இலங்கையில் முதன் முதலாக போதித்தார் அவர் இறந்ததும் தவ்ஹீதும் இறந்து விட்டது என்று இன்றளவும் இலங்கையின் சுன்னத் வல் ஜமாத்துடைய எல்லாப் பள்ளிகளிலும் குத்பாக்களில் கூறுகிறார்கள் என்றும் கூறுகிறார். என்று இடைச் செருகல்கள் செய்து எழுதி வாதம் வைத்துள்ளீர்கள்.
அதே சித்து வேலையைத்தான் நீங்களும் செய்து வருகிறீர்கள்.
இப்படி இல்லாத ஒன்றை இட்டுக் கட்டி இடைச் செருகல் செய்வது. அந்த இடைச் செருகலை பயன்படுத்தி வாதம் வைத்து எதிர் தரப்பை பொய்யர்களாக ஆக்குவது. சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லி வாதம் வைப்பது. அந்த பொய்யான வாதத்தை வைத்து எதிர் தரப்பினரை பொய்யர்கள் என சித்தரிப்பது. இதுவெல்லாம் அந்நஜாத் அபுஅப்துல்லாஹ் அவர்கள் விஷயம் முதல் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வரை அண்ணன் பி.ஜெ. செய்து வரும் சித்து வேலை. அதே சித்து வேலையைத்தான் நீங்களும் செய்து வருகிறீர்கள். அதை எனது எழுத்திலும் செய்து காட்டியுள்ளீர்கள்.
அந்த ஆயத்து ஹதீஸ்களின் உபதேசம் யாருக்கு?
விஷயத்திற்கு வருவோம். இந்த நிலையில் நான் செத்து விட்டால் உலகம் இருக்கும். நீங்கள் செத்து விட்டாலும் உலகம் இருக்கும். ரசூல்(ஸல்) அவர்கள் இறந்து 14 நூற்றாண்டுகள் ஆன பின்பும் உலகம் இருக்கிறது. எனவே நாம் செத்து விட்டால் அடுத்த நிலை என்ன என சிந்தியுங்கள். உங்களை மட்டும் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் அனுப்பும் மெயில்களில் பெரும்பாலும் ஆயத்து ஹதீஸ்களை எழுதுகிறீர்கள். அந்த ஆயத்து ஹதீஸ்களின் உபதேசம் யாருக்கு? ஊருக்கு மட்டும்தானா? உங்களுக்கு இல்லையா?
மூன்று முறை (வானவர்களுக்கு) கட்டளையிடப்படுகின்றது.
''திங்கள் மற்றும் வியாழன் தோறும், சுவன வாயில்கள் திறக்கப்படுகின்றன. (அந்நாட்களில்) இறைவன் தனக்கு இணைக்கற்பிக்காத அனைவரையும் மன்னிக்கின்றான் ஆனால் எவர் தன் சகோதரருடன் வெறுப்புடனும், பகைமையுடனும் இருக்கின்றாரோ அவரைத்தவிர. ''அவ்விருவரும் சமாதானமாகும் வரை தாமதியுங்கள்'' என்று மூன்று முறை (வானவர்களுக்கு) கட்டளையிடப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:- நூல்: முஸ்லிம்
அந்த வாதம் அல்குர்ஆனின் பார்வையில் தவறு.
அபுஅப்துல்லாஹ் அவர்கள் துவங்கி இன்று வரையுள்ள யாருடனாவது அண்ணன் பி.ஜெ. சமாதானமாக ஆகி இருக்கிறாரா? ஹதீஸில் தன் சகோதரருடன் என்றுதான் உள்ளது. எனவே அது உடன் பிறந்த சகோதரர்களைத்தான் குறிக்கும். அபுஅப்துல்லாஹ், இக்பால் மதனி, மைதீன் உலவி, கமாலுத்தீன் மதனி, ஹாமித் பக்ரி, ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி போன்றவர்களை குறிக்காது என்று கூட அண்ணன் வாதம் வைக்கலாம். அந்த வாதம் அல்குர்ஆனின் பார்வையில் தவறு. இதோ அதற்குரிய ஆதராம்.
உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்.
''நிச்சயமாக இறைநம்பிக்கையாளர்கள், ஒருவர் மற்றவருக்குச் சகோதரர்கள் ஆவார்கள். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளைச் சீர்படுத்துங்கள். மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் மீது கருணை பொழியப்படும்'' அல்குர்ஆன் 49:10. இந்த வசனத்திற்கு அண்ணன் பி.ஜெ. அவர்களின் மொழி பெயர்ப்பிலிருந்தும் தருகிறேன். ''நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்''
எச்சரிக்கைகள்.
''உறவுகளை வெட்டி (முறித்து) வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்'' என்பது நபி (ஸல்) அவர்களது எச்சரிக்கையாகும். (முஸ்லிம்) ''தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள். அவர்களுக்கே கடும் வேதனை உண்டு. இது அல்லாஹ்வின் எச்சரிக்கையாகும். (அல்குர்ஆன் 3:105)
போதகர் பி.ஜெ. போக மறுத்து விட்டார்.
இன்னும் இது போன்றுள்ள ஆயத்துகளையும் ஹதீஸ்களையும் எழுதியவர்கள்தான் பேசியவர்கள்தான் அண்ணன் பி.ஜெ. அணியினர். இதுவரை யாருடனாவது உறவாக ஆனார்களா? சென்னையில் பி.ஜெ. உடல் நிலை சரி இல்லாது இருந்த போது நாகர்கோயிலிருந்த கமாலுத்தீன் மதனி சென்னை வந்து பி.ஜெ.யைப் பார்த்து உடல் நிலை விசாரித்தார் கமாலுத்தீன் மதனி ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்தார். அந்த நேரத்தில் குமரி மாவட்டம் வேர்க்கிளம்பியில்தான் பி.ஜெ. 2 நாள் தங்கி இருந்தார். போய் விசாரித்து விட்டு வாருங்கள் என்று பாமரர்கள் சொன்னார்கள். படித்த போதகர் பி.ஜெ. போக மறுத்து விட்டார்.
அவர்களில் யாருமே இறை மார்க்கமாம் இஸ்லாத்தை பின் பற்றவே இல்லை.
பி.ஜெ. தாயார் இறந்து விட்ட துக்க நிலையில் வீடு தேடிப் போய் விசாரிக்கச் சென்றார் ஜவாஹிருல்லாஹ். கதவைப் பூட்டி வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார் அண்ணன் பி.ஜெ. எந்த ஆயத்து ஹதீஸ்களின் அடிப்படையில் பி.ஜெ. இவ்வாறெல்லாம் நடந்து கொண்டார்? முஸ்லிம் அல்லாதவர்கள் சமீபத்தில் இறந்து விட்ட வலம்புரி ஜாண் உட்பட பலர் இஸ்லாமிய பிரச்சார மேடைகளில் பேசி இருக்கிறார்கள். சாதாரண கூட்டங்களில் பேசவில்லை. மிகப் பிரம்மாண்டமானக் கூட்டங்களில் பேசி இருக்கிறார்கள். மிகப் பிரம்மாண்டமாகப் பேசி இருக்கிறார்கள். இறை மார்க்கம் இஸ்லாம்தான் என புத்தகங்களும் எழுதி இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாருமே இறை மார்க்கமாம் இஸ்லாத்தை பின் பற்றவே இல்லை. அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் பி.ஜெ. அணியின் சொல்லுக்கும் செயலுக்கும் என்ன வித்தியாசம்.
ஹதீஸ் அடிப்படையில் நீங்கள் சமாதான முயற்சி செய்து பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களைப் பார்த்து கேட்டார்கள். ''(நஃபிலான - உபரியான) நோன்பு நோற்பது, தர்மம் கொடுப்பது மற்றும் தொழுவதை விட அதிக நன்மையை பெற்றுத்தரும் நற்செயல் ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா'' என்று. அதற்கு அவர்கள் ஆம் என்றனர். ''அதுதான் மக்கள் மத்தியில் சமாதானம் செய்து வைப்பது. ஏனெனில் மக்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் பிளவுகளை ஏற்படுத்துவது மழிப்பதற்கு சமமாகும். தலைமுடிகளை மழிப்பதை நான் சுட்டிக்காட்ட வில்லை. மாறாக இது மார்க்கத்தையே மழித்து (அழித்து) விடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதி இந்த ஹதீஸ் அடிப்படையில் நீங்கள் சமாதான முயற்சி செய்து பாருங்கள்.
இது இறைவனும் இறைத் தூதரும் இட்டுள்ள கட்டளை.
பி.ஜெ.யின் சமாதான அறிக்கைகள் எப்படிப்பட்டது என்பதை பி.ஜெ. த.மு.மு.க.வில் இருக்கும்கொழுதே எழுதி இருக்கிறேன். என்னதான் மனக் கசப்பானாலும் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதனால் பகைமை பாராட்ட அனுமதிக்கப்பட்ட நாட்கள் மூன்றுதான். பிறகு ஸலாமைக் கொண்டு சமாதானம் ஆகி விட வேண்டும். இது இறைவனும் இறைத் தூதரும் இட்டுள்ள கட்டளை. த.மு.மு.க.வினருக்கு ஸலாம் சொல்லாதே! ஸலாம் சொன்னால் பதில் சொல்லாதே!! இது பி.ஜெ. அணியின் பிரச்சாரம். இது யாருடைய கட்டளைகளுக்கு எதிரான பிரகடனம்? அல்லாஹ்வும் ரசூலும் ஒரு வழியைக் காட்டி இருக்க அதற்கு நேர் மாற்றமான வழியைக் காட்டுபவன் யார்? சிந்தியுங்கள் இன்ஷh அல்லாஹ் நேர் வழி பெறுவீர்கள். நேர்வழி பெற துஆச் செய்து விடை பெறுகிறேன். வஸ்ஸலாம்.
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி