அண்ணன் அன்று எழுதியது வேத வாக்கா? இன்று ஓட்டுப் பிச்சைக் கேட்டு தெருத் தெருவாய் சொன்னது வேத வாக்கா?
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
ஏ தாழ்ந்த தமிழகமே!
தேர்தல் வரப்போகிறது! நம்மை ஆளப்போகின்றவர்களை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்! தேர்ந்தெடுப்பதற்கான தகுதிகளை நாம் முன்பே நிர்ணநித்து விட்டோம். கைலியை மடித்துக் கட்டத் தெரிய வேண்டும்! தேவைப்பட்டால் அதை சட்டசபையில் அவிழ்த்துக் காட்டவும் தெரிந்திருக்க வேண்டும்! கட்டிப்புரளத் தெரிய வேண்டும்! குத்துச்சண்டையும் தெரிய வேண்டும்! பேப்பர் வெயிட்டுகளை எடுத்துக் குறிபார்த்து எறியத் தெரிய வேண்டும் சிறப்புத் தகுதியாக அகராதியில் இல்லாத வார்த்தைகளில் அதிக புலமை இருக்க வேண்டும். இந்தத் தகுதி உள்ளவர்களை நம்மை ஆள்வதற்கு நாம் தேர்வு செய்யப் போகிறோம். நமக்குதான் இதில் முன் அனுபவம் நிறைய உண்டே!
நம்மை ஆளப் போகிறவர்கள் தங்கள் தகுதிகளை இப்பொழுதே மேடைகளில் காட்டத் துவங்கிவிட்டனர். 'உனக்கு நடிக்கத் தெரியுமா? பாட்டுப்பாடத் தெரியுமா? வசனம் எழுதத் தெரியுமா? அடேய் நீ தமிழனா? உனக்கு ஆங்கிலம் பேசத் தெரியுமா? குரங்கு மூஞ்சி! உன்னிடம் அழகு இருக்கிறதா? பனைமரம்! வழுக்கைத்தலை! கோட்டான்! என்றெல்லாம் அரசியல் மேடைகள் களைகட்டிவிட்டன.
'அண்ணாவின் ஆட்சியை அமைப்போம்! புரட்சித் தலைவர் ஆட்சித்தான் அமையும்! காமராஜரின் ஆட்சியை அமைத்தே தீருவோம்!' என்று எதிர்கால திட்டங்களை எடுத்துவைக்க துவங்கிவிட்டனர். ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி போடுவோம் என்று அரியணை ஏறி மூன்றுபிடி அரிசி கூட தரமுடியாதவர்களின் ஆட்சியை அமைக்கப் போகிறார்களாம். தாய்மேல் ஆணையிட்டு கள்ளுக்கடைகள் மூடி, பின்னர் திறந்து, பின்னர் மூடி, பின்னர் தளர்த்தி மொத்த சமுதாயத்தையும் முட்டாளாக்கியவர்களின் ஆட்சியை அமைக்கப் போகிறார்களாம். அவுன்ஸ் கணக்கில் அரிசி வழங்கி, போதாவிட்டால் எலிக்கறியைச் சாப்பிடுங்கள் என்று போதித்த புண்ணியவான்களின் ஆட்சியை அமைக்கப்போகிறார்களாம். செத்து விட்டவர்கள் செய்த அக்கிரமங்களை மக்கள் மறந்திருப்பார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
எனக்கு ஆட்சியில் பங்கு உண்டா? வாரியத்தில் இடமுண்டா? கொள்ளை அடிப்பதில் எனக்கு எவ்வளவு? என்ற பேரங்களை சமுதாயக் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. சமுதாயமாவது! மண்ணாங் கட்டியாவது. பதவி நாற்காலியில் அமர வேண்டுமென்ற இலட்சியம் (?) என்னாவது?
இப்படி களைகட்டிவிட்ட 'தேர்தல்' முடிந்தபின் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடத்தான் போகிறது. எல்லாரும் எல்லாமும் பெறத்தான் போகிறோம், இப்படித்தான் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
தேர்வு செய்து அனுப்புகின்ற நம்மைவிட, அரசியல்வாதிகள் ஒழுக்கத்திலோ, நேர்மையிலோ எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் இல்லை என்பதை இனியேனும் உணரமறுத்தால் 'ஏ தாழ்ந்த தமிழகமே!' என்று உலகம் காரி உமிழ்வதை எவரும் தடுக்க இயலாது.
நன்றி: 1988 மே அல் ஜன்னத் நுழைவாயில்!
இதனை கம்யூட்டரில் டைப் செய்து அனுப்பித் தந்த செல்வன் முஃமின் பில்லாஹ் அவர்களுக்கு அல்லாஹ் அவர்களுக்கு புரிவானாக. ஆமீன்.